தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
சிவ நாமத்தின் பொருள்:-
‘சிவ’ என்ற சொல்லுக்கு மங்களம், சுபம், நன்மை, பாதுகாப்பு, சுத்தம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் யாருடைய சுபாவமோ, யாரால் இவை நமக்குக் கிடைக்குமோ அவரே சிவன்! இன்னொரு பொருளில் ‘சிவன்’ என்றால் எங்கும் இருப்பவர், அனைத்துக்கும் ஆதாரமானவர் என்ற பொருளையும் சாஸ்திரம் தெரிவிக்கிறது .
சோர்ந்து போனவர்களுக்கு சாந்தியளிக்கும் ஓய்விடம் சிவன் என்ற பொருளும் உள்ளது. ஓய்ந்துபோன ஜீவன் எந்த தத்துவத்தைச சென்றடைந்தால் அமைதி பெறுவானோ அந்தத் தத்துவத்தின் பெயர் சிவன். ‘சிவ’ என்ற சொல்லுக்கு இத்தனை ஆழமான பொருள் உள்ளது.
சிவனை வணங்கும் போது இவை அனைத்தையும் பெறுகிறோம்! இப்படிப்பட்ட நன்மைகளைக் அளிக்கும் ராத்திரி ஆதலால் இதற்கு சிவராத்திரி என்று பெயர். மங்களம் அளிக்கும் ராத்திரி இது. அமைதி அளிக்கும் ராத்திரி. ஓய்வு அளிக்கும் ராத்திரி. இந்த ஓய்வு உடலளவில் சோர்ந்து போன மனிதன் பெறும் ஓய்வு அல்ல!
ஜீவன் ஜனன மரண பரம்பரையில், சம்சார தாபத்திரயங்களால் (ஆதி பௌதிகம், ஆதி தெய்விகம், ஆத்யாத்மிகம் என்ற மூன்று வித தாபங்கள், வருத்தங்கள்) சோர்ந்து போனபோது அவனுக்கு சாந்தி அளிப்பவர் பரமாத்மா மட்டுமே! அந்த சாந்தியின் பெயரே மோட்சம்! மோட்சத்தை அளிப்பவர் பரமசிவன்! அதாவது இவ்வுலகில் சுகமும் சாந்தியும் அளிப்பதோடு மிக உயர்ந்ததான மேலுலக மோட்சத்தையும் அளிப்பவர் சிவன்!
சிவனின் அருளைப் பெறுவதற்கு பல ஆன்மீக சாதனைகள் உள்ளன. அவற்றுள் ‘சிவ விரதம்’ ஒன்று! சிவ விரதங்கள் பல உள்ளன. சோமவார விரதம், கிருஷ்ணாஷ்டமி விரதம், ஏகாதசி விரதம், பிரதோஷ விரதம் போன்றவை. மாத சிவராத்திரி என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருகிறது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி சிவனுக்கு உரிய விரதங்களில் மிக உயர்ந்தது.
மகா சிவராத்திரி:-
மகா சிவராத்திரி மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருகிறது. மகா சிவராத்திரி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் சம்பூரணமாக ஓராண்டு காலம் சிவ வழிபாடு செய்த பலனை அருளக் கூடியது. இதில் ஆச்சரியம் எதுவுமில்லை! சிவராத்திரி தொடர்பான புராணக் கதைகள் மிகவும் இனிமையாகவும் தத்துவத்தோடு கூடியவையாகவும் உள்ளன.
அக்னி லிங்கம்:-
பரமேஸ்வரன் தன்னைத்தானே மகா அக்னி லிங்கமாக வெளிப்படுத்திக் கொண்ட நேரம் மார்கழி மாதம் ஆருத்ரா நட்சத்திரத்தின் போது என்று சிவ புராணம் வர்ணிக்கிறது. மகா அக்னி லிங்கமாக வெளிப்பட்டார். அப்போதுதான் பிறந்தார் என்றல்ல! பரமேஸ்வரன் எப்போதும் இருப்பவர்! சர்வ வியாபகர்! சிருஷ்டி இல்லாத போதும் இருக்கும் தத்துவத்தின் பெயரே சிவதத்துவம்! எதுவுமே இல்லாத காலத்திலும் யார் இருப்பாரோ அவரே சிவன்! அவரிடம் இருந்து சகல ஜகத்தும் தோன்றியது. சர்வ ஜகத்திலும் சைதன்யத்தை அளிப்பாளராக சிவன் உள்ளார். சர்வ ஜகத்தும் இறுதியில் அவரிடமே லயம் ஆகிறது! இது சிவதத்துவம்.
சிருஷ்டிக்கு முன்பும் உள்ளவரான சிவன் படைப்பின் தொடக்கத்தில் தன்னிடமிருந்து தோன்றிய பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தன் தத்துவத்தை வெளிப்படுத்தி ஒரு மகா அக்னி ஸ்தம்பமாக ஆவிர்பவித்தார். அந்த மகா அக்னி ஸ்தம்பத்தில், அடியும் இடையும் முடியும் இல்லாததாக, எங்கும் நிறைத்திருப்பதாக சாசுவதமான சிவதத்துவம் வெளிப்பட்டது. இதற்கு அக்னி லிங்கம் என்ற பெயரும் உண்டு. லிங்கம் என்றால் லீன சுபாவம் கொண்டது. பரமேஸ்வரன் லிங்கத்திடம் லீனமாகி மகா ஜோதி ஸ்வரூப வடிவில் தரிசனம் அளித்தார்.
அப்போது பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த மகா அக்னி லிங்கத்தின் அடியையும் முடியையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முயற்சித்தனர். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து லிங்கத்தின் அடியை அறிவதற்காக பூமியை தோண்டிக் கொண்டு கீழே சென்றார். பிரம்மா ஹம்ச அவதாரம் எடுத்து மேலே பறந்து சென்றார். இருவருமே அடிமுடி அறிய இயலவில்லை. பிரம்மா மட்டும், தான் முடியை அறிந்ததாக பொய்யுரைத்தார். ஆயின் அக்னிலிங்கம் ஜடமல்ல. அது ஈஸ்வர ஸ்வரூபம்! அதனை பிரம்மா அறியவில்லை. “நான் முடியைப் பார்த்தேன்!” என்று அசத்தியம் உரைத்து, “யார் சாட்சி? யாருக்குத் தெரியப்போகிறது?” என்று எண்ணினார். ஆனால் அத்தனை பெரிய அக்னி லிங்கமாகத் தோன்றிய சிவனே சாட்சியாக இருப்பதை பிரம்மா உணரவில்லை. ஐந்து முகங்களோடும் பத்து புஜங்களோடும் அக்னி ஸ்தம்பத்தில் இருந்து சிவன் வெளிப்பட்டு பொய்யுரைத்த பிரம்ம தேவரின் தலையைத் துண்டித்தார் என்று புராணக் கதை விவரிக்கிறது. பிரம்ம தேவருக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் நான்கு புறமும் இருக்கையில் மேலே பார்த்தபடி ஒரு தலை இருந்தது. அந்தத் தலையால் பொய்யுரைத்ததால் அதனை பரமேஸ்வரன் கிள்ளி எறிந்தார். அதன்பிறகு பிரம்மாவும் விஷ்ணுவும் சிவ தத்துவத்தை அறிந்து கொண்டு வணங்கினர். இது சிவ புராணம், லிங்க புராணம், பத்ம புராணம், கூர்ம புராணம் ஆகியவற்றில் காணப்படும் கதை.
இந்தக் கதையின் பொருள் என்ன?
“சிருஷ்டி, ஸ்திதி, லயம் இவை பிரபஞ்சத்தின் முடி இடை அடி. ஆனால் இம்மூன்றுக்கும் காரணமான பரமேஸ்வரனுக்கு முதல் இடை கடை இல்லை. அதைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது வீண் முயற்சி! கடவுளுக்கு ஆதி எங்கே? அந்தம் எங்கே? ஆனால் படைத்தலும் காத்தலும் செய்யும் அகங்காரம், சிருஷ்டிக்குத் தொடர்பான சிந்தனை செய்வதால் சிருஷ்டிக்கு அதீதமானவற்றை அறிய முடியாமல் போனது!” என்பதை தெரிவிப்பதே பிரம்மாவும் விஷ்ணுவும் தேடினார்கள் என்று கூறுவதன் உட்பொருள். அது தானே தவிர, பிரம்மாவையும் விஷ்ணுவையும் குறைவாக கூறுவது இங்கு உத்தேசம் அல்ல! ஆனால் பிரம்மாவும் விஷ்ணுவும் இந்த பிரயத்தனம் செய்து தோல்வி அடைந்து பின்னர் சிவனின் அனுக்கிரகத்தைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் தன் பஞ்சாக்ஷரி மந்திரத்தை அவர்களுக்கு உபதேசம் செய்தார். சிவலிங்க வழிபாடு என்பது அப்போதிலிருந்து தொடங்கியது. எப்போது பிரம்மாவும் விஷ்ணுவும் சிவ தத்துவத்தைத் தெரிந்துகொண்டு சிவலிங்க வழிபாடு செய்தார்களோ அன்றைய தினம் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி! இது சிவ புராணம் கூறும் பிரமாணமான அம்சம்!
சிவலிங்க வழிபாடு எப்போது தொடங்கியது?
முதன்முதலாக பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனை வழிபட்ட நாளே மகா சிவராத்திரி நாள் எனப்படுகிறது அன்றைய தினம் மிகப் பவித்ரமானது. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் சிவ தத்துவம் தெரிவிக்கப்பட்ட நாள் ஆதலால் அன்றைய நாளை மிக முக்கியமாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கால நியமம் நிர்ணயிக்கப்பட்டது.
பிரம்மா, விஷ்ணுவின் மூலம் தேவதைகளும் சிவலிங்க வழிபாட்டின் தத்துவத்தை அறிந்து கொண்டு அவர்களும் சிவ அர்ச்சனை செய்தார்கள். அதனை தவச் சக்தியால் தரிசித்த ரிஷிகள் தாங்களும் அறிந்து கொண்டு சம்பிரதாய முறையில் சிவ வழிபாடு செய்வது பரம்பரையாக தொடர்ந்தது! இது சிவலிங்க வழிபாட்டின் தொடக்கமும் பரம்பரையாகத் தொடரும் முறையும் பற்றிய வரலாறு!
மகா சிவராத்திரியன்று யார் சிவலிங்க வழிபாடு, சிவத் தியானம், சிவ கீர்த்தனை, சிவ ஸ்மரணை செய்வார்களோ அவர்கள் சிறப்பான பலன்களை பெறுவர் என்று அனைத்து சாஸ்திரங்களும் அறுதியிட்டு உரைக்கின்றன. சாட்சாத் பரமேஸ்வரனே கூறுவதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
“மா தர்ம வ்ருத்தி காலோயம்” என்று இன்றைய விரதத்தின் வைபவத்தை பரமேஸ்வரனே போற்றுகிறார்! அதாவது “என் தர்மங்கள் விருத்தி அடையும் காலம் இது!” என்கிறார் .
சிவ தர்மங்கள்:-
சிவ தர்மங்கள் என்றால் என்ன? சிவனை உத்தேசித்து செய்யும் நல்ல செயல்கள் அதாவது சிவனை பூஜிப்பது, சிவனை கீர்த்தனை செய்வது, சிவ க்ஷேத்திர யாத்திரை செய்வது, சிவன் கோயில்களுக்குச் சென்று சிவலிங்கத்தை தரிசிப்பது, அபிஷேகம் செய்வது, சிவ நாம ஸ்மரணை செய்வது, சிவ கதைகளைக் கேட்பது இவையெல்லாம் சிவதர்மம். இவற்றை எப்போது செய்தாலும் மிகவும் நல்லது. அதில் ஐயமில்லை! ஆனால் மகா சிவராத்திரியன்று செய்தால் அது பல மடங்கு பலன் அளிக்கும். மீதி நாட்களில் தெரிந்து செய்தால்தான் புண்ணியம் கிடைக்கும். மகாசிவராத்திரியன்று தெரியாமல் செய்தாலும் சிறப்பான பலனளிக்கும் என்று பல புராணக் கதைகள் நமக்கு தெரிவிக்கின்றன!
முற்பிறவியில் ஒரு வேட்டைக்காரனாக இருந்த குகன் மகாசிவராத்திரியன்று அறியாமல் செய்த சிவ பூஜையால் மறுபிறவியில் குகனாகப் பிறந்து இராமபிரானுக்கு பிரியமானவனாக ஆனான். சிவ பக்தர்களுக்கு மகா சிவராத்திரியின் மகிமையைக் கூறுவதற்கு ரிஷிகள் குகனின் கதையைக் கூறியுள்ளார்கள்.
மகா சிவராத்திரியன்று என்ன செய்ய வேண்டும்?
இன்று காலையிலிருந்து உபவாசம் இருந்து (அல்லது உணவில் நியமங்களை மேற்கொண்டு) கண் விழிக்கும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். மாலை முதல் மறுநாள் உதயம் வரை சிவபூஜை செய்ய வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை சிவ வழிபாடு செய்து, அவரவர் சக்தியைப் பொறுத்து சிவ லிங்கார்ச்சனை தானாகவே செய்யலாம். அல்லது பிறரைக் கொண்டு செய்விக்கலாம். ஆலயத்தில் பூஜையின்போதும் அபிஷேகத்தின் போதும் தரிசனம் செய்யலாம். சிவன் கோயிலுக்குச் சென்று சிவ நாம ஸ்மரணை செய்து இன்றைய நாளை கழிக்க வேண்டும். சிவமயமாக வாழவேண்டும்.
பரமேஸ்வரன் சங்கரன், மிருத்யுஞ்ஜெயன் ஆதலால் இகம், பரம் இரண்டையும் அளிக்கக் கூடியவன். பிரகிருதி முழுவதும் சிவனின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால்தான் “சிவனின் ஆணை இல்லாவிட்டால் சிற்றெறும்பு கூட அசையாது” என்ற பழமொழியும் உள்ளது. நாம் இயற்கைக்கும் காலத்திற்கும் அடங்கி நடக்கிறோம். காலமும் இயற்கையும் சிவனுக்கு அடங்கியுள்ளன. இயற்கையிடமிருந்தும் காலத்திடமிருந்தும் நமக்கு எது தேவையானாலும் இவ்விரண்டும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளனவோ அவரை அடைக்கலம் புக வேண்டும். அனைத்தும் யாருடைய வசத்தில் உள்ளனவோ அவரே சிவன் என்கிறது சிவபுராணம்.
சிவனுடைய சக்தி:-
சிவனுக்கு இரண்டு சக்திகள் உள்ளன. ஆணையிடும் சக்தி, அனுக்கிரக சக்தி என்று இரண்டு சக்திகள். அவ்விரண்டு சக்திகளும் ஒன்றிணைந்த பெயர் பராசக்தி! அந்த பராசக்தியே அம்பிகை. அம்பாள் சிவனுடைய சக்தி. சக்தியோடு சேர்ந்த சிவனை சாம்பசிவன் என்று வணங்குகிறோம். மகா சிவராத்திரியன்று சாம்பசிவ வழிபாடு மிகச் சிறப்பானது.
சிவலிங்கத் தத்துவம்:-
சர்வ ஜகத்தும் சிவ லிங்கத்திலேயே உள்ளது. சர்வ ஜகத்திலும் லிங்கமே உள்ளது. லீனமாக உள்ளதே லிங்கம்! பிரபஞ்சத்தில் லீனமாகி, பிரபஞ்சத்தை தன்னில் லீனம் செய்து கொண்ட சிவ தத்துவத்திற்கு லிங்கம் என்று பெயர்! இது அனந்த புவனமெங்கும் வியாபித்துள்ளது. ஆகாயத்தில் முழு விஸ்வமும் இருக்கையில் ஆகாயம் சிவனில் உள்ளது. ஆகாயத்திற்கும் முழுமையான விஸ்வத்திற்கும் யார் ஆதாரமோ, யார் ஆகாயத்தை விட சூட்சுமமாக ஆகாயத்திலும் வியாபித்து உள்ளரோ அவரே சிதம்பரநாதன்! அதுவே சிதாகாசம்! அது மகாலிங்கம்! அதனால்தான், “ஆகாசம் மகாலிங்கம்” என்று கூறப்படுகிறது.
மகா லிங்கத்திலேயே நாம் அனைவரும் உள்ளோம். மகாலிங்கத்திலேயே லிங்க ரூபத்தில் சிவன் உள்ளார். லிங்கத்திற்கு கண் மூக்கு செவி போன்ற உருவங்கள் கிடையாது. அது சர்வ வியாபகம். எங்கும் நிறைந்துள்ளது. சர்வ காரகன். அனைத்தையும் செய்யக்கூடியது. அதற்கு அடையாளமாக நாம் சிவலிங்க வழிபாடு செய்கிறோம். அதனால்தான் லிங்கம் ‘வ்ருத்தாகாரம்!’ அது எல்லை இல்லாத அனந்த குணத்திற்குக் குறியீடு!
அனந்த்தமான சிவனை சிவலிங்க வடிவில் ஆவாகனம் செய்து தியானம் செய்து வழிபடுகிறோம். கடவுள், பக்தனுக்கு அருளுவதற்காக பலப் பல வடிவங்களைத் தரிப்பார். “ப்ரம்ம ஜ்யோதி ஸ்வரூபஞ்ச பக்தானுக்ரஹ விக்ரஹம்” என்று போற்றப்படுகிறார். அவர் பிரம்ம ஜோதி! அதாவது மிகப்பெரியதாக எங்கும் பரந்து உள்ளதாக உள்ள பரஞ்சோதி சொரூபம்! ஜோதி என்றால் சைதன்யம் என்று பொருள்.
அப்படிப்பட்ட ஜோதி ஸ்வரூபமாக விளங்கும் இறைவன் பக்தர்களை அனுகிரகிப்பதற்காக பல வடிவங்களை எடுத்துள்ளார். அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், அதேபோல் பார்வதி கணபதி குமாரசுவாமியோடு கூடிய பரிவாரமூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி, ஆதி பைரவ மூர்த்தி, ஆதி கிராதமூர்த்தி… இவ்வாறு பரமேஸ்வரன் அனேக ரூபங்களை தரித்துள்ளார்.
சில இடங்களில் பிரசன்ன ரூபத்தோடு விளங்குவார். சில இடங்களில் பிரசண்ட ரூபத்தில் விளங்குவார். ஏனென்றால் படைப்பில் கடினம், சௌமியம் இரண்டுமே உள்ளது. தீவிரமான சக்தியும் அவருடையதே! சௌமியமான சக்தியும் அவருடையதே! இந்த தீவிர, சௌமிய சக்திகளை கோர, அகோர வடிவம் என்கிறோம். கோர வடிவம் உக்கிரமானது. அகோர வடிவம் மென்மையானது. இவ்விரண்டு வடிவங்களோடும் விளங்குகிறாரே தவிர உண்மையில் அவருக்கு யார் மீதும் கோபம் கிடையாது. யார் மீதும் பிரத்தியேகமான பிரேமையும் கிடையாது.
அவர் சார்ந்தமானவர். ஆனால் அவரவர் கர்மவினையைப் பொருத்து சிலரிடம் அவர் உக்கிரமாக தண்டிப்பது போல் தோற்றம் அளிப்பார். பாதுகாக்கும் போது சாந்தமாகத் தோன்றுவார். ஒரு அரசன் மக்களை பரிபாலனை செய்கையில் தர்ம ரட்சணையின் போது சௌமியமாகவும் அவர்களை தண்டிக்கும் போது உக்கிரமாகவும் இருப்பார். சர்வேஸ்வரனான பரமேஸ்வரனும் இரண்டு வித ரூபங்களில் தோன்றுவார். அதனால் பரமசிவனைப் பல வடிவங்களில் நாம் வழிபடுகிறோம்!
பிரம்ம முராரி சுரார்சித லிங்கம்:-
இவ்விதம் சிவதத்துவத்தை அறிந்து பிரம்மாவும் முராரியும் வழிபட்டனர் அவர்களுக்குப் பிறகு சுரர்கள் அதாவது தேவர்கள் வழிபட்டனர். இதனையே நாம் லிங்காஷ்டகத்தில், “ப்ரம்ம முராரி சுரார்சித லிங்கம்” என்று துதிக்கிறோம்.
அவர்கள் பூஜித்த சிவலிங்கத்தின் வடிவம் என்ன? “நிர்மல பாஷித சோபித லிங்கம்” இது, சிவலிங்கம் என்றால் என்ன என்று விவரிக்கிறது. அது எந்த வித மலினங்களும் இல்லாத சுத்தமான நிர்மலமான தத்துவம். ‘பாசித’ என்றால் ‘பிரகாசிக்கின்ற’ என்று பொருள். சைதன்ய மூர்த்தியான சிவன் ஜோதி வடிவமாக பிரகாசிக்கிறார். ‘சோபித’ என்றால் அழகானது என்று பொருள். படைப்பில் அனைத்திற்கும் அழகை அளிப்பது சிவ தத்துவமே!
சூரியனுக்கு ஒளி, தண்ணீருக்கு தாகத்தைப் போக்கும் சக்தி, சந்திரனுக்கு வெண்ணிலவு, காற்றுக்கு வீசும் குணம், பூமிக்கு பயிர் விளைவிக்கும் குணம், நம் கண்ணிற்கு பார்க்கும் குணம், காலுக்கு நடக்கும் இயல்பு… இவை இப்பிரபஞ்சத்தில் உள்ள சௌந்தர்யங்கள். இந்த அழகுகள் சிவனின் கருணைகள்! அவருடைய சக்தி அவ்விதம் வியாபித்துள்ளது. அப்படிப்பட்ட சக்தியால் பிரபஞ்சத்தை நடத்துவதால் ‘சோபித’ என்று துதிக்கிறோம்.
சிவனைச் சரணமடைந்தால் நமக்கு என்ன லாபம்?
“ஜென்மஜ துக்க விநாசக லிங்கம்” இந்த சம்சாரத்தில் நிகழும் அனைத்து வித அந்தகார இருளான துயரங்களையும் போக்கும் இயல்பு சிவ வழிபாட்டில் இருப்பதால், “தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்” என்று வணங்குகிறோம்.
‘தத்’ என்பதன் தத்துவ விளக்கம்:-
‘தத்’ என்றால் ‘அது’ என்று பொருள். இப்படி இருக்கும் என்று கூற இயலாத ‘நிர்வசனீயம்’ – ‘தத்’ என்பது. பிரபஞ்சத்தை இது இப்படி இருக்கும் என்று கூறமுடியும். ஆனால் பிரபஞ்சத்தை இயக்குபவரைப் பார்க்க முடியாது. அவரை ‘அது’ என்கிறோம்.
வேத மாதா, காயத்ரி மந்திரத்தில், “தத் சவிதுர்வரேண்யம்” என்று முதன்முதலில் ‘தத்’ என்ற சொல்லைக் கூறுகிறாள். ‘தத்’ என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட ‘தத்’ என்ற வடிவில் உள்ள சிவலிங்கத்திற்கு ‘பிரணமாமி!’ – வணங்குகிறேன். சதாசிவலிங்கம் – ‘சதா’ என்றால் எப்போதும் என்று பொருள். எப்போதும் சுபத்தை இடைவிடாமல் அளிப்பது. அப்படிப்பட்ட சிவ தத்துவத்தை நாம் இன்றைய நாளில் அறிந்துகொண்டு மனனம் செய்து வழிபடவேண்டும்.
ஆகார நியமம் மிக முக்கியமானது. அதேபோல் வாக் நியமமும் இன்று மிக இன்றியமையாதது. சொல்லைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஆபாசப் பேச்சுகளை பேசக்கூடாது. பிறரை தூஷிப்பது, வெறும் பேச்சு போன்றவை இன்றி, உண்மையாக, சாஸ்திர சம்மதமான சொற்களைப் பேச வேண்டும். அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே! மீதி நேரமெல்லாம் வாயால் சிவ ஸ்தோத்திர ஸ்மரணை, சிவ நாம ஸ்மரணை, சிவமந்திர ஜபம் இவற்றில் செலவிடுவது மிகவும் சிறப்பானது. சிவமயமாக இன்று ஒரு நாளை நாம் செலவழிக்க முடிந்தால் ஆண்டு முழுவதும் நமக்கு சிவம் அதாவது மங்கலம் கிடைக்கும். சுபம் விளையும்.
இதுவே சிவராத்திரி விரதத்தில் உள்ள சிறப்பு. “ஜென்மத்திற்கு ஒரு சிவராத்திரி!” என்றொரு சொலவடை உள்ளது. சரியாக கடைபிடிக்க முடிந்தால் பிறவியையே உய்விக்கக் கூடியது என்பதால், “ஒரு சிவராத்திரியையாவது சரியாகச் செய்தால் போதும்!” என்பது நம் முன்னோர் கூற்று.
பகவான் மனிதனை உய்விப்பதற்கு ஏற்படுத்திய சிறந்த வாய்ப்புகளில் ஒன்று மகா சிவராத்திரி விரதம்! இன்று யோக சாதனைக்குக் கூட மிகச் சிறப்பு உள்ளது. ஏனென்றால் ‘ராத்திரி, பகல்’ என்பதில் யோக சாஸ்திரப்படி… சாமானிய மனிதனுக்கு எது இரவோ அது யோகிக்குப் பகல்! அதேபோல் யோகிக்கு எது இரவோ அது சாமானியனுக்குப் பகல்! இதன் பொருள் என்னவென்றால்… நாம் விழித்திருக்கும்போது யோகி உறங்குகிறார். அவர் உறங்கும் போது நாம் விழித்திருக்கிறோம்.
உறங்குவது என்றால் ‘பொருட்படுத்தாமல் இருப்பது’ என்று பொருள். நாம் எங்கு தூங்குவோம் என்றால்… கடவுள் விஷயத்தில் தூங்குவோம். இதனை அறிய வேண்டும். பிரபஞ்ச விஷயத்தில் விழிப்போடு இருப்போம்! இதைத்தான் ‘பிரபஞ்சம் நமக்குப் பகல்! கடவுள் நமக்கு இரவு!’ என்று கூறுவர். இப்படி உள்ளது நம் நிலைமை!
ஆனால் யோகிகளுக்கு எப்படி இருக்கும் என்றால்… அவர்களுக்கு பிரபஞ்சம் இரவு! கடவுள் பகல்! அதாவது அவர்கள் கடவுள் விஷயத்தில் விழிப்புடன் இருப்பார்கள். உலக விஷயத்தில் உறக்கத்தில் இருப்பார்கள். அதுவே “நம் இரவு யோகிகளுக்கு பகல்’ என்ற கூற்றின் விளக்கம்.
மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்தசியான சிவராத்திரி இரவில் யோகிகள் விழிப்போடு இருந்து சிவ தரிசனம் செய்வர். நாமும் யோக மார்க்கத்தில் சென்று இன்று இரவு சிவஞானத்தை தெளிவாகப் பார்க்கும் சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மகாசிவராத்திரி பண்டிகையை முன்னோர் ஏற்படுத்தியுள்ளனர்.
ஜோதிர்லிங்கத் தலங்கள்:-
இதற்கு வாய்ப்பாக பாரத தேசத்தில் அனேக சிவ க்ஷேத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு க்ஷேத்திரமும் மிக மகிமை வாய்ந்தது. ஜோதிர்லிங்க வடிவில் பன்னிரண்டு கோயில்களில் சிவபிரான் குடிகொண்டுள்ளார். இவற்றுக்கு உப லிங்கங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஜோதிர்லிங்கம் என்றால் சிவன் தானாகவே வெளிப்பட்ட சுயம்பு லிங்கங்கள். சில ஆராம க்ஷேத்திரங்கள். சில பஞ்ச பூத க்ஷேத்திரங்கள். இவை தவசிகள் தவமியற்றி பகவானை அங்கு வரவழைத்து பிரதிஷ்டை செய்த தலங்கள். இவற்றை சித்த லிங்கம் என்பர். மனிதன் சாஸ்திரத்தின்படி பிரதிஷ்டை செய்த லிங்கங்களும் உள்ளன. சுயம்புலிங்கம், சித்த லிங்கம், மானுடப் பிரதிஷ்டை இம்மூன்றையும் இன்று தரிசித்தல் விசேஷம்!
பாரத தேசத்தில் பல இடங்களிலும் உள்ள சிவ க்ஷேத்திரங்களில் கோயில் கொண்டுள்ள பரமேஸ்வரன் நம்மை அருள் புரியட்டும்! நம் தேசத்தையும் நம் தர்மத்தையும் காப்பாற்றட்டும்! என்று வணங்குவோம்! ஓம் நமசிவாய! சாம்பாய! சாந்தாய! பரமாத்மனே!