வங்கத்தின் வைணவக்கவி சண்டிதாஸ்

கட்டுரைகள்

வங்கத்திலே வைணவம் என்றவுடன் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரது பெயர்தான் முதலில் நமக்கு நினைவில் வரும். அவரது காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. ஆனால் அவருக்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வங்கத்தில் வைணவம் நன்கு வேரூன்றி வளர்ந்து வந்தது.

வங்கத்தில் முளைத்த வைணவம் விஷ்ணு ; கிருஷ்ண பிரதானமாகக் கொண்டிருந்தாலும், அது சிறப்பாக ராதா கிருஷ்ண பக்தியாகவே தழைத்து வளர்ந்தது. ராதா கிருஷ்ண உறவையே மேலான பக்தியாகக் கருதி, அப்படி ஓர் இலக்கியமே உருவானது. அதை வளர்த்தவர்களுள் முக்கியமானவர் ஜயதேவர். அவர் எழுதிய கீதகோவிந்தம் ஸம்ஸ்கிருதத்தில் எழுதப் பெற்ற சிறந்த கவிதை நூல் ஜயதேவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். வங்க அரசனான லக்ஷ்மண சேனனது ஆஸ்தான வித்வானாக இருந்தார். பாகவதத்தில் கண்ணனது லீலைகளைப் பாடும் தசம ஸ்கந்தத்தில் வரும் நிகழ்ச்சிகளைக் கொண்டு அது பாடப்பட்டது. பாகவதத்தில் ராதை இல்லை. ஜயதேவர் ராதையைக் கதாநாயகியாக்கி விடுகிறார்.

ஜயதேவருக்குப் பின் ராதா கிருஷ்ண பக்தி நெறியை வளர்த்த வங்கக் கவிஞர்கள் ஸம்ஸ்கிருதத்தை விட்டு விட்டு, சாதாரண எளிய மக்களுக்குப் புரியக் கூடிய ப்ரஜபோலி என்ற மொழியில் பாடினார்கள். கோப கோபியரின் மொழியே ப்ரஜ போலி வங்காள மொழியும், பீஹாரின் கிழக்குப் பகுதியில் பேசப்படும் ஹிந்தியும் கலந்தது, வைணவப் பாடல்களில் மட்டுமே கையாளப்படும் மொழி. இம் மொழியில் பாடிய கவிஞர்கள் சண்டி தாஸ், ராமானந்தா, சைதன்யர், கோவிந்த தாஸ், பலராமதாஸ், ஞானதாஸ் மற்றும் பலர் வைணவக் கவிகளுள் முக்கியமான வித்யாபதி மைதிலி மொழியில் பாடினார். இந்த வைணவப் பாடல்களுக்குப் பதாவளி என்று பெயர். அனைத்துமே ராதாகிருஷ்ண பக்தியைப் பாடுவன.

பதாவளிப் பாடல்களுக்குப் பல சிறப்புகள் உண்டு. முக்கியமானது, அவை பாமர மொழியில் எழுதப்பட்டவை. சாதாரண மக்களுக்காகப் பாடப்பட்டவை. பக்தியே இறைவனை அடைய மிக எளிய சாதனமாகக் காட்டியவை. நாட்டில் எல்லோரும் வணங்கும் கண்ணனைப் பற்றிப் பாடியவை. கண்ணனைப் பரம்பொருளாகவும், அதே சமயத்தில் மனித உறவில் நெருக்கமான தாயாகவும், தந்தையாகவும், குழந்தையாகவும், நாயக நாயகியாகவும் பலநிலைகளில் பாடினார்கள். எனவே வைணவப் பதாவளிகள் மிக ஜனரஞ்சகமான பாடல்கள் ஆகிவிட்டன. சைதன்யருக்கு முன் வந்த கிருஷ்ண பக்தக் கவிஞர்களில் தலை சிறந்தவர் சண்டிதாஸ்.

அவர் வங்கத்தின் பீர்பும் ஜில்லாவிலுள்ள சாத்னா கிராமத்தில் பிறந்தார். போல்பூருக்கு அருகிலுள்ள நன்னூர் கிராமத்தில் வாழ்ந்தார். அங்குள்ள வாஸுலி என்ற கிராம தேவதையின் கோவிலில் அவர் பூசாரியாக இருந்தார். பிராமண வகுப்பைச் சேர்ந்த அவர் வண்ணார் குலத்தில் பிறந்த ராமி என்ற பெண்ணின் மேல் காதல் கொண்டார். அவரது காதலை ஏற்க மறுத்த மேல் சாதியினரால் ஊரை விட்டுத் துரத்தப் பெற்று, அவர் நாடோடியாக அலைந்தார். அவர் ராமியை மணந்து கொண்டு இல்லறம் நடத்தியதாகத் தெரியவில்லை. அவர்களது காதல் தெய்வீகக் காதல்.

ராமியின் மேற் கொண்ட இப்பெருங் காதலால் தூண்டப்பட்டு, இணையற்ற எழிலும் இனிமையும் கொண்ட பல பாடல்களை அவர் பாடினார். அவை ராதா கிருஷ்ண உறவு நிலைகளைப் பற்றியவை. ஆனால் மனித உறவு எதையும் சண்டிதாஸ் தன் பாடல்களில் விடவில்லை. பிரிவு, ஏக்கம், உவகை, களிப்பு, ரகசிய சந்திப்புகள், அதற்கான உபாயங்கள், ஏமாற்றம், துயரம் அனைத்தையும் எளிய, அணிகளற்ற, சம்பிரதாய உவமைகளின்றி சண்டிதாஸ் பாடுகிறார். அப்பாடல்கள் பக்திப் பரவசமானவை. மானிட உறவுக்கு அப்பாற்பட்ட ஜீவாத்மா பரமாத்மா உறவை நாயகி & நாயக பாவத்தில் பாடப்பெற்றவை. அப்பாடல்களைப் பாடிக் கொண்டு சண்டதாஸும் ராமியும் ஊர் ஊராகச் சென்றார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒரு நண்பர் வீட்டில் அவர் தங்கியிருந்த போது, கூரை இடிந்து வீழ்ந்து சண்டிதாஸ் மாண்டார். மற்றொரு கர்ண பரம்பரைச் செய்தியின்படி, ஒரு சிற்றரசனின் சூழ்ச்சியால் சண்டிதாஸும் ராமியும் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. சண்டிதாஸ் வாழ்ந்த காலம் கி.பி. 1417 முதல் 1477 வரை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரது காலம் சற்றே முந்தியதென்றும், கி.பி. 1403 க்கு முன்னரே அவர் 996 பாடல்கள் இயற்றினார் என்றும் பேராசிரியர் தினேஷ் சந்திரசென் கூறுகிறார்.

ராதையின் உள்ளத்தில் கிருஷ்ண பக்தி அரும்பியதை அழகாகக் காட்டுகிறது ஒரு பாடல். கண்ணனிடம் காதல் வயப்பட்ட மங்கையின் நிலையை தாயின் கூற்றாகப் பேசும் நம்மாழ்வார் பாசுரத்தின் எதிரொலி போல அப்பாடல் அமைகிறது.

இவளுக்(கு)உற்ற இன்னல் எதுவோ?

தனிமையை விரும்பித் தனியிடம் செல்வாள்;

பிறரிடம் பேசாள், பிறர் சொல் கேளாள்;

கருமே கத்தைக் கண்கொளா(து) நோக்கிக்

கைகளை நீட்டுவாள், ஏதோ பேசுவாள்.

கூந்தலிலிருந்த குவிமலர் அகற்றித்தன்

கலைந்த கூந்தலைக் களித்து நோக்குவாள்

மயிலின் கழுத்தை மயங்கியேபார்க்குமிம்

மடந்தைக் குற்ற மனநோய் எதுவோ?

மாயனை நினைந்து மங்கை ராதையின்

காதலின் உதயம் என்பன், கண்ணன்

திருவடி தொழுமிச் சண்டி தாஸ்…..

யமுனைக் கரையிலே கண்ணன் குழலூதுகின்றான். காற்றினிலே வரும் அக்கீதத்தைக் கேட்டவர் மெய்மறந்தனர். மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு மாடுகளும் கூட. புல்லைச் சுவைத்துக் கொண்டிருந்த பசுக்களும் கன்றுகளும் அதை விழுங்காமல் குழலிசையில் மயங்கி அப்படியே நின்றன. கோபியர்கள் வீடுகளில் போட்டது போட்டபடியே விட்டு விட்டுத் தம் வசமின்றி வேய்ங்குழல் ஒலிவரும் திக்கை நோக்கி ஓடினர். இப்படிப் பாடுகிறது பாகவதம். அதைப் பாடுகிறார் சண்டி தாஸ்.

விடாது என்னை விரட்டும் இந்த

வேய்ங்குழல் ஆற்றலை விளக்குவ தெளிதோ?

மனைகளை விட்டு மங்கையர் ஓடியே

மாதவன் பாதம் நண்ணிடச் செய்யும்

தாகமும் பசியும் தன்னை விரட்ட

வலியவே வந்து வலையிலே வீழும்

புள்ளினை ஒக்கும் பெண்டிர் செயலும்

மாயக் குழலிசை மயங்கிக் கேட்டே

கணவரை மறந்தனர் காரிகை யெல்லாம்;

கற்றது மறந்தனர் கலைஞா னியரும்;

மரத்தில் படர்ந்த மரகதக் கொடிகளும்

கண்ணன் கழலினைக் கட்ட முயன்றன

ஏழை இந்தக் கோபிகை மட்டும்

மந்திரக் குழலிசை மறப்பது இயல்போ?

