ஸ்ரீ செளபாக்ய பைரவர்!

சிவ ஆலயம்

மகரங்களால் காக்கப்படும் கோட்டையே மகராலயமாகும். அத்தகைய செல்வச் சிறப்பு மிக்க மீன் வடிவக் கோட்டையில் சௌபாக்ய பைரவர் பாக்யேஸ்வரியான ஆனந்தவல்லியுடன் வீற்றிருக்கின்றார். மீன் அல்லது மீன் கொடியை உடையவராக, நகுலம் எனும் கீரியை ஏந்தியவராக, சூலம், அமிர்தம் நிரம்பிய பானபாத்திரம் தாங்கியுள்ளவராக வெண்ணிற குதிரையில் அமர்ந்து காட்சியளிக்கின்றார். பாக்யத்தின் பயன் ஆனந்தமே என்பதால் அவரது தேவியின் பெயர் ஆனந்தவல்லி என்று வழங்கப்படுகிறது. அவருடைய மகராலயமான அறுகோணக் கோட்டையின் ஆறு பக்கங்களிலும் அமைந்துள்ள உப்பரிகைகளில் உல்லாசினி, நிராகுலி, யோகின்யை, சல்லாபினி, ஹிதேஸ்வரி, விநோதினி எனும் ஆறு தேவியர் உள்ளனர். இவர்கள் அன்பர்களுக்குக் கவலையற்ற நிலையையும், மன மகிழ்ச்சியையும், இதமான மனோ நிலையையும், புதிய புதிய சுகங்களையும் பெறும்படியான பாக்யத்தைக் கொடுக்கின்றனர். இவர்களை பைரவ தந்திரத்தினர் ஷட்குல தேவியர் என்று அழைக்கின்றனர்.

இவர்களையடுத்த எண்கோணக் கோட்டையில் அஷ்ட பைரவர்கள் அஷ்டமாத்ரு கைகளுடன் எட்டு கோணங்களில் வீற்றிருக்கின்றனர். அவர்களை அடுத்த வெளிவட்டத்தில் உள்ள தாமரைப் பொய்கைகளின் நடுவே பதினாறு பவள மாளிகைகள் உள்ளன. அதில் பதினாறு பேற்றையும் வழங்க வல்ல, சோடச லட்சுமிகள் எனப்படும் செல்வ லட்சுமிகள் வசிக்கின்றனர். இவர்களை அடுத்துள்ள கொடிகள் நிரம்பிய வல்லீ வனத்தில் உள்ள அறுபத்து நான்கு மாளிகைகளில் அறுபத்து நான்கு யோகினியருடன் அறுபத்து நான்கு பைரவர்களும், அவர்களது பரிவாரமான வேதாளர்களும் வீற்றிருக்கின்றனர்.

அவர்களை அடுத்து மூவட்டம் விளங்குகிறது. இந்த வட்டங்களில் காடுகள் முதல் வட்டத்திலும், அடுத்த வட்டத்தில் அகழியும், மூன்றாவது வட்டத்தில் மலைகளும் உள்ளன. காடுகளில் வன பாலகர்களும், அகழியில் தீர்த்த பாலகர்களும், மலைகளில் úக்ஷத்திர பாலகர்கள் எனும் கிரி பாலகர்களும் வீற்றிருக்கின்றனர். இவர்கள் எண்ணற்றவர்கள்.

சௌபாக்ய பைரவரையும், அவரது பரிவாரங்களையும் குறிக்கும் வகையில் அமைந்ததே சௌபாக்ய பைரவ யந்திரம்.

இதில் கற்பக வனங்கள் சூழ்ந்த சோலைகளின் நடுவே அமைந்துள்ள பொங்கும் பூம்புனல் மடுவைக் குறிக்கும் வகையில் மடுவில் வட்டமான வடிவமும், அதன் நடுவில் பைரவர் வீற்றிருக்கும் மகராலயத்தினைக் குறிக்கும் வகையில் இரட்டை மீன் வடிவமும் உள்ளன. அதைச் சுற்றி அமைந்த அறுகோணத்தில் பைரவ சமயத்தின் குல தேவதைகளான ஷட்குல தேவியர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்த எண் கோலத்தில் அஷ்ட பைரவர்கள் தேவியருடன் வீற்றிருக்க, அதைச் சுற்றியமைந்த பதினாறு இதழ் தாமரையில் சோடச லட்சுமிகள் வீற்றிருக்கின்றனர். அதைச் சுற்றியமைந்த அறுபத்து நான்கு இதழ் தாமரையில் யோகினிகளும், பைரவர்களும், வேதாளங்களும் உள்ளனர். அதைச் சூழ்ந்துள்ள மூவட்டங்கள் காட்டரண், மலையரண், நீரரண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அவற்றில் வனபாலர்கள், தீர்த்த பாலர்கள், கிரிபாலர்கள் பூசிக்கப்படுகின்றனர். அதையடுத்த மூன்று புறங்களில் பிரபஞ்சத்தைச் சுற்றியுள்ள வட்டவெளியாக உள்ள சப்தசாகரம், சக்ரவாள கிரி ஆகியவற்றிலுள்ள தேவர்கள் வழிபடப்படுகின்றனர். இந்த வட்டங்களின் நான்கு திக்கிலும் மந்திர பைரவர், யந்திர பைரவர், மணி பைரவர், ஒüஷதபைரவர் என்ற நால்வர் வீற்றிருக்கின்றனர். நான்கு புறமும் மும்மூன்று வீதிகள் உள்ளன. இவை கடல், ஆகாசம், மலை என்பனவற்றைக் குறிக்கின்றன. இந்த சகல சௌபாக்ய சக்கரத்தை நிலைப்படுத்தி அதிலுள்ள தேவர்களையும், தேவதைகளையும் ஆராதித்து வழிபடுபவன் சகல செல்வங்களையும் அடைகிறான். இவர்கள் தம்மை ஆளும் தலைவனாக விளங்கும் சௌபாக்ய பைரவரின் பக்தர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் காப்பவர்கள்.

சௌபாக்ய பைரவர் அன்பர்களுக்கு எல்லையற்ற சுகமான வாழ்வைத் தருவதுடன் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியில் நிலைத்திருக்கச் செய்கிறார். இதிலுள்ள தேவதைகள் யாவரும் வாழ்வில் மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்பவர்கள். பகைவர்களிடமிருந்து காப்பவர்கள். மனதில் உண்டாகும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் நீக்குபவர்கள். நாளும் புதிது புதிதான மகிழ்ச்சியை உண்டாக்குபவர்கள். இயற்கையாலும் விலங்குகளாலும் உண்டாகும் தொல்லைகளை அறவே அகற்றுபவர்கள்.

தகவல்: சிவ சுந்தரி

https://www.sivasundhari.com/homepage.html

Leave a Reply