இம்மாதிரி பக்தர்களுக்காகவே நாட்டின் பல பகுதிகளில் ‘ஸ்ரீநிவாஸர் திருக்கோயில்கள்’ பல அமைந்துள்ளன. தமிழகத் தலைநகரான சென்னை நகரிலேயே பல ஸ்ரீநிவாஸர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் புரசைவாக்கத்தில், வெள்ளாளத் தெருவில் அமைந்திருக்கும் ஓர் திருக்கோயில்.
‘புரசைவாக்கம்’ முன்னதாக ‘பலசெபுரி’ என்ற பெயருடன் இருந்தது. இங்கு வசித்து வந்த ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களால் அமைக்கப்பட்ட இக்கோயில் சுமார் 400 வருட வரலாறுடையது. எத்தனையோ அற்புதங்களை இந்த ஸ்ரீநிவாஸர் நிகழ்த்தியுள்ளார். இவை ஒரு புறமிருக்க, இந்தக் கோயில் உருவான வரலாற்றை காண்போம்.
இங்கு வாழ்ந்து கொண்டிருந்த ஓர் திருமாலடியாரின் கனவில் திருவேங்கடவன் தோன்றினார்; தனக்கு ஒரு கோயில் இப்பகுதியில் அமைக்கச் சொல்லி அருள் வாக்களித்தார்.
கனவு கலைந்து விழித்தெழுந்த அவ்வடியார், கனவைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தபோது அவரருகில் ஓர் மணி (ஆலயமணி-பூஜைக்கு உபயோகப்படும் அளவில்) இருந்ததைக் கண்டு வியந்தார்; ‘கனவிற்கும் இந்த மணிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?’ என்பதைப் பற்றியும் யோசிக்கலானார். தனக்குத் தெரிந்த ஒரு வயோதிக அந்தணரிடம் விவரத்தைக் கூறினார்.
அப்பெரியவர் ”திருவேங்கடமுடையானின் ‘மணி’யின் அம்சமாகப் பிறந்த சுவாமி தேசிகனின் அருளால் கோயில் அமைக்கலாம்” என்று கூறினார். அதன்படி, கனவில் பெருமாளை தரிசித்த அடியவர், தற்போது இருக்கும் இடத்தில் ஸ்ரீநிவாஸருக்கு கோயில் எழுப்பினார்.
ஸ்ரீஅலர்மேல் மங்கைத் தாயார், ஆண்டாள், பெரியாழ்வார், சுவாமி ராமானுஜர் மற்றும் சுவாமி தேசிகன் இவர்களின் சந்நிதிகளையும் அமைத்து, நித்திய பூஜைகளை ஏற்படுத்தினார்.
அத்திருக்கோயிலே படிப்படியாக வளர்ந்து, தற்போது அனுமார், சக்கரத்தாழ்வார், சத்திய நாராயணப் பெருமாள் மற்றும் லஷ்மி ஹயக்ரீவர் சந்நிதிகளுடன் சேர்ந்து பொலிவுடன் காட்சியளிக்கிறது. இத்திருக்கோயிலில் தினம் தினம் திருவிழாதான் என்றபடி ஏதாவது வைபவங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன.
ஆலயத்தின் முக்கியத் திருவிழாக்கள்: புரட்டாசியில் சனிக்கிழமைகளில் நடக்கும் விசேஷ பூஜைகள், தாயார் நவராத்திரி உத்ஸவம், மற்றும் பிரதி பௌர்ணமியில், சுவாமி தேசிகன் அவதார உற்சவம், சத்திய நாராயணபூஜை ஆகியன. புரசை ஸ்ரீநிவாஸர் ஆலயத்தை, ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியுள்ள திருவிடந்தையின் அபிமானத் தலம் என்பர்.
புரசை ஆலயத்துக்கு ஸ்ரீஅஹோபில மடம், ஸ்ரீமத் ஆண்டவன், மைசூர் பரகாலமடம் ஜீயர் சுவாமிகள் மற்றும் காஞ்சிப் பெரியவர்கள் விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இக்கோயிலில் வைகானஸ ஆகம சாஸ்திரப்படியும், வடகலை சம்பிரதாய வழி முறைகளிலும் ஆராதனைகள் நடந்து வருகின்றன.
சாஸ்திர முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா ஸம்ப்ரோஷணம் நடைபெற்று வருகிறது. கடந்த 2006ல் நடைபெற்ற ஸம்ப்ரோஷன வைபவத்தில், ‘ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள்’ கலந்து கொண்டு சிறப்பித்தார். 12 ஆண்டுக்கு ஒரு முறை புரட்டாசியில் இரண்டு திருவோண நஷத்திரம் சம்பவிக்கும். இதை, ‘மாமாங்க மாதம்’ என்பர்.
பெருமாளுக்கும், சுவாமி தேசிகனுக்கும் திருவோண நஷத்திரமாகையால் முதலில் வரும் திருவோண நாளை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். வசதிப்படுபவர்கள் அனைவரும் அவசியம் இத்திருக்கோயிலுக்குச் சென்று, திருவேங்கடமுடையானின் திருவருளைப் பெற வேண்டும்.
படைப்பும், படங்களும்: எம்.என். ஸ்ரீனிவாஸன்