திருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழிமழைக் கண்ணா (விளக்கம்)

ஆண்டாள் ஆன்மிக கட்டுரைகள்
thiruppavai 4 - Dhinasari Tamil

திருப்பாவை – பாசுரம் -4

ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கவுரை: மூன்றாம் பாசுரத்தில் நோன்பு நோற்பதால் கிடைக்கும் பலனைச் சொன்னார் ஆண்டாள். மும்மாரி பெய்து பசுக்கள் பாலால் இல்லம் நிறைத்து செல்வம் பெருகும் என்றவர், இந்தப் பாசுரத்தில் தாம் சொன்ன சுபிட்சத்துக்காக கண்ணனே கருணை மழையாகப் பொழிய வேண்டும் என்று வேண்டுகிறார். 

மழை மண்டலத்துக்குத் தலைவனாக விளங்கும் கண்ணனே! உன் கொடையில் எதையும் நீ ஒளிக்காமல் அருள வேண்டும். நீ செய்ய வேண்டிய பணி ஒன்றும் உண்டு. அது, நீ கடலினுள் புகுந்து, அங்கிருந்து நீரினை முகந்து கொண்டு பேரொலி எழுப்பி கர்ஜனை செய்து, ஆகாயத்தின் மேல் ஏறி, ஊழி காலம் முதலான அனைத்துக்கும் காரணனாக விளங்கும் எம்பெருமானின் திருமேனியைப் போலே கறுத்து, பெருமை பொருந்திய சுந்தரத் தோளுடையானும், நாபியிலே கமல மலர் கொண்டு திகழும் பெருமானின் வலக்கையிலே திகழும் சக்கரத்தாழ்வானாகிய திருவாழியைப் போலே ஒளிர்ந்து, இடது கரத்தில் திகழும் பாஞ்சஜன்யப் பெரும் சங்கினைப் போலே நிலை நின்று முழக்கி, உன் சார்ங்கம் ஆகிற வில்லில் இருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போலே, இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், கண்ணன் எம்மானுடன் கலந்து மகிழ நோன்பு நோற்கும் நாங்களும் உளம் மகிழ மார்கழி நீராட்டம் செய்யும்படி, தாமதம் ஏதுமின்றி மழை பொழிய வைத்திடுவாய்…- என்று கண்ணனை வேண்டுகிறார் ஆண்டாள்.

மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார்!

விளக்கவுரை: செங்கோட்டை ஶ்ரீராம்

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply