e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-27.jpg" style="display: block; margin: 1em auto">
அண்ணா என் உடைமைப் பொருள் – 27
நமஸ்காரம், திரஸ்காரம்
– வேதா டி. ஸ்ரீதரன் –
எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் இருந்தார். எண்பது பிராயம் கடந்தவர். சிருங்கேரி, காஞ்சி இரண்டு பீடங்களின் மீதும் மிகுந்த மரியாதை உடையவர். தமிழ், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த தேர்ச்சி உடையவர்.
அண்ணாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் மிகவும் ஆசைப்பட்டார். ஒருநாள் மாலை அவரை அண்ணா இருந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். (அது ஒரு சிறிய அறை மட்டுமே. திருவான்மியூரில் ஒரு வீட்டின் பின் பகுதியை ஒட்டி அண்ணாவுக்காகப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட அறை. அண்ணா அதை அதிக காலம் பயன்படுத்தவில்லை.)
அப்போது அண்ணா மாலை நேர அனுஷ்டானங்களில் இருந்தார். எனவே, அந்தப் பெரியவரை மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் திரும்பி வரும் போது அண்ணா நடைப்பயிற்சிக்காகக் கடற்கரைக்குச் செல்லத் தயாராக இருந்தார். அவரையும் கடற்கரைக்கே அழைத்து வருமாறு சொல்லி விட்டார்.
அண்ணா வாக்கிங் முடித்துத் திரும்பும் வரை நான் அந்தப் பெரியவருடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். அண்ணா வந்து சேர்ந்ததும் இருவரும் பெரியவா பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கிளம்பும் போது அந்தப் பெரியவர் அண்ணாவை நமஸ்கரிக்க விரும்பினார். அவர் அண்ணாவை விட மிகவும் மூத்தவர். எனினும், அண்ணா அவரை நமஸ்காரம் பண்ண அனுமதித்தார்.
நமஸ்காரம் பண்ணி முடித்ததும் அந்தப் பெரியவர் மனதில் திடீரென ஒருவித கூச்சம் ஏற்பட்டது. தன்னை விடச் சிறியவரை நமஸ்கரித்து விட்டோம் என்பதால் ஏற்பட்ட கூச்சம் அது. கூச்சத்தைப் போக்கிக் கொள்ளும் விதமாக அவர் ஏதேதோ சமாதானங்கள் சொல்லி, இறுதியாக, ‘‘ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம், ஸர்வ தேவ நமஸ்காரம் கேசவம் ப்ரதிகச்சதி (ஆகாயத்தில் இருந்து பெய்யும் மழைத்துளி ஒவ்வொன்றும் எவ்வாறு இறுதியில் சமுத்திரத்தையே சென்றடைகிறதோ, அதேபோல, எந்த தேவதைக்குச் செய்யப்படும் நமஸ்காரமும் இறுதியில் கேசவனையே சென்றடைகிறது’’ என்று குறிப்பிட்டார்.
அதற்கு அண்ணா, ‘‘நமஸ்காரம் மட்டுமல்ல, திரஸ்காரமும் தான். ஸர்வதேவ திரஸ்காரமும் கேசவம் தான் ப்ரதிகச்சதி-ன்னு பெரியவா அடிக்கடி சொல்லுவா’’ என்று குறிப்பிட்டார். (எந்த தெய்வத்தை இழிவுபடுத்தினாலும் அதுவும் கேசவனையே சென்றடைகிறது என்பது இதன் பொருள்.)
நாம் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் பேசுவது போலவே, தமிழ் வார்த்தைகளைச் சேர்த்துப் பெரியவா சொன்ன புதுமையான அந்த சம்ஸ்கிருத சுலோகத்தை அந்தப் பெரியவர் மிகவும் ரசித்தார்.
அண்ணா என் உடைமைப் பொருள் (27): நமஸ்காரம், திரஸ்காரம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.