அண்ணா என் உடைமைப் பொருள்(46): பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்(1)

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d46.jpg" style="display: block; margin: 1em auto">

anna en udaimaiporul 2 - 4
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 46
பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் – 1
– வேதா டி.ஸ்ரீதரன் –

ஒருமுறை எனது கடந்த காலம் பற்றி நிதானமாக நினைத்துப் பார்த்தேன்.

எனது படிப்பு, கிடைத்த வேலைகள், ஆர்எஸ்எஸ் முழு நேரப் பணி…. இறுதியாக, அண்ணாவிடம் வந்து சேர்ந்தது… இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று சம்பந்தமே இல்லாத விஷயங்கள்.

குறிப்பாக, அண்ணாவிடம் நான் வந்ததே அதிசயம் தான். அந்தக் கால கட்டத்தில் எனக்குத் தேவையாக இருந்தது ப்ரின்டிங் ஆர்டர்கள் மட்டுமே. ஆரம்ப காலத்தில் திவ்ய வித்யாவைச் சேர்ந்தவர்கள் அண்ணாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அதற்குப் பின்னர் எனது வேலை முழுக்க முழுக்க திவ்ய வித்யா ட்ரஸ்ட் பொறுப்பாளர்களுடன் தொடர்புடையதே.

ஆனால், நானோ அண்ணாவே கதி என்று ஆகி இருந்தேன்.

இது எப்படி சாத்தியமாயிற்று என்று யோசித்துப் பார்த்தேன்.

இதற்குக் காரணம் நான் அல்ல. எனது பொருளாதாரச் சூழல், அதற்கு உபகாரமாக இருக்கும் திவ்ய வித்யா ட்ரஸ்ட் ஆகியவையும் மேம்போக்கான காரணங்களே. உண்மையில் இது அண்ணாவின் சங்கல்பம் என்று என் மனம் நினைத்தது.

இத்தகைய எண்ணம் தோன்றிய சில நாட்களுக்குப் பின்னர் அண்ணாவைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது அண்ணா, தன்னிடம் பெரியவா தெரிவித்த ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

அது ஸ்திரீ தர்மம் பற்றிப் பெரியவா பேசி வந்த விஷயங்கள் பற்றியது. ‘‘நான் கன்னா பின்னா-ன்னு என்னென்னவோ பேசிண்டிருக்கேன்-னு எனக்கும் கொடும்பாவி கொளுத்துவாளோ, என்னவோ?’’ என்று சொன்னாராம், பெரியவா. இதற்குச் சில வருடங்களுக்குப் பின்னர், சில ‘‘முற்போக்குகள்’’ இணைந்து புரி சங்கராசாரியாருக்குக் கொடும்பாவி கொளுத்தினார்கள்.

இந்த சம்பவத்தைப் பற்றி அண்ணா ஏற்கெனவே இரண்டு தடவை என்னிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்த முறை, அதன் கூடுதல் விவரங்களைத் தெரிவித்தார். அதைச் சொல்லும்போது இடையிடையே, ‘‘பெரியவா வாயால இப்படிச் சொல்லவே மாட்டார்ப்பா, அவரை அறியாமலேயே அவர் வாயிலேர்ந்து வந்துடுத்துப்பா’’ என்று நிறையத் தடவை சொன்னார்.

anna alias ra ganapathy9 - 3

அவர் குறிப்பிட்ட விஷயம் இது தான்.

‘‘நான் கன்னா பின்னா-ன்னு பேசிண்டிருக்கேன்-னு எனக்கும் கொடும்பாவி கொளுத்துவாளோ, என்னவோ? … அது போகட்டும், நான் சொல்றதையெல்லாம் நீயும் எழுதிண்டிருக்கியே, உன்கிட்ட women’s liberation ஆட்கள் யாராவது சண்டைக்கு வந்தா என்ன பண்ணுவே? நீ பயந்தாங்கொள்ளியாச்சே?’’ என்று சொன்ன பெரியவா, ‘‘உன் கிட்ட யாராவது வந்து சண்டை போட்டா, எனக்கென்ன தெரியும்-னு சொல்லிடு, என்ன? நானா ஒண்ணும் எழுதல, அந்தக் கிழம் (பெரியவா) சொல்றதைத் தானே எழுதறேன்-னு சொல்லிடு’’ என்றாராம்.

அடுத்தது தான் க்ளைமாக்ஸ்.

‘‘ஊர் உலகத்தில எத்தனையோ கிழம் இருக்கறச்சே நீ ஏன் அந்தக் கிழவர் கிட்ட மட்டும் போறே-ன்னு கேட்டா என்ன சொல்லுவே?’’ அண்ணாவின் பதிலுக்குக் காத்திராத பெரியவா தொடர்ந்தாராம்: ‘‘நான் எங்கே அவர் கிட்ட போனேன்? அவர் தானே என்னைப் பிடிச்சு இழுத்துத் தன் காலடியில வச்சிண்டிருக்கார்-னு சொல்லிடு’’ என்றாராம்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள், அண்ணா, ‘‘பெரியவா வாயால இப்படிச் சொல்லவே மாட்டார்ப்பா, அவரை அறியாமலேயே அவர் வாயிலேர்ந்து வந்துடுத்துப்பா’’ என்று ஏழெட்டுத் தடவையாவது சொல்லி இருப்பார்.

‘‘நீயா என் கிட்ட வர்லடா, நான் தான் உன்னைப் பிடிச்சு இழுத்து என் காலடியில வச்சிண்டிருக்கேன்-னு அவர் வாயாலயே சொல்லிட்டார்ப்பா, நம்பவே முடியலப்பா, பெரியவா இப்படி தன்னை வெளிப்படுத்திக்கவே மாட்டார்ப்பா…’’

அண்ணா இவ்வாறு சொன்னது என்னை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்தது.

அண்ணாவுக்குப் பெரியவா சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு அண்ணா தரும் செய்தி என்பது எனக்கு ஸ்பஷ்டமாகப் புரிந்தது.

‘‘உன்னை அண்ணா என் பக்கத்திலயே வச்சிண்டிருக்கேன். ஏன் தெரியுமா? நீ அசடுங்கறதால தான்’’ என்று அண்ணா என்னிடம் சொன்னதைப் பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். அப்போது கூட நான் இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்படவில்லை.

ஆம், நானாக அண்ணாவிடம் போகவில்லை. அவராம் அவரே தான் என்னைப் பிடித்து இழுத்துத் தன் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார்.

இப்பொழுது நினைக்கும் போதும் பரவசமாக இருக்கிறது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் ஸ்திரீ தர்மம் பற்றிப் பெரியவா கூறிய கருத்துகளுடன் தொடர்புடையது. பெரியவா சொன்ன அந்தக் கருத்துகள் அடங்கிய உரைத் தொகுப்பு தான் ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ என்ற புத்தகம்.

முதலில் அண்ணா இதை தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதியில் வெளியிடத் தீர்மானித்திருந்தார். புத்தக வேலைகள் முடிவடைந்த நிலையில் அவருக்கு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ அத்தியாயத்தையும், ‘‘அரசும் மதமும்’’ என்ற அத்தியாயத்தையும் தெய்வத்தின் குரலில் வெளியிடச் சம்மதமா என்று பதிப்பாளரிடம் கேட்டார். அவர்கள், ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ அத்தியாயத்தை வெளியிட வேண்டாம், இதர பகுதிகள் இருக்கட்டும் என்று தெரிவித்தார்கள். எனவே, அண்ணா தெய்வத்தின் குரலில் இருந்து அந்த அத்தியாயத்தை நீக்கச் சொல்லி விட்டார்.

எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம், அந்த அத்தியாயத்தைத் தனிப் புத்தகமாக நான் வெளியிடுகிறேன் என்று சொன்னேன். அண்ணாவும் அனுமதி தந்தார். ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ என்ற பெயரிலேயே அதைச் சிறு நூலாக வெளியிட்டேன்.

எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம் என்று சொல்வது எளிதானது. ஆனால், அப்போது எனக்குள் எழுந்த உணர்ச்சிகளை விவரிப்பது கடினம். இதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. அவற்றுள் தலையாயது, அண்ணா என்னைத் தன் காலடியில் இழுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பெரியவா வார்த்தைகள் மூலம் எனக்கு உணர்த்தியது ஸ்திரீ தர்மம் பற்றிப் பேசும் போது தான். அந்தச் சந்தர்ப்பத்தில் பெரியவா குறிப்பிட்ட கருத்துகள் அடங்கிய பகுதி தான் ‘‘பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்’’ அத்தியாயம்.

என் மனதை மிகவும் கொடூரமாகத் தாக்கிய சம்பவங்களில் முதன்மையானது சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு. நான் விஜயபாரதத்தில் பணிபுரிந்தபோது நடந்த அந்தக் குண்டு வெடிப்பில் எனது நெருங்கிய நண்பர்கள் சிலர் இறந்து விட்டனர், ஆர்எஸ்எஸ்ஸின் அலுவலமாகிய இரண்டு மாடிக் கட்டடம் தரை மட்டமானது.

அந்த கோரச் சம்பவம் ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகளில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பயங்கரவாதத்துக்கு யார் யாரோ எத்தனையோ காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால், அந்தக் காரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு காரணத்தை இந்த உரையில் பெரியவா சுட்டிக் காட்டியுள்ளார்.

பெண்மை என்பது மென்மை. ஆண்மை என்பது வன்மை. இரண்டும் வேறு வேறு இயல்பு உடையவை. ஆண் என்பவன் வெளி வேலைகளுக்கானவன், எனவே, அவனுக்கு வன்மை அவசியம். பெண்மை என்பது குடும்பத்தின் உள் காரியங்களுக்கானது. எனவே, அவளுக்கு மென்மை மட்டுமே இயல்பாக உள்ளது.

இயற்கை மனித ஜீவனை இப்படித் தான் படைத்திருக்கிறது.

ஓரளவு வன்மை தூக்கலாக இருப்பதால் ஆண்மை எப்போதுமே one-up-’’man’’ship ஆக இருக்கிறது – அதாவது, வன்மையில் கூடுதலாக இருப்பது.

ஆணுக்கு இணையாகப் பெண் உருவெடுத்தால், இந்த one-up-’’man’’ship காரணமாக, ஆணின் வன்மை இயற்கையாகவே அதிகரிக்கும். இதன் காரணமாக, அவனது வன்மை அதிகரித்து அதிகரித்து அசுரத் தன்மையாக உருவெடுக்கிறது.

  • இது தான் பெண்மை புத்தகத்தின் மையக் கருத்து.

ஆர்எஸ்எஸ் காரியாலய குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் நிச்சயம் மனிதர்கள் அல்ல என்பதை என்னால் சொல்ல முடியும். அவர்கள் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாத அசுரர்கள்.

அந்த மனிதர்களுக்கு இத்தகைய அசுரத் தன்மை ஏற்பட முடிந்தது எவ்வாறு என்பதற்குப் பெரியவா சொல்லி இருப்பது தான் சரியான விளக்கமாக எனக்குத் தெரிகிறது.

யாராவது கயவர்கள் பெண்களிடம் தவறாக நடப்பதை அருகில் இருக்கும் ஆண்கள் தட்டிக் கேட்காமல் இருந்தால், அவர்களைப் பார்த்து, ‘‘பொம்மனாட்டி கிட்ட தப்பா நடந்துக்கறான், அதை வேடிக்கை பார்க்கறியே, நீயெல்லாம் ஆம்பளையா?’’ என்று தான் கேட்கத் தோன்றும்.

ஆம், ஆண் என்பவன் பெண்ணுக்குப் பாதுகாப்பு அல்லவா?

ஆனால், தற்போது ஆஃப்கானிஸ்தானில் நடப்பதைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது. தாலிபன் பயங்கரவாதிகள், தங்களது வக்கிரத்துக்குத் தீனி போடுவதற்காக ஆயிரக்கணக்கான சிறுமிகளையும் பெண்களையும் கடத்திப் போகிறார்கள்.

இதை ஏதோ இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கருத முடியவில்லை. இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களும் சில ஆயிரம் பேர் என்றால், இவர்களால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். இஸ்லாமியப் பெண்களை இவர்கள் நடத்தும் விதம் கொடூரத்திலும் கொடூரம்.

இதற்கும் இஸ்லாத்துக்கும் என்ன சம்பந்தம்?

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது ஒருபுறம் இருக்கட்டும், கிறிஸ்தவத்தைக் கைக்கொண்ட நாடுகளில் மட்டும் என்ன வாழ்கிறது? இதே அட்டூழியங்கள் அங்கே வேறு விதங்களில் தாண்டவமாடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளிடம் நடத்தப்படும் பாலியல் கொடுமைகள்.

இந்தியாவும் இதற்கு விதி விலக்கு அல்ல.

bharatamata
bharatamata

இவற்றை எல்லாம் ஏதேதோ தவறுகள், குற்றங்கள், மத ரீதியான மோதல்கள் என்று கருத முடியவில்லை. அதைத் தாண்டிய முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. மனித இனத்தின் இயல்பு மாறி வருகிறது. மனிதன் அசுரத் தன்மையைக் கைக் கொள்ள ஆரம்பித்து விட்டான் என்றே தோன்றுகிறது.

இதற்குக் காரணம், பெரியவா சொல்வது போல, ஆண் தன்மையைக் கைக் கொள்ளும் பெண்கள் தான் என்றே நம்பத் தோன்றுகிறது. பெண் ஆணைப் போல உருவெடுத்தால், ஆண் அசுரனைப் போல உருவெடுப்பான் என்று பெரியவா சொல்லி இருப்பதன் பொருள் புரிகிறது.


பெண்மை புத்தகம் வெளியான புதிதில் அதை மீண்டும் மீண்டும் படித்தேன்.

தாரயதி இதி தர்ம: (தாங்கி நிற்பது தர்மம்) என்பதே மகா பாரதத்தின் மையக் கருத்து என்று சொல்வார்கள். ‘‘தாங்கி நிற்பது தர்மம்’’ என்பதன் உட்பொருளை எனக்கு உணர்த்தியது இந்தப் புத்தகமே.

தர்மத்தின் வழியில் நடந்தால் ஆத்ம திருப்தியும் நிம்மதியும் கிடைக்கும் என்று பெரியவா அடிக்கடி சொல்வதுண்டு. அதன் பொருள் எனக்குப் புரிகிறது.

‘‘எனது அறிவு, எனது அறிவு’’ என்று நான் எதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறேனோ, அந்த அறிவு என்பது முழுமையான மூடத்தனம் மட்டுமே, இந்தப் பிரகிருதி என்பது எனது அறிவுக்கு அப்பாற்பட்ட வஸ்து என்பது எனக்குப் புரிந்துள்ளது – அதாவது, புரிய வைக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்க்கையின் குறிக்கோளை அடைய முயற்சிக்காமல் ஏதேதோ அல்ப விஷயங்களின் பின்னால் இத்தனை வருடங்களாக உழன்று கொண்டே இருந்திருக்கிறேன்.

இந்தப் புத்தகம் படித்ததால் எனது வாழ்க்கைப் பயணம் எந்த விதத்திலும் மேம்பட்டு விடவில்லை தான். குணங்களிலோ இதர அம்சங்களிலோ எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை தான்.

அதேநேரத்தில் –

என்னைப் பிடித்து இழுத்துத் தன் காலடியில் வைத்துக் கொண்டிருந்த வஸ்து, எனது அறிவு என்ற மூடத்தனத்தை எனக்குச் சுட்டிக் காட்டிய வஸ்து, எனது வாழ்க்கைப் பயணத்தையும் வழிநடத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அண்ணா என் உடைமைப் பொருள்(46): பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்(1) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply