மதுரகவியாழ்வார் சரிதம்

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார் சரிதம்

திருக்கோளூர் – பாண்டிய நாட்டில் சிறந்து விளங்கிய இந்த ஊருக்கு இன்னுமோர் சிறப்பு சேர்ந்தது. அது – மதுரகவியாழ்வார் என்னும் வைணவ அடியாரைத் தோற்றுவித்த காரணத்தால்!

திருக்கோளூரில் சிறப்போடு வாழ்ந்த மக்களிடையே, முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபினரும் இருந்தனர். அந்த மரபில், முன்குடுமிச் சோழிய மரபு சிறக்கும் வண்ணம், ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பொருந்திய சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைனதேயாம்சராக மதுரகவியாழ்வார் திருஅவதரித்தார்.

இவர் தமிழ் மொழியிலும், வடமொழியிலும் புலமை பெற்றுத் திகழ்ந்தார். சிறந்த ஒழுக்கம், திருமாலிடம் அன்பு, பக்தி முதலியன வாய்க்கப் பெற்றிருந்தார். தமிழில் தேனினும் இனிய கவிதைகளைப் புனைந்து, திருமால் மீதான தம் பாடல்களைப் பாடிவந்தார். மதுரமான கவிதைகளைப் பாடிய காரணத்தால், இவருக்கு மதுரகவியார் என்னும் பெயர் ஏற்பட்டது.

புண்ணியம் நல்கும் திருப்பதிகளான அயோத்தி, மதுரா, கயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஏழு தலங்களையும் சேவிக்க யாத்திரை சென்றார்.

இங்கெல்லாம் சென்று, இறைவனை சேவித்து, மறுபடியும் அயோத்தியை அடைந்தார். அங்கு அர்ச்சாவதார வடிவாய் எழுந்தருளியிருக்கின்ற ராமபிரானையும், சீதாபிராட்டியையும் சேவித்து திருவடி தொழுது அங்கு வசிக்கலானார்.

ஒரு நாள் நள்ளிரவு. இவர் திருக்கோளூர் எம்பெருமானை எண்ணி, அந்தப் பதி இருக்கும் தென் திசை நோக்கித் தொழுதார். அப்போது அவர், தென்திசையில் வானுற வளர்ந்து விளங்கிய ஒரு திவ்வியமான பேரொளியைக் கண்டார்.

அந்தப் பேரொளி என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. அது இன்னதென்று அறியாமல், கிராம, நகரங்கள் ஏதும் வேகின்றனவோ? அல்லது காட்டுத் தீ சூழ்ந்ததோ? எனத் திகைத்து நின்றார். இவ்வாறே அடுத்த சில தினங்களிலும் கண்டு ஆச்சர்யத்தால் மேனி சிலிர்த்தார்.

அந்தத் திவ்விய ஒளி, முன்னினும் சிறப்புற அதிக ஒளி பொருந்தியதாய் விளக்கியதால், பெருவியப்புற்ற அவர், அதனைக் காணும் ஆசையோடு தென் திசை நோக்கிப் புறப்பட்டார்.

நெடுந்தொலைவு வந்து, அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நடந்து, இறுதியில் திருக்குருகூரை அடைந்தார். அதுவரையில் அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இவ்வளவு தூரம் நடத்தி அழைத்து வந்த அந்த ஒளி, திருக்குருகூரில் பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.

மதுரகவியார் அவ்வூரில் உள்ளவர்களைப் பார்த்து, இங்கு ஏதேனும் சிறப்புச் செய்தி உண்டோ ? என்று கேட்டார். அவ்வளவில் அவர்கள், நம்மாழ்வாரது வரலாற்றைக் கூறினார்கள். நம்மாழ்வாரின் வரலாற்றைக் கேட்ட மதுரகவியார், கோயிலின் உள்ளே சென்று, நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளியமரத்துப் பொந்தில் சின் முத்திரையோடு ஒருவர் எழுந்-தருளியி-ருக்கிறார். அதுதான் விசேஷம் என்று அவ்வூர்க்காரர்கள் சொன்னது இவர் நினைவுக்கு வந்தது.

மௌனமாக இருந்த நம்மாழ்வாரைக் கண்டு ஆச்சர்யப் பட்டார் மதுரகவிகள். இவருக்குக் கண் பார்வை உண்டா, காது கேட்குமா என்று கண்டுபிடிக்க ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கீழே போட்டார். செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார் மதுரகவியார்.

அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார் ஆழ்வார் (இந்த விவரம் நம்மாழ்வார் சரிதத்தில் வருகிறது)

தனக்குத் தகுந்த விடை கிடைத்தவுடனே, நம்மாழ்வாரையே தன் குருவாக ஏற்றுக் கொண்டாடினார். பிறகு அவர்அருளைப் பெற்று, நம்மாழ்வார் அருளிச் செயல்களைப் பட்டோ லையில் எழுதினர். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் பற்று ஏற்பட்டது. மதுரகவியார் நம்மாழ்வாரையே பதினோரு பாசுரங்களால் ஆன பாமாலை ஒன்றால் பாடித்துதித்தார். அப்பாமாலையின் முதற்பா கண்ணிநுண்சிறுத்தாம்பு எனத் தொடங்குவதால் அதற்குக் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்பதே பெயராயிற்று.

இவ்வாறு இருக்குங்காலை, நம்மாழ்வாரிடமிருந்து பலவற்றையும் அறிந்து கொண்டு அவரையே துணைவராகக் கொண்டு அவருடைய புகழையே பாடி வந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.

மதுரகவியார், நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார், திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார். அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார். இதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று. இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ? என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.

அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி, இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருளவேண்டும் என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.

நம்மாழ்வாரும் ஒரு கிழ பார்ப்பனர் வடிவம் ஏந்தி வந்து, திருவாய்மொழியில் கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டு சென்று, சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார். அவ்வாறே மதுரகவியும் நம்மாழ்வாரின் கண்ணன் கழலிணை பாசுரத்தை எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரைச் சங்கம் போய்ச் சேர்ந்தார். அங்கு சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணைபாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது. மறு முனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர். அந்த அளவில், சங்கப் பலகையானது, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.

அப்போது நீரில் விழுந்து தடுமாறி எழுந்து, மெல்ல நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்துகொண்டு செருக்கு அழிந்தனர்.

பிறகு சங்கப் புலவர்கள் நம்மாழ்வாரது பெருமையைக் குறித்து தோத்திரமாகத் தனித்தனியாக ஒவ்வொரு பாடல் பாடி வெளியிட்டனர்.

அங்ஙனம் வெளியிட்டதில் அப்பாடல்கள் யாவும் ஒரே பாடலாகவே அமைந்தது கண்டு வியந்தனர். அந்தப் பாடல̷் 0;

சேமங் குருகையோ செய்திருப் பாற்கடலோ

நாமம் பராங்குசமோ நாரணமோ – தாமந்

துளவோ வகுளமோ தோளிரண்டோ  நான்கும்

உளவோ பெருமான் உமக்கு

– சங்கப் புலவர்கள் அனைவரும் நம்மாழ்வாரைக் குறித்து எழுதிய இப்பாடல் சிறிதும் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டிருக்க, இதுபற்றி அவர்களனைவரும், இது என்ன விந்தை! இது என்ன விந்தை! என வியப்புக் கடலில் ஆழ்ந்தனர். பின்னர் இத்தகைய ஒற்றுமைத் தன்மை நேர்வதற்கு ஆழ்வாரது தெய்வத் திருவருளே காரணமாகும் என்று எண்ணிப் போற்றினர்.

பிறகு சங்கத்துச் சான்றோர்களின் தலைவராக விளங்கும் புலவர், ஆழ்வாரைப் புன்மொழிகளால் இழித்துக் குற்றத்தைப் போக்கிக் கொள்வதற்காக தாம் ஒரு பாடலைப் புனைந்து தருவதாகச் சொன்னார். அவர் எழுதிய பாடல்…

ஈயா டுவதோ கருடற் கெதிரே

இரவிக் கெதிர்மின் மினியா டுவதோ

நாயா டுவதோ உறுவெம் புலிமுன்

நரியா டுவதோ நரகே சரிமுன்

பேயா டுவதோ அழகூர் வசிமுன்

பெருமான் வகுஅளாபரனன் அருள் கூர்ந்(து)

ஓவா துரையா யிரமா மறையின்

ஒரு சொற் பெறுமோ உலகிற் கவியே

இந்தப் பாடலில், கருடனுக்கு எதிராக ஈ ஒன்று ஆடமுடியுமா? சூரியனுக்கு எதிராக மின்மினிப்பூச்சி நிற்கமுடியுமா? புலிமுன் நாய் நிற்கமுடியுமா? சிங்கத்தின் முன் நரி நிற்கமுடியுமா? அழகே உருவான ஊர்வசிமுன் பேய் ஆட முடியுமா? வகுளாபரண சடகோபரின் முன் ஓராயிரம் மறையின் சாரம் தாங்கிய ஒரு சொல் முன் உலகின் கவியெல்லாம் முன் நிற்கமுடியுமா? என்ற வண்ணம் பாடினார்.

இங்ஙனம் நம்மாழ்வரது புலமையின் திறத்தை முற்றும் உணர்ந்த சங்கப் புலவர்கள் ஆழ்வாரது அருந்தமிழ்ப் பாவாகிய மருந்தினால் தம்முடைய செருக்கு நோய் நீங்கப் பெற்றனர். பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.

தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்தார். சிலகாலத்துக்குப் பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.

இனி மதுரகவிகளின் கண்ணிநுண்சிறுத்தாம்பில் இருந்து இரண்டு கண்ணிகளைக் கொஞ்சம் பார்க்கலாம்.

மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்-வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!

பிரபந்தத்தில் இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் பதினொன்றுதான். அவை குருகூர் சடகோபன் என்னும் நம்மாழ்வாரின் புகழை மட்டுமே கொண்டிருக்கின்றன. இருப்பினும் மதுரகவியாரே நம்மாழ்வாரைக் கண்டு-பிடித்து பாடல்களை உலகுக்கு வௌதப்படுத்-தியவர் என்கிற தகுதியில் அவர் வைணவ உலகால் கொண்டாடப் படுபவர்.

நுட்பமான கண்ணிகளால் ஆன சிறிய கயிற்றினாலே கட்டப்பட்ட கண்ணபிரானைக் காட்டிலும், குருகூர் நம்பி என்னும் சட-கோபன் என்கிறபோது என் நாவில் தித்திக்கும் அமுது ஊறும். அவனே என் குரு; தாய் தந்தை எல்லாம்! என்கிறார்.

மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவராக இருந்தாலும், அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டார் மதுரகவி. அவருக்கு மற்ற தெய்வங்கள் எதுவும் தேவைப்படவில்லை.

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – என்று, எனக்கு வேறு தெய்வமில்லை; சடகோபன்தான் தெய்வம் என்கிறார்.

* மதுரகவியாழ்வார் பாடியுள்ளவை மொத்தமே இந்தப் பதினோரு பாசுரங்களாயினும், இவை இங்கே முழுதாகத் தரப்பட்டிருப்பதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்தப் பதினோரு பாசுரங்களைத்தான் லட்சம் முறை உரு போட்டு, நம்மாழ்வாரின் தரிசனம் பெற்று, மறைந்து போயிருந்த நாலாயிரம் பிரபந்தப் பாசுரங்களயும் வைணவ ஆசார்யர் நாதமுனிகள் மீண்டும் உலகுக்குக் கொண்டுவந்தார் என்பது வரலாறு. இதை இந்நூலின் கடைசி அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.

மதுரகவியாழ்வார் வாழி திருநாமம்

சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே

உத்தர கங்காதீரத்து உயர் தவத்தோன் வாழியே

ஒளி கதிரோன் தெற்கு உதிக்க உகந்து வந்தோன் வாழியே

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே

பராங்குசனே பரன் என்று பற்றினான் வாழியே

மத்திமமாம் பதப் பொருளை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே!{jcomments on}

Leave a Reply