குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்டம் குறித்த கதையுடன் கூடிய கட்டுரை. இதன் பின்னணிக் கதை என்ன, சிவாலய ஓட்டம் ஏன் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை̷ 0;
” தருமபுத்திரா !என்ன யோசனை ?.உங்கள் காரிய வெற்றிக்கு கண்டிப்பாக இந்த யாகம் மிகுந்த உறுதுணையாக இருக்கும் !.அதில் எவ்வித ஐயப்பாடும் வேண்டாம் .” புன்னகைத்தார் பரந்தாமன் ;
” மதுசூதனா …எனது யோசனை யாகம் குறித்து அல்ல !.அந்த யாகத்துக்குத் தேவையான பால் குறித்து ! ஆம் .இடுப்புக்கு மேலே மனித உருவமும் , இடுப்புக்கு கீழே மிருக உருவமும் கொண்ட விசித்திர உருவமான புருஷா மிருகத்தின் பாலை யார் கொண்டு வருவது ..எப்படி கொண்டு வருவது என்பதைப் பற்றியே !… ஒரே அடியில் ஆளைக் கொன்று விடும் கொடூரமான அந்த புருஷா மிருகத்திடம் பால் கறப்பதென்பது எளிதான காரியமா ?”
விசாரத்தோடு கேட்ட தரும புத்திரரை விஷமமான புன்னகையுடன் ஏறிட்டார் கண்ணபிரான் ;
” குந்தி மைந்தனே!..நம் பீமனுக்கு இது மிகவும் எளிதான காரியம் தான் !
” என்ன ?…பீமனா ?பருத்த சரீரம் கொண்ட அவனால் விரைவாக ஓடக் கூட முடியாதே ?..அவன் எப்படி இதற்கு சாத்தியம் ?”
நம்ப முடியாமல் ஏறிட்ட தருமபுத்திரரைக் கண்டு நகைத்தார் கண்ணபிரான் ;
” பகாசுரன் மற்றும் இடும்பனை அழித்தது ..அரக்கு மாளிகையில் உங்கள் ஐவரையும் காப்பாற்றியது ..குபேரப்பட்டினத்திலிருந்து சௌகந்திக மலரைக் கொண்டு வந்தது .கொடூரமான நாக பாசங்களிலிருந்து மீண்டது .இவையெல்லாம் அவனுக்கு சாத்தியம் என்கிற போது , புருஷா மிருகத்திடம் பால் கரப்பதென்பதும் அவனுக்கு சாத்தியமே !..”
தீர்மானமாகவும் , தெளிவாகவும் கூறிய கண்ணபிரான் பின் பீமனை நோக்கி , புன்னகையுடன் ,
” பீமா ..உனது திறமை வெளிப்பட மேலும் ஒரு வாய்ப்பு உனக்கு !..நான் கூறுவதை கவனமாகக் கேள் !.வைஷ்ணவத் துவேஷியான புருஷா மிருகத்திற்கு சிவ பக்தி அதிகம் ! சிவலிங்கத்தை எங்கே கண்டாலும் ஆயிரத்தெட்டு பஞ்சாட்சரம் ஜபிக்காமல் கிளம்பாது …எனவே நான் உனக்கு பதினோரு சிவலிங்கங்கள் தருகிறேன் !.புருஷா மிருகத்திற்கு சினம் மூண்டால் தான் பால் பெருகும் !..அமைதியாகத் தவமியற்றினால், அதற்கு பால் சுரக்காது !.
நீ அதனருகே சென்று ‘..கோவிந்தா .கோபாலா..’..என்று என் பெயரை உரக்கச சொன்னால் ,அது கோபம் கொண்டு உன்னைப் பிடிக்க வரும் !நீ அப்போது உன்னிடமுள்ள பதினோரு சிவலிங்கங்களுள் ஒன்றை வைத்து விட்டு ஓடத் துவங்கு … லிங்கத்தை எங்கே கண்டாலும் ஆயிரத்தெட்டு பஞ்சாட்சரம் ஜபிக்காமல் கிளம்பாத புருஷா மிருகம் , உடனே ஜபிக்க ஆரம்பித்து விடும் !
