அறப்பளீஸ்வர சதகம்: யாரோடு எவ்வாறு பழக வேண்டும்..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

ஒழுகும் முறை

மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு
மாறாத நல்லொ ழுக்கம்;
மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள
வார்த்தைவழி பாட டக்கம்;
காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
காலத்தில் நயபா டணம்;
கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்
கருணைசேர் அருள்வி தானம்;
நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்;
நெறியுடைய பேர்க்கிங்கிதம்;
நேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு
நேரலர் இடத்தில் வைரம்
ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம
தையனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

எம் தலைவனே!, அருமை தேவனே!, பெற்றோர்களிடம் உள்ளம்
நிறைந்த அன்பும் குழைவும் இடையறாத ஒழுக்கமும் வேண்டும், பொருந்திய
ஆசிரியரிடம் இனிய முகமனுடன் கூடிய பேச்சும் வழிபாடும் அடக்கமும்
வேண்டும், காது வரையில் நீண்ட கரிய கண்களையுடைய மனையாளிடமோ படுக்கையில் இனிய பேச்சு வேண்டும்.
நாடி வருகின்ற பெரியோர்கள் வயது முதிர்ந்தவர்களும் வறியோர்களும்
ஆகிய இவர்களிடம் மிகுதியும் இரக்கமும் பெருங்கொடையும் வேண்டும்,
அறநெறி வழுவா அரசரிடம் மிகுந்த அச்சமும் வணக்கமும் வேண்டும், நன்னெறி செல்வோரிடம் இனியன செய்தல் வேண்டும், நட்புடைய உறவினரிடம் உளங்கனிந்த அன்பு வேண்டும், பகைவரிடம் மாறாத சினம் வேண்டும், பழைய மனுவினால் எழுதப்பெற்ற நூல் கூறும் முறைமை இதுவாகும்.

 இங்குக் கூறியவாறு நடந்துகொள்வது உலகியலுக்கு நலந்தரும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply