ராமனின் சகோதரி: அறிந்து கொள்வோம்!

கதைகள்! சமய இலக்கியங்கள்

சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்

09" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/ramar.jpg" alt="" width="802" height="455" />

உண்மை அன்பு கொண்டவர்கள் மீது ஈடுபாடு ஏற்படுவது இயல்பே. அந்த வகையில் ராமனைப் பிரிந்த சீதைக்கு அரக்கியான திரிசடையின் பேச்சு ‘விரைவில் ராமனை அடைய முடியும்’ என்ற நம்பிக்கையை அளித்தது.
திரிசடையிடம் தன் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டாள் சீதை.
ஒருநாள் காலையில், ”என் நாயகன் ஸ்ரீராமனுக்கு மூத்த சகோதரி இருக்கிறாள், தெரியுமா உனக்கு?” எனக் கேட்டாள்.
”அட, அப்படியா?” என அவள் வியந்தாள்.
”என் மாமியார் கவுசல்யா சொன்ன விஷயம் இது. என் மாமனார் தசரதரின் தந்தை அஜன். தேவலோகப் பெண்ணான இந்துமதியை அவர் மணந்தார். சாபம் காரணமாக மானிடப் பெண்ணாக பூமிக்கு வந்தவள் அவள். சாப விமோசனம் பெற்ற அவள், மீண்டும் தேவலோகத்திற்கு புறப்பட்ட போது, அவளது பிரிவைத் தாங்க முடியாமல் அஜன் தற்கொலை செய்தார். இதன் மூலம் தானும் வானுலகம் சென்று இந்துமதியுடன் வாழலாம் எனக் கருதினார் அவர்!
அஜனுக்கும், இந்துமதிக்கும் பிறந்த குழந்தையான தசரதனுக்கு அப்போது வயது எட்டு மாதம் தான். இந்நிலையில் குலகுரு வசிஷ்டர், சான்றோரான சுமந்திரரிடம் அரசு நிர்வாகத்தை ஒப்படைத்தார். சாஸ்திரம், போர்த் தந்திரங்களில் வல்லவரான மருதன்வர் என்ற வல்லுநரிடம் குழந்தை தசரதனை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். தசரதனும் தன் பொறுப்பை உணர்ந்து வளர்ந்தார். சிறுவன் தசரதன் அரச குமாரனாகி, அயோத்தி யின் சிம்மாசனத்தையும் அலங்கரித்தார்.
இவரது ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள் தவறாமல் கப்பம் கட்டினர். அவர்களில் ஒருவரான வட கோசலத்தின் சிற்றரசர் மீது தசரதர் கூடுதல் மதிப்பு வைத்தார். காரணம் அவரது மகள் கவுசல்யா தான்!
சூரியவம்ச மன்னர் கள் பல கிளைகளாகப் பிரிந்து பல தேசங்களை ஆட்சி செய்தனர். அந்த வகையில் வடகோசலத்தை ஆண்ட சிற்றரசரும், தசரதரும் சூரியவம்சம் தான்.அதாவது இருவரும் ஒரே கோத்திரம்.
பெற்றோர், சகோதர பாசம் என்பதை அறியாமல் வாழ்ந்த தசரதனுக்கு, கவுசல்யா மீது காதல் ஏற்பட்டது. தன் விருப்பத்தை குலகுருவான வசிஷ்டரிடம் தெரிவித்தார்.
ஒரே கோத்திரத்தை பிறந்தவர்கள் திருமணம் செய்வது கூடாது என்பதால் அவர் வருந்தினார். ஆனால் கவுசல்யாவும், அவளது தந்தையான கோசலத்தரசனும் திருமணத்திற்கு சம்மதித்தனர். தசரதனும் தன் எண்ணத்தை மாற்ற விரும்பவில்லை.
இதற்கிடையில் ராவணனுக்கு ஒரு ரகசியத்தை தெரிவித்தார் நாரதர்.
”யார், என் பெரியப்பா ராவணனா?” என குறுக்கிட்டாள் திரிசடை..
”ஆமாம், தசரதருக்கும் கவுசல்யாவுக்கும் பிறக்கும் குழந்தையால் அவன் கொல்லப்படுவான் என்பது தான் அந்த ரகசியம்! உடனே ராவணன் தன் படைவீரர்களை அனுப்பி கவுசல்யாவைக் கடத்தி வரச் செய்து ஒரு பெட்டியில் அடைத்து, சரயு நதியில் தள்ளிவிட உத்தரவிட்டான்.
அப்போது தன் பரிவாரங்களோடு வேட்டைக்குப் போயிருந்தார் தசரதர். சரயு நதிக்கரையில் வீரர்கள் சிலர் பெட்டியை ஆற்றுக்குள் தள்ளி விடுவதை அவர் கவனித்தார். தர்மத்துக்குப் புறம்பாக செயல்படுவதை உணர்ந்த தசரதர் பெட்டியைக் கைப்பற்ற ஆற்றுக்குள் பாய்ந்தும் பலனில்லை.
அப்போது வானில் பறந்த கழுகு இனத் தலைவர் ஜடாயு தண்ணீரில் தத்தளித்த தசரதரைக் கண்டார்.
”உங்களை கடத்தி வந்த போது என் பெரியப்பா ராவணனுடன் சண்டையிட்டாரே, அவரா இந்த ஜடாயு?” என வியப்புடன் கேட்டாள் திரிசடை.
”ஆமாம், அவரே தான். கீழே பாய்ந்து தசரதரைப் பற்றிக் கொண்டு கரையில் சேர்த்தார். பழங்கள் உண்ணச் செய்து களைப்பை போக்கினார். ஆபத்தில் உதவிய ஜடாயுவுக்கு நன்றி தெரிவித்த தசரதர், கங்கையில் வீரர்கள் சிலர் பெட்டியை வீசி எறிந்த விஷயத்தை தெரிவித்தார். தன் கூர்மையான கண்களால் நோட்டம் விட்ட ஜடாயு, பெட்டி ஒரு தீவுப் பகுதியில் ஒதுங்கியிருப்பதை கண்டறிந்தார். தசரதரை தன் முதுகில் சுமந்தபடி அந்தத் தீவுக்கு வந்தார்.
பெட்டியைத் திறந்து பார்த்த தசரதர் திடுக்கிட்டு போனார். அதற்குள் அவரது காதலி கவுசல்யா சிறைப்பட்டிருப்பதைக் கண்டார் .
இதற்கிடையில் கவுசல்யா கடத்தப்பட்டதை கேள்விப்பட்ட நாரதர் அங்கு வந்தார். ஜடாயு, நாரதரின் முன்னிலையில் தசரதர், கவுசல்யாவின் திருமணம் அங்கேயே நடந்தது.
தசரதர், கவுசல்யா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ‘சாந்தை’ எனப் பெயரிட்டனர். அதன் முழங்காலுக்குக் கீழே ஊனமாக இருந்தது. சாஸ்திரங்களைப் புரட்டிய குலகுரு வசிஷ்டர், ‘குழந்தையை தத்து கொடுத்தால் குறை நீங்கும்’ என சிறப்பு விதி இருப்பதைக் கண்டார். அதன்படி தசரதர் தன் மகள் சாந்தையை அங்கதேச மன்னரான ரோமபாதனுக்கு தத்து கொடுத்தார்..
அதன் பின் கைகேயி, சுமத்திரை என்னும் பெண்களை தசரதர் மணந்தார். காலம் உருண்டோடியது. மனைவியர் மூவர் இருந்தும் ஆண்குழந்தை இல்லாத குறை தசரதனை வாட்டியது. புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் பலன் கிடைக்கும் என்றார் வசிஷ்டர்.
இதற்கிடையில் தத்து கொடுக்கப்பட்ட சாந்தைக்கு படிப்படியாக உடற்குறை நீங்கி இயல்பான பெண்ணாக மாறினாள். அவளை ரிஷ்யசிருங்கர் என்னும் முனிவருக்கு மணம் முடித்தார் மன்னர் ரோமபாதன்.


யாகத்தை நடத்துவதற்கு தகுதியான ஒரே நபர் ரிஷ்யசிங்கர்தான் என சிபாரிசு செய்தார் குலகுரு வசிஷ்டர். தன் மனைவியைப் பெற்ற தந்தை என்ற முறையில் தசரதன் மீது முனிவரும் அதிக மதிப்பு கொண்டிருந்தார். யாகத்தை விமரிசையாக நடந்து முடிந்தது. முடிவில் அக்னி தேவன் தன் கைகளில் பொற்கிண்ணத்தை தாங்கி வந்தார். அதில் பிரசாதமாக பாயசம் இருந்தது. அதை தசரதர் தன் மனைவியர் மூவரும் பங்கிட்டுக் கொள்ள அளித்தார்.
சாந்தைக்குத் தம்பியராக ராம, பரத, லட்சுமண, சத்ருக்னர் என்னும் நான்கு சகோதரர்கள் பிறந்தனர்”
இந்த வரலாற்றை சொல்லி முடித்த சீதை புன்னகைத்தாள்..
‘இந்த புன்னகை என்றென்றும் தொடரட்டும்’ என மனதிற்குள் பிரார்த்தித்தாள் திரிசடை.

நன்றி: ஸ்ரீவைஷ்ணவிஸம்:

திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

Leave a Reply