e0ae9fe0aebf-e0ae92e0aeb4e0aebfe0aeaf-e0aea8e0aebee0ae9f.jpg" style="display: block; margin: 1em auto">
ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி என அழைக்கப்படுகிறது. அந்த ஏகாதசி விரதம் இருக்கும் முறை குறித்தும் அதனால் உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம் ஆடி மாதம் ஆகும். பராசக்தி எனப்படும் அம்மன் தெய்வங்களின் வழிபாட்டிற்குரிய மாதமாக ஆடி மாதம் இருக்கிறது என்றாலும் மற்ற தெய்வங்களையும் இந்த மாதத்தில் வருகின்ற விசேஷ தினங்களில் வழிபடுவதால் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான தினம் தான் ஆடி தேய்பிறை ஏகாதசி தினம்.
ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் திரிகரண அர்ப்பணிப்போடு காமிக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அனைத்து துன்பங்களிலிருந்தும், பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அழகாபுரியின் மன்னன் குபேரன். இவன் தேவர்களின் கருவூலத்தைக் காப்பவன். தீவிர சிவபக்தன். நாள்தோறும் தவறாமல் சிவபூஜை செய்பவன். குபேரனின் பணியாளனின் பெயர் ஹேமமாலி. குபேரன் தினந்தோறும் செய்யும் சிவ பூஜைக்கான மலர்களை மானசரோவர் ஏரிக்குச் சென்று பறித்து வந்து கொடுக்கும் பணியைச் செய்து வந்தான்.
ஒருநாள் வழக்கம்போல குபேரனிடம், `மலர் பறித்துவருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அழகாபுரியிலிருந்து புறப்பட்டான் ஹேமமாலி. ஆனால், அவன் உரிய நேரத்துக்குத் திரும்பவில்லை. குபேரனும் மலர்களுக்காக நெடுநேரம் காத்திருந்தான். மலர் இல்லாததால் குபேரனால் அன்றைய தினத்தில் சிவபூஜை செய்யமுடியவில்லை.
சிவ பூஜை தடைப்பட்டுவிட்டதால் கடுங்கோபம் கொண்ட குபேரன், காவலனை அனுப்பி ஹேமமாலியைத் தேடச் சொல்லிக் கட்டளையிட்டான். ஹேமமாலியைத் தேடிச்சென்ற காவலன் திரும்பி வந்து, “சிவபூஜை செய்வதற்கு மலர்கள் பறித்துக்கொண்டுவருவதை மறந்து, ஹேமமாலி, அவன் மனைவியுடன் மகிழ்ந்திருக்கிறான். அவன் இப்போது திரும்பி வருபவனைப் போன்று தெரியவில்லை” என்று தெரிவித்தான்.
குபேரன் கடும் கோபங்கொண்டு, “சிவபூஜை தடைப்படக் காரணமாக இருந்த ஹேமமாலியைத் தொழுநோய் தாக்கட்டும். அதனால், அவன் மனைவியை விட்டுப் பிரிவானாக…” என்று சாபமிட்டார்.
குபேரன் சாபமிட்ட அடுத்த கணம், தொழுநோயால் பீடிக்கப்பட்டான் ஹேமமாலி. உடனே அவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து காடுகளில் சுற்றித்திரியத் தொடங்கினான். அன்றாட உணவுக்கும் நீருக்குமே அவன் காடுகளில் அவதிப்பட்டான். நோய் மற்றவருக்கும் பரவிவிடும் என்று பயந்து அவனை யாரும் நெருங்கவில்லை.
அவன் துயரம் நீண்டுகொண்டேயிருந்தது. இந்தச் சூழலில்தான் ஒருநாள் வனத்தில் அவன் மார்க்கண்டேய முனிவரைக் கண்டான்.
தனது நோய் காரணமாகத் தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். அனைத்து உயிர்களிடமும் மாறாத அன்பு செலுத்தும் மார்க்கண்டேய முனிவர் அவன் நிலையைக் கண்டு வருந்தினார். “நீ யார்? உனக்கு எவ்வாறு இது நிகழ்ந்தது?” என்று கேட்டார்.
அதற்கு ஹேமமாலி, எதையும் மறைக்காமல் நடந்ததைக் கூறினான். அதைக் கேட்ட மார்க்கண்டேய முனிவர், “உன் மனைவியின்மீது கொண்ட அன்பு தவறில்லை. ஆனால், உன் கடமை தவறியதால்தான் நீ இப்படித் துயரத்தை அனுபவிக்கிறாய். நோய்களால் ஏற்படும் துன்பங்களைப் போக்கும் விரதம் ஒன்று உண்டு. அதை நான் உனக்கு உபதேசிக்கிறேன்” என்றார்.
உடனே ஹேமமாலியும் , “என் மீது கருணை கொண்டு நீங்கள் உபதேசிக்கும் விரதத்தை நிச்சயம் பின்பற்றுவேன்” என்று சொன்னான். முனிவரும் ஹேமமாலிக்கு ‘ யோகினி ஏகாதசி ‘ விரதத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி அதைக் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார்.
முனிவரின் வாக்கைத் தெய்வவாக்காக நம்பிய ஹேமமாலி, யோகினி ஏகாதசி நாளில் விரதமிருந்து தன் நோய் நீங்கப் பெற்றான். தன் அழகிய தோற்றத்தையும் திரும்பப் பெற்றான். மீண்டும் அழகாபுரிக்குச் சென்று தன் மனைவியுடன் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தான்.
நம்பிக்கையுடன் விரதமிருந்து, திருமாலை வழிபட்டால் பாவச் சுமைகளிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்பதையே ஹேமமாலியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
யோகினி ஏகாதசி அன்று நாள் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி மகாவிஷ்ணுவை வழிபட அனைத்து நற்பலன்களையும் அடைவதோடு தீராத நோய்களிலிருந்தும் விடுபடலாம் என்பது திண்ணம்.
கொடிய நோயும் ஓடி ஒழிய.. நாடி நலம் பெற.. ஆடி ஏகாதசி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.