e0af8d-e0aeaee0aebee0aeb0e0af80.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 157
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆலகாலம் என – பழநி
மாரீசன்
தாடகையின் கணவன் சுந்தன். தேவி மகாத்மியத்தில் வருகின்ற சுந்த-உபசுந்தர்களில் வரும் சுந்தன் வேறு; இவன் வேறு. தாடகை-சுந்தன் தம்பதியரின் பிள்ளை மாரீசன். அகத்தியருக்குத் தீங்கு செய்து, அவர் சாபத்தால் அரக்கனாக ஆனவன்; தாயான தாடகையுடன் சேர்ந்து கொண்டு, முனிவர்களுக்கும் அவர்கள் செய்த யாகங்களுக்கும் பெருத்தஅளவில் இடையூறு செய்துவந்தவன் மாரீசன்.
ராமரும் லட்சுமணனும் விசுவாமித்திரரின் யாகத்தைக் காப்பதற்கான செயல்களில் பொறுப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வேளையில் மாரீசன், சுபாகு முதலான பல அரக்கர்களுடன் வந்து யாகத்தைக் கெடுக்க முயலுகிறான். ராமர் அம்புகளை ஏவினார். ராமர் ஏவிய அம்புகளில் ஒன்று, மாரீசனைக் கடலில் கொண்டுபோய்த் தள்ளியது; ஓர் அம்பு, சுபாகுவைக்கொன்றது. மாரீசனைக் கொல்லவில்லை. இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டுபோக வரும்போது பெரும் துணையாய் இருக்கப்போகின்றவன் இந்த மாரீசன்.
சூர்ப்பணகை போய் இராவணனிடம் சீதையைப்பற்றி வர்ணித்து, “தூக்கிக்கொண்டு வா அவளை” என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள். அதைக் கேட்ட அளவிலேயே இராவணன் சீதையைக் கொண்டுவரத் திட்டமிட்டான். தன் எண்ணத்தை மாரீசன் மூலம் நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்ட இராவணன் நேரே மாரீசனிடம் சென்றான். அங்கே மாரீசன் பொறி புலன்களை அடக்கித் தவம்செய்து கொண்டிருந்தான். மாரீசன் தன்னந்தனியனாய்த் தன் இருப்பிடம் தேடி வந்த இராவணனைக் கண்டதும், “இவன் எதற்காக வந்தானோ?” என்று பயந்தான்; இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், இராவணனை வரவேற்று உபசரித்து, வந்த காரணம் என்ன?” எனக் கேட்டான் மாரீசன்.
இராவணன் சீதையைக் கவர்ந்துகொண்டு வர தன்னுடைய திட்டம் பற்றிச் சொல்கிறான். மாரீசன் அவனுக்கு நல்ல புத்தி சொல்கிறான். ஆனால் இராவணன் நான் சொன்னதைச் செய்ய வேண்டியதுதான் உன் வேலையே தவிர, எனக்கு ஆலோசனை சொல்வது உன் வேலையல்ல! நான் இட்ட கட்டளையை நீ நிறைவேற்றாவிட்டால், உன்னைக்கொன்று விடுவேன். உயிர்மேல் ஆசை இருந்தால், என்சொல் கேட்டு நட” என்று கோபாவேசமாக மிரட்டினான். இராவணன் கையால் மரணிப்பதைவிட இராமனின் கையால் மரணமடைவது மேல் என எண்ணி மாரீசன் இராவணனுக்கு உதவ சம்மதித்து மாயமானாக மாறுகிறான்.
பஞ்சவடிக்கு பொன்மானாக வந்து சீதையின் எதிரில் மாரீசன் துள்ளிக் குதித்தான். சீதை, இராமரை அழைத்து அதைப்பிடித்துத் தரச் சொன்னாள். இராமர் ஒப்புக்கொண்டார். ஆனால் இலட்சுமணனோ தடுத்தான்; “அண்ணா! இது உண்மையான மான் அல்ல; மாயமான்” என்றான். ஆனால் இராமர் மானைப்பிடித்து வரப் புறப்பட்டார். பின் தொடர்ந்த இலட்சுமணன் வேண்டுகோள் விடுத்தான், “அண்ணா! மானைப்பிடிக்க என்னை அனுப்புங்கள். அது மாயமானாக இருந்தால், அதைத் தொடர்ந்து வரும் பகைவர்கள் பலராக இருந்தாலும் சரி! அனைவரையும் நான் கொன்று வருவேன். ஒருவேளை உண்மையான மானாக இருந்தால், அதைப்பிடித்துக் கொண்டு வருவேன். என்னை அனுப்புங்கள்” என வேண்டினான் இலட்சுமணன்.
சீதையோ, இராமர்தான் பிடித்துத்தர வேண்டும் எனக் கூற உடனே இராமர் இலட்சுமணனிடம், “நானே போய் மானைப் பிடித்து வருகிறேன். சீதைக்குக் காவலாக இங்கேயே இரு நீ” என்று சொல்லி, வில் அம்புகளுடன் மானைப் பின் தொடர்ந்தார். ராமர் வருவதைப் பார்த்த மாரீசன் அவரை போக்கு காட்டி வெகுதூரம் அழைத்துச் சென்றுவிட்டான். இராமர் மானின் உண்மையைப் புரிந்து கொண்டார். அதனால் மாயமான் மீது அம்பு எய்கிறார்.
மாரீசனின் வஞ்ச நெஞ்சில், இராம பாணம் பாய்ந்தது. அப்போதே அவன் இராமர் குரலிலே, ”சீதா லட்சுமணா” என்று திசைகள் எல்லாம் எதிரொலிக்கும்படியாகக் கூவி, மலை விழுவதைப்போல விழுந்து முடிந்தான். அகத்தியரிடம் மோதியதில் தொடங்கிய மாரீசனின் வாழ்வு, அண்ணல் இராமரின் கைகளால் முடிந்தது.
அடுத்து நாலு வேதமும் முறைப்படி பயின்ற நாரதனைப் பற்றி அருணகிரியார் பாடுகிறார். ஹிந்து வாழ்க்கை முறையில் இதிஹாஸ, புராணங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அந்த இதிஹாஸ புராணங்களில் நாரத மஹரிஷிக்குத் தனி இடம் ஒன்று உண்டு. மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் ஆவார்.
திருப்புகழ் கதைகள்: மாரீசன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.