அறப்பளீஸ்வர சதகம்: பிறப்பால் அமைவது..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

பிறவிக்குணம் மாறாது

கலங்காத, சித்தமும், செல்வமும், ஞாலமும்,
கல்வியும், கருணை விளைவும்,
கருதரிய வடிவமும் போகமும், தியாகமும்,
கனரூபம் உளமங் கையும்,
அலங்காத வீரமும், பொறுமையும், தந்திரமும்,
ஆண்மையும், அமுத மொழியும்,
ஆனஇச் செயலெலாம் சனனவா சனையினால்
ஆகிவரும் அன்றி, நிலமேல்
நலம்சேரும் ஒருவரைப் பார்த்தது பெறக்கருதின்
நண்ணுமோ? ரஸ்தா ளிதன்
நற்சுவை தனக்குவர வேம்புதவ மேநெடிது
நாள்செயினும் வாரா துகாண்!
அலங்காரம் ஆகமலர் கொன்றைமா லிகைசூடும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே.

அழகாக மலர்ந்த கொன்றை மாலையை மிலைந்த பெரியோனே!, அருமை தேவனே!, குழம்பாத மனமும், நல்ல பேறும், அறிவும், கலையும், அருட்பெருக்கும், நினைவுக்கரிய உருவ அழகும் நுகர்ச்சியும் (அனுபவமும்),
கொடையும், பேரழகுடைய மனைவியும், அசைவில்லாத துணிவும், (பிறர் குற்றம்) பொறுத்தலும், சூழ்ச்சியும்,ஆளுந்திறனும், இனிய சொல்லும், ஆன ஆகிய இவை யாவும் பிறப்பின் தொடர்பினால்
இயற்கையிலே உண்டாகி வருமே அல்லாமல், உலகில் நலம் பெற்று இருக்கும் ஒருவரைக்கண்டு, அந்த இயல்பை அடைய நினைத்தால்
ஆகுமோ? இரஸ்தாளி வாழையின் நல்ல சுவை தனக்குக்கிடைக்க வேண்டி வேம்பு நீண்ட நாள் தவம் புரிந்தாலும் கிடைக்காது.

நல்வினையால் இயல்பாகவே அமையவேண்டிய இவை
செயற்கையால் அமையா.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply