ஆண்களின் பிரத்யேக கோயில்: 10 ஆயிரம் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலை அடிவார கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோயில் குருபூஜை விழா நடந்தது.

தேவதானம் மேற்கு தொடர்ச்சி அடிவாரம் முகவூர் தெற்கு தெருவில் வனப்பேச்சி அம்மன் கோயில் உள்ளது. முகவூரில் பல்வேறு சமூகத்தினர் வசித்தாலும் ஹிந்து நாடார் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அருமை குறித்து பெண்களுக்கும், பெண்களின் அருமை குறித்து ஆண்களுக்கும் உணர்த்தும் விதமாகவும் பல்வேறு குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும் வனப்பேச்சி அம்மன் அருள்வாக்கு கூறியதால் பல தலைமுறைகளாக இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

ஆண்களுக்கென பிரத்தியேக கோயிலாக உள்ள இங்கு விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மதியம் பெண்களை மட்டும் ஊரில் விட்டுவிட்டு சிறுவர்கள் இளைஞர்கள் என அனைத்து ஆண்களும் 4000 கிலோ அரிசி மளிகை பொருள் காய்கறிகளுடன் வனப்பேச்சி அம்மன் கோயில் வளாகத்திற்கு வந்தனர்.

ஆண்கள் வெளியேறியதும் பெண்கள் ஊரில் நுழையும் 12 பொது பாதைகளையும் மூடினர். அலைபேசி, கண்காணிப்பு கேமரா உபயோகம் கூடாது. கதவை பூட்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளுடன் வனப்பேச்சி அம்மனை வழிபாடு செய்து பாரம்பரிய விளையாட்டுகளுடன் இரவு முழுவதும் துாங்காமல் விழா கொண்டாடினர்.

ஆண்கள் மலையடிவார கோயிலில் சிறிய குடில்கள் அமைத்து தங்குவதுடன் இரவு முழுவதும் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து மொத்தமாக சுவாமிக்கு படையல் இட்டனர்.

பின் குடில்களில் போடப்பட்ட இலைகளில் படையல் உணவை அனைவருக்கும் பகிர்ந்த பின் சிறப்பு வழிபாடு அரோகரா கோஷம் எழுப்பியதும் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் அன்னப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நேற்று ஊர் திரும்பினர்.

எல்லையில் காத்திருந்த பெண்களிடம் பிரசாதத்தை காட்டிய பின் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு அத்துடன் விழா நிறைவடைந்தது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவால் அப்பகுதி விழாக்கோலமாக காணப்பட்டது.

Leave a Reply