e0af8d-e0ae95e0aeb0e0aebfe0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 82
கரிக் கொம்பம் – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளிய கரிக் கொம்பம் எனத் தொடங்கும் இந்த நாற்பத்தியிரண்டாவது திருப்புகழ் திருச்செந்தூர் தலத்து முருகப் பெருமானை மாதர் மயலில் உழலாமல் உய்ய அருள் புரிக என வேண்டிப் பாடிய பாடலாகும். இனிப் பாடலைக் காணலாம்.
கரிக்கொம்பந் தனித்தங்கங்
குடத்தின்பந் தனத்தின்கண்
கறுப்புந்தன் சிவப்புஞ்செம் …… பொறிதோள்சேர்
கணைக்கும்பண் டுழைக்கும்பங்
களிக்கும்பண் பொழிக்குங்கண்
கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் …… குழையாடச்
சரக்குஞ்சம் புடைக்கும்பொன்
றுகிற்றந்தந் தரிக்குந்தன்
சடத்தும்பண் பிலுக்குஞ்சம் …… பளமாதர்
சலித்தும்பின் சிரித்துங்கொண்
டழைத்துஞ்சண் பசப்பும்பெண்
தனத்துன்பந் தவிப்புண்டிங் …… குழல்வேனோ
சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
செழுத்தின்பங் களித்துண்பண்
சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் …… கசுராரைத்
துவைத்தும்பந் தடித்துஞ்சங்
கொலித்துங்குன் றிடித்தும்பண்
சுகித்துங்கண் களிப்புங்கொண் …… டிடும்வேலா
சிரப்பண்புங் கரப்பண்புங்
கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
சிவப்பண்புந் தவப்பண்புந் …… தருவோனே
தினைத்தொந்தங் குறப்பெண்பண்
சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
செழிக்குஞ்செந் திலிற்றங்கும் …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – இறைவனைத் துதித்தும், பஞ்சாட்சரத்தை நினைத்து இன்புற்றும், அமிர்தத்தை உண்டும், கீதத்தைப் பாடியும் மகிழ்கின்ற தேவர் குழுக்கள் துன்புறுமாறு செய்த அசுரர்களைக் கசக்கியும், பந்துபோல் எடுத்து எறிந்தும், வெற்றிச் சங்கை ஒலித்தும், கிரவுஞ்சமலையைப் பிளந்தும், துதிப் பாடலைக் கேட்டருளியும், கண்களித்த வேலாயுதக் கடவுளே!
சென்னியினுடைய நலனையும், கரங்களின் நலனையும், கடப்பமலர் மாலையின் நலனையும், சிவமாந்தன்மையையும், தவநிலையையும் தந்து அருள் புரிபவரே! தினைப்புனத்தில் வாழ்ந்த வள்ளியம்மையார், இனிய இந்திராணியின் புதல்வியுமாகிய தெய்வயானை என்ற இரு அம்மையார்களின் அரவணைப்பில் துயில்கின்றவரும், செழுமை நிறைந்த செந்திலம்பதியில் எழுந்தருளியிருப்பவரும் ஆகிய பெருமிதம் உடையவரே, மனதை மயக்கும் பெண்டிரின் மயக்கத்தாலே துன்புற்றுத் தவித்து வீணில் நான் அலையலாமோ? – என்பதாகும்.
இப்பாடலில் வரும் பின்வரும் வரிகள்…
சிரப்பண்புங் கரப்பண்புங்
கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
சிவப்பண்புந் தவப்பண்புந் …… தருவோனே
ஒரு மாபெரும் தத்துவத்தை நமக்குச் சொல்கின்றன. இவை யாவை நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: கரிக் கொம்பம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.