அண்ணா என் உடைமைப் பொருள் (11): லீலை வந்தது முன்னே, புத்தகம் வந்தது பின்னே!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 11
ஸ்வாமி: லீலை வந்தது முன்னே,

புத்தகம் வந்தது பின்னே
– வேதா டி. ஸ்ரீதரன் –

எனக்கு எப்போதுமே மனக்குழப்பம் தான். சில சந்தர்ப்பங்களில் திடீர் திடீரென குழப்பம் அதிகரிக்கும். இதுபோன்ற ஒரு சூழலில் ஸ்வாமி தரிசனத்துக்காகக் கொடைக்கானல் போயிருந்தேன். மதுரையில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுக்கு நான் வந்து சேர்ந்த போது கொடைக்கானல் செல்லும் பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது. டீ குடித்து விட்டு அதில் ஏறலாம் என்று நினைத்தேன். அதற்குள் பஸ் கிளம்ப ஆயத்தமானது. எனவே, டீயைத் தியாகம் செய்து விட்டு பஸ் ஏறி விட்டேன்.

கொடைக்கானல் ஏரிக்கரையில் இறங்கி நேரே ஆசிரமம் போனேன். அனேகமாக, மணி பனிரண்டு அல்லது ஒன்று என ஞாபகம். தரிசன க்யூ ஆரம்பமாகி விட்டது. ஆசிரமத்து கேட் திறக்க இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும். அதுவரை திறந்த வெளியில் க்யூ.

அருகில் ஹோட்டல் எதுவும் இல்லை. டீ மட்டும் தான் கிடைத்தது. முந்தைய நாள் இரவு எதுவும் சாப்பிடவில்லை. காலையிலும் பட்டினி. எனவே, நன்றாகப் பசி எடுத்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று க்யூவில் நிற்க ஆரம்பித்தேன்.

ஸ்வாமியின் தரிசனம் கிடைப்பதற்குக் காரணம் அவரது சங்கல்பம் மட்டுமே என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கொடைக்கானல் விஜயத்துக்கு முன்பே இரண்டு தடவை புட்டபர்த்தி போயிருக்கிறேன். புட்டபர்த்தியில் முன்னால், பின்னால் – என்றெல்லாம் வேறுபாடு கிடையாது. ஹாலுக்குள் ஸ்வாமி எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் போவார். அவர் எந்தத் திசையில் நடந்து போய் யாருக்குப் பக்கத்தில் நின்று தரிசனம் கொடுப்பார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இருந்தாலும், ‘‘ஏனோ’’ உணவைப் புறக்கணித்து க்யூவில் நிற்க ஆரம்பித்தேன். எனக்குப் பின்னால் யாரோ ஒரு பெரியவர் தன் பையனுடன் நின்றிருந்தார்.

Ra Ganapathy - 1

சாலையில் ஒரு வியாபாரி ஐந்து ரூபாய் விலைக்கு ப்ளாஸ்டிக் கவர் விற்றுக் கொண்டிருந்தார். நிறைய பேர் அதை வாங்கினார்கள். மழை பெய்தால் போர்த்திக் கொள்வதற்கு உபயோகப்படும்.

‘‘ஏனோ’’ எனக்கு அதை வாங்கத் தோன்றவில்லை.

சற்று நேரத்தில் தூறல் போட ஆரம்பித்தது. அதுவரை ஐந்து ரூபாய்க்கு ப்ளாஸ்டிக் கவர் விற்பனை செய்த அந்த வியாபாரி இப்போது அதன் விலையை இருபது ரூபாய் ஆக்கி விட்டார். எனக்கு பயங்கர ஆத்திரம். இது அநியாயம், நான் இந்த கவரை வாங்க மாட்டேன் என்று, தூறலில் நனைந்தவாறே க்யூவில் நின்றிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் தூறல் வலுத்து மழை கொட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே நல்ல பசி. பெரு மழையிலும் நனைகிறேன். இப்போது நான் எங்கேயாவது ஒதுங்க வேண்டும் அல்லது எனது உடலைப் போர்த்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தக் கடும் குளிரில் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்ற பயம் எழுந்தது. ஆனாலும், ‘‘ஏனோ’’ க்யூவை விட்டுச் செல்லவும் மாட்டேன், கவர் விலைக்கு வாங்கவும் மாட்டேன் என்ற எண்ணமும் வலுத்தது.

நம்மைச் சுற்றி அன்றாடம் எத்தனையோ அநியாயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நம் வேலை உண்டு நாம் உண்டு என்று எதையும் கண்டு கொள்ளாமல் தான் வாழ்கிறோம். நானும் இப்படிப்பட்ட மனிதன் தான். அதிலும், வயிற்றுப்பாட்டுக்காகக் கஷ்டப்படும் அந்த ஏழை வியாபாரி மீது அன்று எனக்கு வந்த ஆத்திரத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.

இருந்தாலும், அன்று ‘‘ஏனோ’’ தேவையற்ற பிடிவாதம். சாப்பிடாமல் இருந்தது, க்யூவில் நின்றது உட்பட அன்று நடந்த எல்லாமே இந்த ‘‘ஏனோ’’ வகையைச் சேர்ந்தவைதான்.

இந்த ‘‘ஏனோ’’ தான் ஸ்வாமி அன்று நிகழ்த்திய லீலைக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

சற்று நேரத்தில் பின்னால் இருந்து யாரோ என்னைத் தட்டினார்கள். குளிரில் நடுங்கிக் கொண்டே திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் ஒரு வெள்ளைக்காரர் நின்று கொண்டிருந்தார். அவர்தான் என்னை முதுகில் தட்டிவர் என்பது புரிந்தது. ‘‘I have got two. Would you take one?’’ என்று சொல்லியவாறு தனது சட்டைக்கு உள்ளிருந்து ஒரு ப்ளாஸ்டிக் கவரை எடுத்து என்னிடம் நீட்டினார். அவசர அவசரமாக அதை வாங்கிப் போர்த்திக் கொண்டேன். உடை முழுவதுமாக நனைந்து போயிருந்தாலும் அந்த கவரைப் போர்த்திக் கொண்டதுமே குளிர் குறைந்தது. நடுக்கம் மறைந்தது. இதுவுமே அந்த ‘‘ஏனோ’’ வகையைச் சேர்ந்ததுதான். காரணம், கொடைக்கானலில் மழை பெய்யும் போது நனைந்த உடையுடன் திறந்த வெளியில் நிற்பது ரொம்பவே கடினம். ஆனால், ‘‘ஏனோ’’ எனக்குக் குளிரவில்லை.

நான் க்யூவில் நிற்க ஆரம்பித்த போது வேறு ஏதோ மனிதர் தான் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். அவருடன் அவர் பையனும் நின்றிருந்தான். அந்த வெள்ளைக்காரர் எப்போது வந்தார் என்பது தெரியவில்லை. அந்த வெள்ளைக்காரர் கால்களில் நலங்கு இடப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு அது ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஹிந்துக்களே அதிகம் நலங்கு இட்டுக் கொள்ளாத இந்தக் காலத்தில் ஒரு வெள்ளைக்காரர் கால்களில் நலங்கு இருப்பது எனக்கு வினோதமாகத் தெரிந்தது.

விரைவிலேயே கேட் திறந்தது. வரிசையாக உள்ளே போனோம்.

(கொடைக்கானலில் வெளிநாட்டினரும் இந்தியர்களும் தனித்தனியே உட்கார வைக்கப்படுவார்கள். வெளிநாட்டினர் அமர்ந்திருக்கும் ஹாலில் தான் ஸ்வாமியும் உட்காருவார். ஸ்வாமியின் சொற்பொழிவும் அங்கேயே நடக்கும். ஸ்வாமி ஹாலுக்குள் போகும் போதும், திரும்ப வரும் போதும் மட்டுமே உள்நாட்டினருக்கு அவர் தரிசனம் கிடைக்கும். கொடைக்கானல், ஊட்டி ஆகிய இரண்டு இடங்களிலும் வெளிநாட்டினருக்குத்தான் முன்னுரிமை. அவர்களுக்கு இந்திய வெயில் ஒத்துக்கொள்ளாது என்பதால் அவர்களுக்காக மட்டுமே ஸ்வாமி இந்த இரண்டு இடங்களுக்கும் வருவார். இவையெல்லாம் அதுவரை எனக்குத் தெரியாது.)

தரிசனம் முடிந்ததும் முதலில் வெளிநாட்டினரைத் தான் வெளியே செல்ல அனுமதித்தார்கள். எனவே, நான் சற்றுத் தாமதமாகத் தான் வெளியே வர முடிந்தது. இருந்தாலும், வேகமாக ஓடி வந்து முதல் ஆளாக வெளியே வந்து வாசலில் நின்றேன். தரிசனம் முடித்துத் திரும்பிய அனைத்து வெள்ளைக்காரர்களின் கால்களையும் பார்த்தவாறு அங்கேயே காத்திருந்தேன். (ப்ளாஸ்டிக் கவரைத் திருப்பித் தருவதற்காக.)

நலங்கு ஆசாமியைக் காணோம். கொஞ்சம் வியப்பாக இருந்தது. அவர் எங்கே போயிருக்க முடியும் என்பது புரியவில்லை. திரும்பிப் போகும் வழியில் ஒரு குஷ்ட ரோகிப் பிச்சைக்காரர் கண்ணில் பட்டார். அவர் மீது அந்த ப்ளாஸ்டிக் கவரைப் போர்த்தி விட்டு என் வழியில் போய் விட்டேன்.

அன்று இரவு கொடைக்கானலில் தங்கினேன். மறு நாள் மதுரை போய் விட்டு மூன்றாவது நாள் காலை சென்னை திரும்பினேன்.

அலுவலகத்தில் நுழைந்ததுமே, ‘‘புதுசா ஒரு புத்தகம் ப்ரின்ட் பண்ண்ணும்னு அண்ணா சொன்னார். புத்தக பிரதி கொடுத்தனுப்பி இருக்கிறார்’’ என்ற தகவல் கிடைத்தது. அச்சுக்காக வந்திருந்த நூல் –

anna en udaimaiporul - 2

ஸ்வாமி – இரண்டாம் பகுதி.

அதை லேசாகப் புரட்டிப் பார்த்து விட்டு மீண்டும் மேசை மீது வைத்தேன். புத்கத்தின் பின் அட்டை கண்ணில் பட்டது. அதில், ஸ்வாமி பாத தரிசனம் காட்டும் இரண்டு புகைப்படங்கள் இருந்தன. ஒரு புகைப்படத்தில் ஸ்வாமியின் பாதத்தில் நலங்கு இருந்தது. கொடைக்கானலில் ப்ளாஸ்டிக் கவர் கொடுத்த வெள்ளைக்கார ஆசாமி பாதத்தில் இருந்த அதே நலங்கு.

அப்படியானால், வெள்ளைக்கார ஆசாமி வடிவத்தில் வந்தது ஸ்வாமி தானா? எனக்குத் தெரியாது.

அந்த நாட்களில் இந்தச் சம்பவம் குறித்துப் பலரிடம் வியப்பாகப் பேசியதுண்டு. ஆனால், ஸ்வாமியின் லீலைகள் பற்றிய அண்ணாவின் புத்தகங்களைப் படிக்கப் படிக்க, நாளாவட்டத்தில் லீலைகள் மீதான வியப்பு மறைந்து விட்டது. ஸ்வாமியின் உண்மையான லீலா வினோதம் அவரது அன்பர்களிடம் ஏற்படும் பக்குவமே என்பது புரிய ஆரம்பித்தது. (‘‘புரிந்தது’’ என்றால் ‘‘புரிய வைக்கப்பட்டது’’ என்று பொருள் என அண்ணா அடிக்கடி சொல்வார்.)

ஸ்வாமியைப் பற்றி எழுதும்போது ஓரிடத்தில் அண்ணா, ‘‘அவனாம் இவனாம் மற்றும்பர் அவனாம் என்றிராதே. அவனாம் அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலும் ஆம்’’ என்ற ஆழ்வார் பாசுரத்தை மேற்கோள் காட்டி இருப்பார்.

அவனாம் அவனே என்று ஸ்வாமியை நான் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது உண்மை. இதே காலகட்டத்தில் பெரியவா மீதும் இதேபோன்ற பக்தி ஏற்பட்டது. பிற்காலத்தில் யோகி ராம்சுரத் குமார் மீதும் இதேபோன்ற பக்தி எழுந்தது. ஆனால், எதுவுமே நிலைக்கவில்லை.

மிக வித்தியாசமாக, வினோதமாக, என் மனம் அண்ணா மீது மட்டுமே லயித்தது. பெரியவாளும் ஸ்வாமியும் ‘‘அண்ணா தான்’’ எனக்கு என்பதை சூட்சுமமாக உணர்த்தினார்கள். பிற்காலத்தில் எனக்கும் அண்ணாவுக்குமிடையே ஒரு நீண்ட ‘‘கேள்வியும் நானே பதிலும் நானே’’ அத்தியாயம் நடந்தது. திடீரென்று என் மனதில் ஏதாவது ஒரு கேள்வி உதிக்கும். சில நாட்களிலேயே ரொம்ப வித்தியாசமான விதத்தில் அண்ணாவிடமிருந்து அந்தக் கேள்விக்கு உரிய பதில் கிடைக்கும். அந்தக் காலகட்டத்தில் அண்ணா இதே விஷயத்தை எனக்கு வேறு விதமாக உணர்த்தினார். யோகி ராம்சுரத்குமார் ஒரு தடவை சூசகமான ஒரு சம்பவத்தின் மூலம் இதனுடன் தொடர்புள்ள ஒரு விஷயத்தைக் கோடி காட்டினார். (அதன் முழுப் பொருள் அண்ணா காலம் முடிந்த பின்னர் தான் எனக்குப் புரிந்தது.) ஆனால், இன்னொரு தடவை தெளிவாகவே உணர்த்தினார். இருந்தாலும், சில நாட்களுக்குப் பின்னர் தான் எனக்கு அது புரிந்தது.

ஆனால், சில வருடங்களில் அண்ணா மீதான பக்தியும் மறைந்து விட்டது.

பக்தி ஏற்பட்டதற்கும் காரணம் புரியவில்லை. அது மறைந்ததற்கும் காரணம் புரியவில்லை. விளக்கின் அடியில் இருள் இருப்பது இயற்கையின் நியதி என்பது மட்டும் புரிகிறது.

அண்ணா என் உடைமைப் பொருள் (11): லீலை வந்தது முன்னே, புத்தகம் வந்தது பின்னே! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply