திருப்பாவை – பாசுரம் 12 கனைத்திளம்

ஆண்டாள் ஆன்மிக கட்டுரைகள்
thiruppavai pasuram 12
திருப்பாவை பாசுரம் 12 கனைத்திளம்

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

thiruppavai12 - Dhinasari Tamil

விளக்கம்: பதினொன்றாவது பாசுரத்தில் சுற்றத்தாருடன் தோழியின் திருமாளிகை முற்றத்தே புகுந்து கண்ணனின் பெருமைகளைப் பாடியும் எழாது இருக்கின்றாயே என்று வினவிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், மனத்துக்கினியானான ஸ்ரீராமன் சீற்றத்தைச் சொல்லிப் பாடுகிறோம் தோழியே துயில் எழு என்கிறார்.

இளங்கன்றுகளை உடைய எருமைகள் தம் மடியில் பால்கறப்பவர் இல்லாததால் கனத்து கதறிக் கொண்டிருக்கும். அப்போது கன்றுகளின் நினைவு வர, அவற்றின் மீது இரக்கம் கொண்டு, கன்றுகளுக்குப் பாலூட்டுவதாக எண்ணி, அந்த நினைவினால் முலை வழியே இடைவிடாமல் அவை பால் சொரியும்.

அவ்வாறு பெருகிய பால், வீடு முழுவதும் நிறைந்து ஈரமாகி, சேறாகிவிடும். இத்தகைய வளமை நிறைந்த செல்வத்தை உடையவனின் தங்கையே. சீதைப் பிராட்டியை தன்னிடம் இருந்து பிரித்தானே என்ற சீற்றத்தால், தென் இலங்கை அரசன் ராவணனைக் கொன்று ஒழித்தான் அந்த ராமபிரான். எங்கள் மனத்துக்கு இனியவனான அந்த ராமபிரானை நாங்கள் பாடியபடி இருக்கின்றோம்.

மார்கழிப் பனியானது எங்கள் தலையில் விழும்படி உன் மாளிகையின் வாசல்புறத்தே வந்து நின்றபடி நாங்கள் ராமனைப் பாடுகின்றோம். ஆனால் நீயோ வாய்திறந்தும் பேசாது இருக்கின்றாய்.

எங்கள் ஆற்றாமையை அறிந்து கொண்ட பிறகாவது நீ எழுந்து வரலாகாதா? இது என்ன இப்படி ஓயாத உறக்கம்? இந்த ஊரில் உள்ள வீட்டுக்காரர்கள் அனைவருக்குமே, நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு வந்து நிற்பது தெரிந்துள்ளது. அப்படி இருக்க நீ இன்னும் இவ்வாறு பேருறக்கம் கொள்ளலாமோ என்று வினவுகிறார் ஸ்ரீஆண்டாள்.

  • செங்கோட்டை ஸ்ரீராம்

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply