வாமன ஜெயந்தி: உவந்த உள்ளத்தனனாய் உலகமளந் தண்டமுற…..
ஸ்ரீ ரங்கத்தில் லோகசார்ங்க முநி தோளில் ஏற்றி வந்த #திருப்பாணாழ்வார் பாடின பத்தே பாசுரங்களில் இரண்டாவது பாசுரம் தான் மேலே தொடங்கும் பாசுர வரி, வாமனமூர்த்தியை குறித்தானது.
பல இடங்களில் வாமன சொரூபம் திருவிக்கிரமாவதார ரூபத்தில் பல திவ்ய தேசங்களில் சேவை சாதித்திடினும் வாமன ரூபத்தில் சிற்பல இடங்களில் மாத்திரமே உண்டு.அதில் இவ்விரண்டு ரூபத்திலும் தனித்தனியாக சேவை சாதித்திடும் ஒரே திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் மாத்திரமே.
ஸ்ரீ ரங்கத்தில் திருக்குறளப்ப சன்னதியில் வாமன ரூபத்திலேயே சேவை சாதிக்கிறார். உலகளந்த பெருமாள் கோயில், தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் வழியில் உள்ளது.
வாமன மூர்த்தி அவதாரம் காஷ்யப முனிவர், அதிதி தம்பதியினருக்கு புதல்வாரக மிக குள்ளமான ரூபத்தில் ஆவணி மாதத்தில் துவாதசி திதியில் திருவோண நட்சத்திரத்தில் (இன்று துவாதசி திருவோணம்.) நிகழ்ந்தது. இதன் பிரதான நோக்கம் #மஹாபலி_சக்கரவர்த்தியை ஆட்கொள்வதே ஆகும். தசாவதாரங்களில் வாமன அவதாரம் விசேஷமானது.
மஹாபலிக்கு மாத்திரமல்ல, இதன் மஹத்துவம் புரிந்தவர்களுக்கு இன்றளவும் ஞானத்தை வழங்கிடக்கூடியது. அன்று மஹாபலிக்கு என்ன உணர்த்தினாரோ அது இன்றளவும் நமக்கும் பொருந்தும். அதை முன்னிட்டே இன்றளவும் கேரளத்தில் “#ஓணம்” பண்டிகையாக மாபெரும் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். நாளை நட்சத்திரம் பிரகாரம் திருவோணம், ஆதலால் நாளை கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அப்படி என்ன காட்டிக்கொடுத்தார் மஹாபலி சக்கரவர்த்திக்கு? அனைவரும் அறிந்த கதை ஒன்று தான் கதையாக மட்டுமே……, ஆனால் அதன் அர்த்தபாவத்தை அதில் பொதிந்த ஞானபாவத்தை உணரத் தவறி விட்டனர். கதை… மூன்று அடி மண் கேட்டார் வாமனன் உலகிலே, மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே!
பாடலாகவே பிரசித்தி பெற்றது. ஆனால், அதன் தாத்பரியம் வெகு நுட்பமானது. மிக குள்ளமான வடிவத்தில் பகவான் மஹா பலி சக்கரவர்த்தி நடத்தும் ராஜ ஸூய வேள்விக்கு யாசகம் பெற வருகிறார்.
அப்படி தர வேண்டும் என்பது அந்த யாகத்தின் நியமம். ஓர் சக்கரவர்த்தியாக தன் குடி மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து இருக்க வேண்டும், அப்படி ஏதும் குறையிருப்பின் அதனை யாக சாலைக்கு வந்து பூர்ணாஹூதி சமயத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
அப்படி அவரின் குடிமக்களில் ஒருவராக, அந்தண சிறுவனாக வாமன மூர்த்தி யாசகம் பெற அங்கு வருகிறார். இவரின் தோற்றப் பொலிவு மஹா பலியை ஈர்க்கிறது. என்ன தர வேண்டும் என்று தானாக முன்வந்து கேட்கிறார். சிறுவனோ தனக்கென மூன்று அடி தானமாக தன் பாதத்தில் அளந்த படி வேணும் என்கிறார்.
சிறு குழந்தை கேட்க தெரியாமல் விளையாட்டு போக்கில் கேட்கிறது என்று முதலில் நினைத்து தன்னிடம் இருந்த சிறந்தவற்றை பலதும் கொடுத்து, பாலகனுக்கு உண்ண கனிவகைகளை கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்கிறார். ஆனால் வாமன மூர்த்தியோ தனக்கு #மூன்றடி தானமாக தந்தால் போதும் என்கிறார்.
இதில் ஏதோ சூதுள்ளதாக குலகுருவான சுக்ராச்சாரியார் மஹா பலியை எச்சரிக்கை செய்கிறார். வாமனன் தீர்க்கமாக தனக்கு மூன்று அடி மாத்திரம் போதும், அதனை மனம் உவந்து தந்தால் சரி, இல்லை என்றால் பரவாயில்லை தான் போவதாக சொல்ல…… தன் மனதினை கொள்ளைக்கொண்ட பாலகனை வெறும் கையோடு அனுப்பிட மனம் வராத மஹா பலி., சரி தந்தோம், இதனோடு கூடவே தன் ராஜ்ஜியத்தில் ஓர் பகுதியும் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
ஆனால் வாமன மூர்த்தி அது எல்லாம் வேண்டாம், தான் அந்தணன் என்பதனால் சக்கரவர்த்தி தன் கரத்தினால் நீர் வார்த்து #மூன்றுஅடிஅளப்பதை மாத்திரம் தந்தால் போதுமானது என்கிறார். இந்த நிகழ்வில் சுவாரசியம் ஏற்பட அங்கு உள்ள அனைவரும் ஆர்வமுடன் என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பிக்கின்றனர்.
இதனிடையே இதற்கு சரியென்று ஒப்புக்கொள்கிறார் மஹா பலி. இப்படி செய்தால் தகாது என்று இதனை குலகுருவான சுக்ராச்சாரியார் தடுக்கிறார். ஆனால் அவர் தடுத்தும் கேளாமல், மஹாபலி தன் கிண்டியில் இருந்து நீர் வார்த்து தானமாக கொடுப்பதற்கு சம்மதிக்கிறார். அதன் படியே செய்கிறார்.
வாமன மூர்த்தி தன் கைகளால் நீர் ஏந்தி இந்த தானத்தை பெற்றதும், அளக்க தன் ஒரு கால் பாதத்தை எடுத்து வைத்து மஹாபலி சக்கரவர்த்தியே, இது எமக்கு சொந்தமானது அல்லவா என்கிறார். ஆமாம் என்கிறார் மஹாபலி.
இங்கு தான் வாமன மூர்த்தி சொல்வது தான் ஞான சத்திய வார்த்தை, தன் பாதத்தில் கீழே உள்ள மண் மாத்திரம் தனித்து பிரித்து எடுக்க முடியாதபடி இந்த பூமி முழூமைக்கும் அது பரவி, தாங்கி நிற்கிறது அல்லவா, ஆதலால் இந்த பூமி முழுவதும் தன் ஒரு அடி அளத்தலில் அடங்குமல்லவா, என கேட்கிறார்.
மஹா பலி யோசிக்கிறார். மூன்று அடி என்று தான் சொன்னார் ஆனால் அதில் ஓர் அடி எத்தனை அடி ஆழம் என்று சொல்லவில்லை. அது போல் எடுத்து வைத்த பாதத்தின் கீழ் உள்ள மண் எத்தனை அடி ஆழத்தில் என்று சொல்லாததாலும், வாமனன் மூர்த்தியின் வாதம் படி தானாக தனித்து பிரித்து எடுக்காதவரை அவை பூமியின் ஓர் அங்கம் தான். ஆதலால் அவர் வாதம் படியே அவர் சொன்னது போலவே அந்த ஒரு அடியில் பூமி முழுவதும் அளந்ததற்கு சமம் என்று ஒப்புக் கொள்கிறார்.
அடுத்த படியாக தன் முதல் கால் தடத்தில் ஊன்றி நின்று தனது அடுத்த பாதத்தை மேல் நோக்கி வானம் பார்த்து உயர்த்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் தன் இந்த பாதத்தில் அளந்த படியால் அவை முழுமையாக தான் அளந்ததற்கு சமம் அல்லவா என் கேட்கிறார்.
மஹா பலி மறுபடியும் யோசித்து பார்க்கிறார். இந்த பிரபஞ்சம் என்பது எல்லையற்றது, அப்படி எல்லையற்ற பிரபஞ்சம் இந்த புவி மேற்பரப்பில் மாத்திரம் அல்ல இந்த பூமியின் மண் பரப்பின் மேல் என்பதே பிரபஞ்சம் தான்., காரணம் பிரபஞ்சத்தின் ஒர் துளியாக பூமி இந்த பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது. அதனால் மண் பரப்பின் மேல் என்றாலேயே அது பிரபஞ்சம் தான் இந்த வாதப் பிரகாரம். ஆக பிரபஞ்சம் முழுவதும் அந்த ஓர் அடி அளத்தலில் அடங்கும் என்று உணர்ந்து ஒப்புக்கொள்கிறார்.
ஆக இரண்டு அடிகளில் இந்த பூமி, பிரபஞ்சம் அளந்த பின் மூன்றாம் அடியாக அளப்பததற்கு ஏது இடம் என்று கேட்கிறார் வாமன மூர்த்தி, மஹாபலி சக்கரவர்த்தியிடம். இந்த வாதத்தில் அதிர்ச்சி அடைந்த மஹாபலி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு ஓர் உண்மை புரிய வருகிறது, #ஞானம் பிறக்கிறது. இந்த பூமி, அந்த பிரபஞ்சம் என இந்த இரண்டையும் கடந்து தனக்குள்ளே தன்னாலேயே சிருஷ்டக்கப்பட்ட #தான் என்ற ஓர் உலகம் இருப்பது புரிய வருகிறது. அதனை அதாவது தனக்குள்ளே சிருஷ்டக்கப்பட்ட உலகத்தை மூன்றாவது அடியில் அளந்து கொள்ள தன் தலை தாழ்த்திக் கொடுக்கிறார்.
இது தான் பாரதத்தின் சனாதன தர்மத்தின் சாராம்சம். மேற்சொன்ன எதிலாவது ஏதேனும் தவறு என்ற ஒன்று இருக்கிறதா? புரிந்து கொள்ள வேண்டியது மாத்திரமே அவசியம். ஆனால் உங்களுக்குள் பூக்கும் தருணத்தை, அதனை உணரும் அற்புதமான கணத்தை, வாழ்வியல் உன்னதத்தை, இவ்வளவு அழகாக, ஆழமாக இந்த உலகில் வேறு யாரும் சொல்லி தர வில்லை என்பதனை நன்கு நினைவில் கொள்ளுங்கள்.
இப்படி சொல்லலாம் , சனாதன தர்மம் என்பது நெல் மணிகள் போன்றது, இன்றைய மற்றைய மதங்கள் அரிசி போன்றது. இன்றைய தேவைக்கு மாத்திரமே பயன்படுமே தவிர அதனால் அதிலிருந்து மீண்டும் அரிசியினை உற்பத்தி செய்திட முடியாது.
ஆனால் நெல் மணிகள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும், உற்பத்தி செய்திட முடியும். காலங்காலமாக பயன் தரும். உடனடி தேவைக்கும் நீங்கள் அதனை பக்குவப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.
ஒரு வேளை உணவா! தலைமுறைக்கும் உணவா !! என்பதனை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அன்னிய ‘ஆவி’ எந்த ‘மார்க்கத்திலும்’ பயன் தராது என்பது மாத்திரம் நிச்சயம்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி… இப்படியாகத்தான் ஆண்டாள் அந்த வாமனனை கொண்டாடுகிறாள்.
ஆவணி மாதத்தில் வரும் வளர் பிறை துவாதசி திதியில் திருவோணம் நட்சத்திரத்தில் வாமன மூர்த்தி திருவதாரம் நடந்தது. நேற்று துவாதசி, இன்று திருவோணம்.
வாமன மூர்த்தி இரண்டு சொரூப ரூபங்களை கொண்டது. ஒன்று சிறிய குழந்தை வடிவில். மற்றொன்று திருவிக்கிரமாவதாரம். இதில் திருவிக்கிரமாவதாரம் ஆசைக்காக….அது என்னமா உலகை அளந்தீயாமே ….. எனக்கு காட்டு நானும் பார்க்கணும் அப்படின்னு #மிருகண்ட_மகரிஷி இந்த கலியுகத்தில் கேட்க அவரின் ஆசைக்காக காட்டின சொரூபம் திருவிக்கிரமாவதார ரூபம். இது நடந்தது திருக்கோவிலூர் எனும் திவ்ய தேசத்தில். பல வகைகளில் ஏற்றமான ஸ்தலம் இது.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆணி வேரான ஆழ்வார்களில் முதல் மூவரை ஒன்றாக்கிய ஷேத்திரம் இது. பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்று. மிருகண்ட மகரிஷி ஆசிரமத்தின் முதல் மூவரும் சந்தித்துக் கொண்ட இடைக்கழியே இன்று உள்ள கர்ப்பகிரகம்., மூலஸ்தானம். மூலவர் மர சிற்ப ரூபம். கொள்ளை அழகு.
இங்கு மட்டுமே மஹாபலி சக்கரவர்த்தி தன் பிள்ளை #நமூச்சியுடன் காட்சி கொடுக்கிறார்.நம் நேற்றைய பதிவில் யாசகம் பெற்ற நிலை வரை பார்த்தோம் அல்லவா? அதில் வாமனனுக்கு தன் தலை தாழ்த்தி தன்னுள் தான் உண்டாக்கின உலகத்தை மூன்றாவது அடியில் அளந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார் மஹாபலி சக்கரவர்த்தி. இது கதை சொல்லும் என்ன குறியீடு என்று பார்த்தோம்.
நிஜத்தில் நாம் காணும் இந்த உலகை தாண்டி நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே ஓர் உலகம் உள்ளது என்று காட்டிக்கொடுக்கிறார். இஃது இந்த உலகில் காலடி வைத்து அதில் ஊன்றி நின்று தன் லௌகீகமான காரியங்களினால் ஏகப்பட்ட அனுபவங்களை உள்வாங்கி நமக்கே. நமக்கு என்று பிரத்யேகமான உலகம் ஒன்றை ஞாபகம் என்ற போர்வையில் சிருஷ்டித்து வைத்து கொண்டு உள்ளோம்.
நாம் ஒவ்வொருவரும் இப்படி தான். அவரவர்களுக்கென்று என்று பிரத்யேக உலகம் உள்ளது. இவை அனைத்திலும் அவன் திருவடி பாதம் பட வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். இந்த ஞானம் தங்களுக்கு வேண்டும் என்பதற்காகவே இந்த திருவிழா கொண்டாடுகின்றனர்., #கடவுள்_தேசத்தில்…… கேரள மாநிலத்தில்.
ஓர் சுவாரசியம் சொல்வர். தானகவே முன் வந்து தானம் கொடுத்தாலும், தன் குருவான சுக்ராச்சாரியார் வார்த்தை மீறியதாலும் அந்த சம்சயம் மஹாபலியை பின் தொடர்ந்தது.
அடுத்த பிறவியில் கர்ணனாக பிறப்பெடுத்த போதும் இது தொடர்ந்தது அன்று சொல்வர். இஃது பாரத போர் சமயத்தில் வெளிப்பட்டது. கீதை கேட்ட அர்ஜுனனுக்கு கிடைக்காத பேறு கர்ணனுக்கு கிடைத்தது. அது #விஸ்வரூப_தரிசனம்.
