சிறுகதை: நடையில் நின்றுயர் நாயகன்

கதைகள்!

இன்னும் சொல்லப்போனால் அவன் தன் வாழ்நாளெல்லாம் நடந்தேதான் கழித்திருக்கிறான். எதன்பாலும் விருப்பமில்லாத இவன், எதையெல்லாமோ தேடியதுபோல திரிந்து அலைந்திருக்கிறான். ஏமாற்றமே மிஞ்சிய தன்வாழ்வை நடந்தே கழித்த அவனுக்கு வேறெதும் மிச்சம் இல்லை. இதோ இப்போது வீசிக்கொண்டு போகும் இரண்டு வெற்றுக் கரங்களைத் தவிர.

அந்தக் கைகள்தான் எத்தனை அற்புதங்கள் செய்திருக்கின்றன. என்னென்ன பெருங்காரியங்கள் செய்திருக்கின்றன. பின்னால் வருகிறவர்களின் கரங்களெல்லாம் கடுக்க எழுதும்படி வரலாறுகளைச் செதுக்கியிருக்கின்றனவே.
அவன் நடந்த நடையைப் படைத்தவன் கூட நடந்திருக்க முடியாது. அளவையில் சொல்வதானால் இதோ இந்தப் பரதகண்டத்தின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரையிலும் நடந்தது போதாது அதையும் தாண்டிக் கடலின் குறுக்கே அணைகட்டி அதன்மீதேறிச் சென்று இலங்கை வரையிலும் நடந்திருக்கிறான். ஒரு பெரிய யுத்தத்தையே நடத்தியிருக்கிறான். தர்மத்தை வாழ்விக்க வந்தவன் என்று அவன் பாதம்படுவதற்குப் பூமித்தாய் காத்துக்கிடந்தாள். அவன் பாதம் பட்டால் கல்லும் பெண்ணாகும் அது ஒரு காலம்.

காலம்… அந்தக் காலம் அவனைக் கொஞ்சமா புரட்டியது? அதனோடு சேர்ந்து கொண்டு இவனும் வாஞ்சையோடு கட்டிப் புரண்டு அதன் புழுதியையெல்லாம் தன்மீது வாரிப் பூசியிருக்கிறான். அந்தப் புரட்டலில் பெற்ற காயங்கள் கொஞ்சமா? என்ன  அதனால்தானோ என்னவோ அகத்திலும் புறத்திலும் பெற்ற அந்தக் காய வடுக்களைக் கொண்டுபோய்ப் புதைத்து விடுவதற்காக நடப்பவன் போலவே வேகவேகமாக நடக்கிறான். ம் இதுவும் ஒரு காலம்.

பரந்த பேரரசில் மகாராஜனின் பட்டத்து இளவரசன் அவன். வாராது வந்த மாமணியாய்த் தோன்றியவன். இரகுகுலத் திலகமானவன். மூன்று தம்பியர்க்கு மூத்த அண்ணன். குடிமக்கள் தலைமீது வைத்துத் தாங்கிக் கொண்டாடிய அவர்களின் இதயத்துப் பேரரசன். அந்தக் கதையெல்லாம் நேற்றோடு முடிந்து போயிற்று. இன்று இவன் தனியன். தனியிலும் மிகத்தனியாய் தனக்குத் தானே சொந்தமில்லாதவனைப் போல இதோ தன்னந்தனியே வெறுங்கை வீச நடந்து போய்க் கொண்டிருக்கின்றான். ஏனென்றால் இனிமேல் இவன் அவதாரப் பட்டம் வேறு வாங்க வேண்டுமே?

அவதாரத்தின் திருவுரு என்று எல்லோரும் போற்றிப் புகழ்ந்த அந்த வாழ்வு அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்திருக்கலாம். இவனுக்கு அதனால் என்ன வந்தது? அவற்றையெல்லாம் ஒரு பொய்யான கனவாக எண்ணி எல்லாவற்றையும் தன் மனத்திலிருந்து தூக்கியெறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறான். அவன் போகிறவேகம் தன்னையே தூக்கியெறிந்துவிடப் போவதாய்த்தான் தெரிகிறது. சரயு அவனோடு சேர்ந்து விரைந்து கொண்டிருக்கிறாள். கிழக்கே சூரியன் மலைமுகட்டில் இறங்கிக் கொண்டிருக்கிறான்.

தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள வல்லமை படைத்த அவனுக்கு, தன்பால் பிறர்படும்பாடு மட்டும் தாங்க முடியாமல் போனது, அளவு கடந்த இரக்கத்தாலோ என்னவோ அடுத்தவர்களுக்கே இப்படியென்றால் தன்னை நாடி வந்த மனைவிக்கு ஏதேனும் என்றால் எப்படிப் பொறுத்துக் கொள்வான் அவன்? அந்த அளவுக்கல்லவா அவள்மீது காதல் கொண்டுவிட்டான். அவள் அவனது உயிரல்லவா? நடந்து போய்க் கொண்டிருந்த இவனைக் கண்டு உப்பரிகை மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதில் கண்களின் வழியே கலந்தவளல்லவா? அவள் அந்தப் பெருவில்லை ஒடித்த அதே கரங்கள்தானா இவை? அந்த வேகத்தில், அவளைக் கண்ட வேகத்தில் அந்த வில் ஒரு துரும்பைப்போலல்லவா ஒடிந்து போனது. அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது.
ஒவ்வொரு சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கும் நேருகிற இன்னல்கள் அவனுக்கும் நேர்ந்தன. எதிர்கொள்வதற்கு அவன் ஏற்கனவே ஆயத்தமானவன் போல ஒரு புன்முறுவலில் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டான். முதல்நாள் பட்டாபிஷேகம் என்றார்கள். மறுநாள் வனவாசம் என்றார்கள். மறுப்பு என்பதை அறியாது, தன் மனத்தே அறிவதைப் பிறர்க்கு உரையாது வாழப் பழகிய அவன் எதிர்க்கப் போகிறானா என்ன? விருப்போ வெறுப்போ காட்டாது அவன் உடனே புறப்பட்டான். தம்பியும் வருவேன் என்றான். மறுக்கவில்லை ஆயினும் விருப்பும் இல்லை. அவளும் வருவேன் என்றாள். மறுத்தான். பயந்தான். நடக்க வேண்டுமே? தான் நடந்து போக வேண்டிய தூரங்களைத் தானே அறியாதபொழுது இவர்களையும் அந்த இன்னலில் அலைக்கழிக்க அவன் மனம் ஒப்பவில்லை. ஆனாலும் எல்லாமே விதிப்படித்தானே நடந்தது. இவர்களும் அதன்படித்தானே நடந்தார்கள். அவன் நினைத்தபடி அவன் நினைத்து எதுவுமே நடக்கவில்லை. பாவம் அவன்.

ஒரு மகாசாம்ராஜ்ஜியத்தின் பட்டத்து இளவரசன் இருளினிலே யாரும் அறியாதபடி கள்வனைப் போலக் காட்டுக்குத் துரத்தப்பட்டான். கானகத்திலேயே நடந்தான். நடப்பதற்கே பிறந்தவன் மாதிரி. பொன்னிழைத்த இரதத்திலேறி பூலோகம் ஆளப்பிறந்தவன் அவன்.

அப்படியெல்லாம் இல்லை. நடந்தவனை விதிவிடவில்லை. இளையதம்பி வடிவில் தேடிவந்து தந்தையின் மரணச் செய்தியைச் சொல்லிக் குலைத்து இவன் கால்களில் இருந்த கால்அணிகளையும் கழற்றிப் போனது. இவனில்லாத இடத்தில் அவற்றை வைத்து அழகு பார்க்க இவன் வெறுங்காலோடு இருந்தது போதும் என்றுதான் இருந்தான். ஆனால் அந்தக் காலைப் பிடிக்க ஒருத்தி இருக்கிறாளே. அவளுக்கேனும் ஒரு குடிசை வேண்டாமோ? பெயர்த்தெடுத்துப் போவதற்கு வசதியாகவே குடிசை கட்டித்தந்தது விதி. இருக்க விடுமா என்ன அவன் தலைவிதி?
நடந்து கொண்டிருந்த இவர்கள் வாழ்வை ஓடித்திரியும் ஒரு பொன்மான் கலைத்து விட்டது. பெண்மானின் வயப்பட்ட அவன் பொன்மானைத் தேடி நடந்துதான் போனான்….. நடந்துபோய்ப் பிடிக்கிற நிலைமாறித் துரத்த ஆரம்பித்தபோதுதான் காலத்தின் வஞ்சகம் அவனுக்குப் புரிந்தது…. அப்புறம் என்ன சொல்ல? ஏற்கனவே காத்திருந்து கட்டிய குடிசையின் குட்டிச்சுவரைக் கூட விடாமல் விதி இராவணன் உருவில் தூக்கிப் போயிற்று. பொன்மானும் கிட்டாமல் பெண்மானும் காணாமல் அன்றைக்கு ஒடிந்தது அவன் நடை. அவன் நாடிகூட நடைதடுமாறி மிகவும் தளர்ந்து போனது.

இன்று போலவே நெஞ்சைக் கனத்த அதே நடை. இன்றைக்கு நடப்பதுகூட அத்தனை சிரமமில்லை. ஆனால் அன்றைக்கோ அந்தக் கணத்தை நினைத்தாலே இன்னும் இவனுக்கு நெஞ்சடைத்துக் கொள்ளும். தன்னொரு பாகத்தை வெட்டியெடுத்த பின்னாலே தடுமாறித் திரிந்தலையும் பிண்டத்தைப் போலல்லவா அன்றைக்கு அலைந்தான். பெண்மானைப் பொன்மானால் தொலைத்த இவனை எங்கிருந்தோ தேடிவந்து இவனுக்கே ஆளானான் அனுமான். குரங்குகளும் இரக்கம் காட்டும் அளவுக்கு இவன் நடை தளர்ந்து போயிருந்தது…. தம்பிதான் காத்தான்… இவனுக்கு இன்னொரு காலானான்…
நடந்த நடை கொஞ்சமா கானகம், கடுவெளி, மணற்பரப்பு, மலைகள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள், ஆற்றங்கரைகள் என நிலப்பரப்பின் எல்லை களையெல்லாம் நடந்தே கடந்தார்கள். தேடினார்கள். இவனுக்கு அதிலே விருப்பமா? என்ன வெறுத்துப் போய் அடிக்கடிப் புழுங்கினான். சுற்றியிருந்தவர்களெல்லாம் மனைவியின் பிரிவுத் துயர் என்று மனம் வருந்தினார்கள்… இவனுக்குத் தானே தெரியும் அது என்ன வலியென்று தனக்குச் சம்பந்தமேயில்லாத விஷயங்களில் தன்னைச் சிக்கவைத்து இப்படி நடக்க வைக்கிற விதியையல்லவோ? மனத்தில் கறுவிக் கொண்டு அவன் புழுங்கினான். அந்தக் கறுவலில் ஒரு கங்கு சீதையின் பேரிலும் விழுந்து தொலைத்து விட்டது.

நிலஎல்லை ஓரத்திலே நீலச் சமுத்திரக் கரையோரத்தில் அவன் நடை நின்று போய்விட்டது. நீர்மேல் நடக்க யாருக்கு முடியும்? படகிலாவது போயிருக்கலாம். கூடாதாம். இதோ இந்தச் சமுத்திரத்தில் பாலங்கட்டி நடந்தேதான் கடக்க வேண்டுமாம். நடையில் நின்றுயர் நாயகனானதெல்லாம் எப்படி என்று இப்போது புரிகிறதா எல்லைகள் எவராலோ தீர்மானிக்கப்பட இவன் விசையேறிய பொம்மையாய் வெறுமையாய் நடந்தான். கையில் வில் அப்போது கனத்ததுக் கிடந்தது. வில்லினால் வந்த அவளால் வந்த வினையது. கங்கின் துளி இப்போது வீரியமாய்ச் சீதைக்கு நெருப்புக் குழியாக அவனது நெஞ்சுக்குள்ளேயே கனன்றது.
அப்புறம் நடந்தவையெல்லாம் அனுமானின் செயலாலே.. அவன் வந்தபின்னால் கொஞ்சம் நடை குறைந்தது. குறைந்தாலும் வலிமை அதிகமாயிற்று. இந்தநேரத்தில் அவனை நினைத்துக் கொண்டான். எப்போதும் இவன் பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிற இவன்பால் குழைந்த பக்தன் அவன். இல்லை, அவன் பிள்ளை. பிள்ளைப் பாசமெல்லாம் அவளுக்குத்தான். இப்போது தன்னை இந்த நிலையில் அந்த அனுமன் பார்க்க வேண்டுமே. வேண்டாம். தன்னை யாரும் பார்க்க வேண்டாம்.. தன்னைத்தானே காணச் சகியாமல்தானே தன்னைத் தொலைக்க அவன் விரைந்து நடந்து கொண்டிருக்கிறான்.

அவதார மகிமை என்றார்கள்…. இவனுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை….. அந்தப் பத்துத் தலை இராவணன் வீழ்ந்தபோது இவன் தெய்வத்தின் தெய்வமாகக் கொண்டாடப்பட்டான். இந்தப் பூவுலகையே காக்க வந்த தேவன் என்றார்கள். இவன் அந்தப் புகழ் மாநாட்டுக் கூட்டத்தில் நிறைய நேரம் நிற்கவில்லை. அதை உடைப்பதற்காகத் தன்னுள்ளே கொட்டி வைத்திருந்த நெருப்புக் குழியை சீதைக்காக எரிய விட்டான். மானுக்கு விரும்பிய பாவத்தில் நெருப்புக்குக் கொஞ்சம் கடன் தந்தாள். அவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான். இவன் நடை அவளுக்குத் தெரியாதா என்ன? எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மாதிரி புதைந்துபோய் மீளமுடியாது அவள் அவனோடு சேர்ந்து திரும்பி நடந்து கொண்டிருந்தாள். நடை திரும்பியிருக்கலாம்.. வாழ்வு திரும்பி விடுமா என்ன?

நடந்ததுபோதும் என்றாலும் இன்னும் நடக்க வேண்டியது வெகுதூரம் என்று பட்டாபிஷேகத்தில் புரிந்து கொண்டான். இவன் நடத்துவான் என்றுதானே அந்தச் செங்கோலை இவன் கையில் நம்பி ஒப்படைத்தார்கள் என்ன ராஜ்ஜியமோ.. அவர்கள் ராமராஜ்ஜியம் என்றார்கள். இவன் அங்கும் நடந்து கொண்டிருந்தான்… இரவும் பகலுமாய். நாட்டையும் மக்களையும் காக்கவேண்டி அவன் நடந்த நடை இருக்கிறதே. பொன்மானைத் துரத்தியதெல்லாம் கொஞ்சம்.

அந்த நடையிலும் எவனோ ஒருவன் மண்ணள்ளிப் போட்டான்…. இவன் நடையையும் அவள் நடையையும் ஒருவன் வேடிக்கையாய்ப் பேச வந்தது வினை. நடை தவறலாமோ என்று அவளை மறுபடியும் காட்டிற்கே நடக்க வைத்தான். இவன் நடக்க வேண்டுமே, அதனாலேதான். கருவுற்றிருந்த சீதை ஏதோ ஒரு பார்வையை இவன்மீது வீசிவிட்டுப் போனாள். கல்கூடப் பெண்ணாகிய காலங்களைக் கடந்து, பெண்ணையும் கல்லாக்கிய கல்நெஞ்சக்காரனாக இவன் ஆனான். அன்றைக்குப் போனவள்தானே…

நடந்து நடந்தே காலம் கழித்த ஒரு சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியின் பட்டமகிஷியாக வாழ்ந்து விட்ட அவளும் அன்றைக்கு அவனை விட்டு நடந்தேதான் போனாள். அவள் பூமாதேவியின் புதல்வியாம். இவன் நடையை வளர்த்தெடுக்க இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு அவள் அந்தப் பூமாதேவியிடமே போய்விட்டாள். ஒருவேளை தவம் செய்திருப்பாள் போலிருக்கிறது, இனிமேல் நடக்கத் தன்னால் முடியாதென்று..
காலாக இருந்த இலக்குவனையும் எட்டி உதைத்தாயிற்று…. பின் என்ன…. இவன் நடைக்கு யாரேனும் இடர்செய்தால் அது கல்லாக இருந்தாலென்ன காலாக இருந்தாலென்ன? அப்புறம் தன்னையே தடுத்த தன்னையே உதறிக் கொள்ள முடிவு செய்து புறப்பட்டு விட்டான்.. அடேயப்பா அவதாரத்தின் பெருமிதம் அவனுக்கு இருந்திருக்குமா என்ன?

நடந்ததெல்லாம் நன்மைக்கே என்று நடந்து கொண்டிருக்கிறான் அவன். பல்லக்குப் பரிவாரங்களோடும் கொட்டு முழக்கோடும் பவனி வரவேண்டிய அந்தச் சக்கரவர்த்தி வெறுங்காலோடு தனியே நடந்தே போய்க் கொண்டிருக்கிறான்.
சரயு விரைந்து கொண்டிருக்கிறது. எப்படியும் இன்றைக்கு இரவுக்குள் அவன் அந்த நதியோடு கலந்து விடுவான். அவனை நடையில் நின்றுயர் நாயகன் என்று யாரேனும் நாளை சொல்வார்..

கதைக்கான ஓவியம் மற்றும் கதை படிக்க:: https://dinamani.com/edition/story.aspx?artid=341975

Leave a Reply