“எங்கிருந்து வருகுதுவோ’ என்ற தம் பாடலில், பாரதி, கண்ணன் இசைக்கும் வேய்ங்குழல் ஒலியைப் பற்றிப் பேசுகிறான். அந்த ஒலி எப்படிப்பட்டது?’ கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தானடீ, காதிலே அமுது உள்ளத்திலே நஞ்சு’ என்றான் பாரதி. அவனுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னால் பாடிய சண்டிதாஸின் ராதையும் அதையே சொல்லுகிறாள், பின் அதற்கு மேலேயும் ஒரு படி போகிறாள்.

கண்ணன் குழலிசையில் ராதை தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள். ஆயினும் கண்ணனைக் குறை கூற அவளுக்கு மனமில்லை. ஊதியவன் அவன் இருக்க, அந்த வேய்ங்குழல் மீது பாய்கிறாள் ராதை. அந்த வேய்ங்குழல் இல்லையென்றால், இந்த நஞ்செனும் கொடுமை இருக்காதல்லவா? எனவே வேய்ங்குழலைக் கண்டால், ஏன் மூங்கில் புதர்களையே எங்காவது கண்டால், உடனே முறித்துக் கடலில் எறிந்து விடுங்கள் என்று சொல்கிறாள் ராதை.

சண்டிதாஸின் பாடல் இதோ:

வீட்டு வேலையிலே விருப்பம் வருகுதில்லை,

விம்மி அழுவதும் வெறுத்து நகைப்பதுமாய்,

ஏச்சுப் பேச்சுகளை ஏற்று நிற்கின்றேன்.

அவனது அழைப்பை அலட்சியம் செய்யவோ?

ஏழை ராதை என்னதான் செய்வேன்?

சாதி ஒதுக்கிய சன்யா சினியாய்

ஆக்குவனோ அவன் அழைப்பை ஏற்றால்?

பெற்றோர் இழந்தேன் பெரும்சுற்றம் இழந்தேன்;

தம்பி இழந்தேன் தங்கை இழந்தேன்.

மாயக் குழலிசை மனத்தைப் பறித்தது,

சின்ன மூங்கிலென் சிந்தை கொண்டது.

தேனையே குழலில் நிறைக்கிறான் அது

தீய நஞ்சாய்த் திரும்புவ தேனோ?

மூங்கில் புதர்களைக் கண்டீரேல்

முறித்துக் கடலில் எறியுங்கள்

சண்டிதாஸின் கண்ணன், ராதையிடம் வருகிறான் பல வேடங்களில்! மருத்துவச்சியாக வந்து நாடி பார்ப்பது போல் ராதையின் மென்கரங்களைப் பற்றுகிறான். சன்யாசினியாக வந்து, ஆசிர்வதிப்பது போல் காதல் வார்த்தைகள் பேசுகிறான். ராதை அழைத்தால் கண்ணன் வருகிறான். காட்டு வழியும் காரிருளும் கொட்டும் மழையும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. ராதையின் இன்பம் அவன் பெறும் இன்பம். அவளது துன்பம் அவனது துன்பம். இத்தகைய அன்பு, உலகை உய்விக்கும் அன்பல்லவா என்று வியந்து பேசுகிறார் சண்டிதாஸ்.

ககன மெங்கும் கருமுகில் படர

கானகம் எங்கும் காரிருள் சூழ்ந்தது.

இந்த இரவில் என்னைத் தேடி

ஏனோ வந்தான் கண்ணன் என்னில்

என்றன் உள்ளத்(து) அன்பைப் பெற்றவன்

அதனால் வந்தான் அதுவே உண்மை.

மூத்தோர் பலரும் வாழும் இடமிது,

முறைக்கும் நாத்தியும் ஆளும் இடமிது.

அன்பன் அவனிடம் எப்படிச் செல்வேன்?

என்னால் அவனுக்(கு) எத்தனை துன்பம்?

ஏனோ அவனை வாஎன அழைத்தேன்?

அவனது அன்பின் ஆழம் அறிந்தென்

வீட்டையும் எரிப்பேன் பெரும்பழி ஏற்பேன்.

இத்தனை துன்பமும் ராதையின் பொருட்டென

மகிழ்வோடு ஏற்கிறான் மாயக் கண்ணன்,

வாட்டமென் முகத்தில் வருவது கண்டால்

வாடுவன் அவனும் ஈதென்ன விந்தை!

உலகு (உ)ய்விக்கும் உன்னத அன்பிது

உரைத்தேன் சண்டி தாசெனும் பக்தன்.

சண்டிதாஸ் கண்ணன் ராதை பக்தியில் தன்னை மறந்தவன். கிழக்கு வங்காளத்தில் மெய்மறந்த அடியார்களை பக்லாசண்டி அல்லது பித்தன் சண்டி என்று அழைப்பது வழக்கம் ஏளனமாக அல்ல, அவர்களது பக்தியின் நிறைவால்! சண்டிதாஸின் பாடல்கள் பொங்கிவரும் நீரூற்று போல் அவனது உள்ளத்தின் இருந்து வருபவை. அவை அவனது ஆத்மாவின் ராகங்கள்.

கட்டுரை மற்றும் பாடல்களின் தமிழ்வடிவம்: மு.ஸ்ரீனிவாசன்

Leave a Reply