அதுவும் எப்படி? கொடுத்து கொடுத்து பழகிய கர்ணனுக்கு தான் கொடுக்கிறேன் தானம் கொடுக்கிறேன் என்ற எண்ணம் மாத்திரம் வலுப்பெற்று நின்றது அவனுள். அன்றே மஹாபலியாக தன்னையே கொடுத்தவன் ஆயிற்றே பல ஜன்மாந்திர வாசனை பின் தொடர்ந்தது. தான் தானம் கொடுப்பது என்று எண்ணம் விடாமல் பற்றி இருந்தான். இது அவரை…… கர்ணனை அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுத்து கொண்டே இருந்தது. இதனை புரிந்து கொண்ட கண்ணன் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டுவதை விட்டுவிட்டு கர்ணனிடம் யாசகம் கேட்டு பெற வந்தார், அதுவும் எப்படி கிழ வடிவில்…. ஏன்?
இந்த ஜன்மாந்திர பந்தம். குழந்தையாக முன்பு ஒரு காலத்தில் வாமனனாக வந்த அவரிடம் யாசகம் பெற்றதை ஞாபக படுத்திடுகிறார்.
தனக்கு மறுபடியும் யாசகம் வேண்டி நிற்கிறார். யார் எது கேட்டாலும் கொடுப்பது என்று சங்கல்பம் கொண்ட கர்ணன் இந்த நிலையில் தன்னிடம் ஏதும் இல்லையே என்று பரிதவிக்கின்றார்.
அன்று மூன்று அடி அளக்க பரிதவித்தப்படியே இன்றும் இப்பிறவியில் இருக்கிறார். இந்த இடத்தில் கண்ணன் சொல்வது #ஞானவார்த்தை. இது வரை நீ செய்த தர்ம பலன்கள் அனைத்தும் எனக்கு தானமாக தந்துவிடு என கேட்கிறார். அதாவது கொடுக்க வேண்டும்….. கொடுக்க வேண்டும்….. எதை கேட்டாலும் கொடுக்க வேண்டும் , எனும் நினைப்பை தானமாக கொடு என கேட்கிறார்.
இது எப்படி புரிந்து கொள்ள வேண்டியது என்றால் ஒரு புல் கட்டை காட்டி மாடு பிடித்து வர, வந்த பின்னர் அந்த புல் கட்டை உண்ணக்கொடுத்து விட்டால்…. பின்னர் மாடு எப்படி வந்தது என்று கேட்கும் சமயத்தில் புல் காட்டி அழைத்து வரப்பட்டது என்று சொல்லும் காலத்தில் புல் எங்கே என்று கேட்டால் மாடு தின்றுவிட்டது என்று சொல்வது போல் இஃது.
ஆக மஹாபலி முதல் நிலை என்றால் கர்ணன் அடுத்த நிலை. இந்த நிலையில் அனுபவிக்கவே மிருகண்ட மகரிஷி பேரார்வம் கொண்டு கேட்கிறார். கண்ணனும் காட்டிக்கொடுகிறார். ஆம் கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்று தான் திருக்கோவலூர். அது போலவே இங்கு திருவிக்கிரமாவதார ரூபத்தில் வலது கையில் சங்கு ஏந்தி இருப்பார் வழக்கத்திற்கு மாறாக. சங்கநாதம் மட்டுமே தம்முடைய பங்கு பாரத போரில் என்று காட்டிக்கொடுக்கிறார்.
இதே ரூபத்தினை திருநீர்மலையில் மஹாபலி சக்கரவர்த்தயிடம் கேள்வி கேட்கும் நிலையில் சேவை சாதிக்கிறார். இரண்டு விரல் ஒரு பக்கம் அளந்ததை சொல்ல, ஒரு விரல் நீட்டி மீதி எங்கே என்று கேட்பது போல் இருக்கும். சனாதன தர்மம் இப்படி தான் பாடம் நடத்தி கற்றுக் கொடுகிறது. உணரந்து ஒப்புக்கொள்கிறவர்கள், அதில் அமிந்து ஆனந்தித்து இருக்கிறார்கள்.
இவ்விதமான ஞானம் ஏற்படுவதை காணவே ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நாமும் இந்த உள்ளபாங்கினை பெற மனமார பிரார்த்தித்து கொள்வோம்.
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்