நீ …சிவநாமாவளியை எண்ணிக் கொண்டே பால் கர !.சரியாக தொள்ளாயிரம் ஆகும் போது மீண்டும் அதனருகே சென்று முன் போல் ‘ கோவிந்தா .கோபாலா ‘.என்று அதை உசுப்பேற்று !.
நீ சொல்லி முடிப்பதற்குள் , அதுவும் பாக்கியிருக்கும் நூற்றியெட்டு அட்சரத்தை வேகமாக சொல்லி விட்டிருக்கும் !…உன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபத்துடன் வேகமாக ஓடி வரும் !நீ அப்போது இன்னொரு சிவ லிங்கத்தை வைத்து விட்டு ..அது ஜபிக்கத் துவங்கும் போது பால் கறக்க ஆரம்பி !…
இதே ரீதியில் பதினோரு சிவலிங்கங்களையும் வைத்து விட்டு,. அதற்கு கோபத்தை மூட்டி பால் கரந்து கொண்டே வா ! !.
நாம் யாகம் நடத்தும். பூமிதான் அதன் எல்லை ! அங்கே இருக்கும் பன்னிரண்டாவது சிவலிங்கத்தைப் பார்த்தவுடன் , அது அமைதியாகி பஞ்சாட்சரத்தை ஜபித்த படியே திரும்பி விடும் ! அடுத்தவர் எல்லைக்குள் எக்காரணம் கொண்டும் நுழையக் கூடாது என்கிற நியதிக்குக்குக் கட்டுப் பட்டது அது !. ஆக .இந்த யுக்தியைக் கையாண்டால் நமக்கு யாகத்துக்குத் தேவையான பால் கிடைக்கும் !..
பீமா !ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் கொள் .. புருஷா மிருகம் உன்னை விட பன்மடங்கு பலசாலி என்பதை நீ மறந்து விடக் கூடாது ! அரை நாழிகை நேரத்துக்குள் உன்னை எட்டி விடக் கூடிய அசாத்திய திறமை வாய்ந்தது !..மேலும் நீ மிகுந்த விழிப்புடன் சிவநாமாக்களை எண்ண வேண்டும் .சற்றுக் கவனக் குறைவாக எண்ணிக்கையில் தவறு செய்தால் , அருகருகே சிவலிங்கம் வைக்க நேரிடும் !… பதினோரு லிங்கங்கள் போதாமல் போய் விடும் !.புரிகிறதா பீமா ..”
…புன்னகை மாறாத முகத்துடன் பேசி முடித்த பரந்தாமனின் வார்த்தைகளை பணிவுடன் கேட்ட பாண்டுவின் மைந்தனும் , பீஷ்மரின் பேரனுமான பீமன் , பின்னர் அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு பதினோரு லிங்கங்களுடன் புறப்பட்டான் ;
கார் மேகவண்ணனின் வார்த்தைகளை கவனமாக மனதில் இருத்திக் கொண்ட பீமன் முதலில் ”திருமலை ” எனுமிடத்தை அடைந்து அங்குள்ள முனீஸ்வரன் பாறையில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்துக் கொண்டிருந்த புருஷா மிருகத்தைக கண்டான் ; கண்ணபிரான் கூறியபடி விஷ்ணு நாமாவைக் கூறி அதற்கு கோபமூட்ட …அது துரத்த துவங்கியதும் கணமும் தாமதியாது அவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்தான் ; மனம் மகிழ்ந்த புருஷா மிருகம் , அக்கணமே கண்களை மூட்டி பஞ்சாட்சரம் ஜபிக்க ஆரம்பித்தது ;
சிவநாமாக்களை எண்ணிக் கொண்டே வந்த பீமன் , சரியாக தொள்ளாயிரம் ஆனதும் ..மீண்டும் கோவிந்த நாமாக்களைக் கூறி அதனை உசுப்பேற்றி விட்டு ஓட …அது தன்னை வெகு விரைவாக எட்டுமிடத்தில் இஇரண்டாவது சிவலிங்கத்தை வைத்தான் ; அந்த இடமே , தாமிரபரணி நதிக்கரையிலுள்ள ” திருக்குறிச்சி ” எனுமிடம் !
இதே ரீதயில் பீமன் மூன்றாவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” திருப்பரம்பு ”என்றும் ,
நான்காவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” திருநந்திக்கரை ” என்றும் ,
ஐந்தாவது சிவலிங்கத்தை வைத்த இடம் “பொன்மலை ” என்றும்,
ஆறாவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” பன்னிப்பாக்கம்” என்றும் ,
ஏழாவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” கல்குளம் ” என்றும் ,
எட்டாவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” மேலாங்கோடு ”என்றும் ,
ஒன்பதாவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” திருவிடைக்கோடு ” என்றும் ,
பத்தாவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” திருவிதாங்கோடு ” என்றும் ,
பதினோராவது சிவலிங்கத்தை வைத்த இடம் ” திருப்பன்றிக்கோடு ” என்றும் ”அழைக்கப்படுகின்றன !
மேலும் கண்ணன் யாகபூமியில் வைத்த சிவலிங்கத் தலம் ” திருநட்டாலம் ”இந்த திருநட்டாலம் எல்லையில் பீமனின் காலை புருஷா மிருகம் பிடித்து விட அடுத்த கணம் பரமனும் , பரந்தாமனும் சேர்ந்த நிலையில் ” சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்தனர்!அகமகிழ்ந்து போன புருஷா மிருகமும் பீமனின் காலை விட்டு விடுகிறது ! யாகத்துக்குத் தேவையான பால் கொண்டு வரப்பட்டதால் , யாகமும் எவ்வித தடையுமின்றி நடந்து முடிந்தது. . பாலை கொண்டு வந்த பீமனுக்கு பாராட்டுக்களும், அந்தப் பாலை வழங்கிய புருஷா மிருகத்திற்கு , பெருந்திருவிழாக்களில் . பரமனின் வாகனமாய்த் திகழும் வரமும் கிடைத்தன!
இந்நிகழ்வை நினைவுகூரும் வகையிலே தான் அன்பர்கள் விரதமிருந்து ,இப் பன்னிரண்டு சிவத்தலங்களை சிவராத்திரியன்று தரிசிப்பதைப் பெரும் பேராகக் கருதுகிறார்கள் ; ” பீம ஓட்டம் ” ஓடி புண்ணியத்தைத் தேடிக் கொள்கிறார்கள் !
கோவிந்தர்கள் என்று அழைக்கப் படும் இப் பக்தர்கள் , மாசி சிவராத்ரிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே மாலை அணிந்து , மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர் ; விரத நாட்களில் வேக வைத்த பதார்த்தங்களை உண்ணாமல் , இளநீர் , நுங்கு மற்றும் துளசி இல்லை நீரையும் உட்கொள்கின்றனர் ; ஒரு குருசாமியின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர் ;
சிவராத்ரியன்று மாலை திருமலை கோயிலுக்கு அருகேயுள்ள குளத்தில் குளித்து பூஜை முடித்து கிளம்பி பின் மேற்சொன்ன தலங்களை வணங்கி …இறுதியாக நட்டாலம் பதியை அடைந்து தமது ஓட்டத்தை முடித்துக் கொள்வர் !
இந்த சிவாலய யாத்திரை முடிந்த பிறகு பெரும்பாலான பக்தர்கள் சுசீந்திரம் சென்று அங்குள்ள தாணுமாலய சுவாமியை வணகி தமது யாத்திரையை நிறைவு செய்கின்றனர் ;
இச் சிவாலய ஓட்டத்தின் மொத்த தூரம் 70 கி .மீ ஆகும்
பயணத்தின் போது ” கோவிந்தா கோபாலா ..” என அழைத்துக் கொண்டே ஓடுகின்றார்கள் ; இவ்வாறு சிவபக்தர்கள் திருமாலின் பெயரை அழைக்கும் வழக்கம் சைவ , வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் ;
இந்த சிவாலய ஓட்டம் கி .பி ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்; இந்த சிவாலய ஓட்டம் , தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில அமைப்புகளால் நடத்தப் பட்டு வருகின்றன…
– தங்கம் கிருஷ்ணமூர்த்தி