நாமும் திருப்பதியை நினைவு கூறும் வகையில் அத்தலங்களை, “தென்திருப்பதி’ என்று பக்திப்பரவசத்துடன் அழைத்துப் பெருமையடைகிறோம். அவ்வகையில் மதுராந்தகத்தின் வட கிழக்குப் பகுதியில், சூணாம்பேட் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரவாடி கிராமத்தில் ஒரு வைணவத் தலத்தை உருவாக்கி, அதற்குப் புதுமையாக “நயா திருப்பதி’ என்று பெயர் சூட்டியுள்ளது, “ஸ்ரீ வேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை’ என்ற அமைப்பு. இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆலயத்தின் அருகில் உள்ள மலையில் (சுமார் 1500 அடி உயரம்) ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலையும் தற்போது கட்டியுள்ளனர். மலையின் அடிவாரத்தில் ஏற்கனவே “பிரசன்ன வெங்கடேச பெருமாள்’ கோயிலை இந்த அறக்கட்டளை கட்டியுள்ளது. நூதன நரசிம்மர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ள மலைக்கு “சிம்மகிரி’ மலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.
பூரிஜெகந்நாதர் ஆலயத்தை நினைவுபடுத்தும் விதமாக பெருமாளின் கர்ப்பகிரக விமானம் ஒரிசா (ஒடியா) கட்டிடப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல் இங்கு இறை மூர்த்தங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்பவர்களும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் அறிந்த பண்டிதர்களே! ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சுமார் 51/2 அடி உயரத்தில் காட்சியளிக்கின்றார். அவரது திருமார்பை நேபாள மன்னர் அளித்த 108 எண்ணிக்கையில் உள்ள சாளக்கிராம மாலை அலங்கரிக்கிறது. தாயார் சிலையும், பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையும் வடிக்கப்பட்டுள்ளன கண்களை கவரும் விதமாக.
தற்போது மலை மேல் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. சுமார் 255 படிகளைக் கடந்து சென்றால் “”பேழ்வாய்” என்று திருமங்கை ஆழ்வார் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அகன்ற பெரிய வாயுடன் நரசிம்மரின் திருமுகமே ஆலய நுழைவு வாயிலாக கட்டப்பட்டுள்ளது. நரசிம்மர் முக வாயிலில் கிரீடம் போன்ற அமைப்பு பொருத்தப்பட்டு வண்ணத்துடன் மிளிரிகிறது. இந்த கிரீடம் திருப்பதியில் வேங்கடவனின் திருமுடியை அலங்கரிக்கும் கிரீடம் போலவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நுழைவு வாயிலின் அருகே ஒருபுறம் பெரிய திருவடியும், மறுபுறம் சிறிய திருவடியும் கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றனர். கல்லினால் செய்யப்பட்ட இந்த நரசிம்ம வாயிலுக்கு சூரிய சந்திரனாய் இரண்டு கண்களும், சிங்கத்தைப் போல் பிடரி ரோமங்களும் நேர்த்தியாய் அமைத்துள்ளனர். அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த மரக்கதவுகளில் நரசிம்மரை நின்ற கோலத்தில் செதுக்கியுள்ளனர்.
துவாரபாலகரை அடுத்து கருவறையில் மூலவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் 7 அடி உயரத்தில் தாயாரை இடதுபக்கத்தில் அணைத்த நிலையில் வடக்கு முகமாக அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். உள் பிரகாரம் ஒரு சதுர குகை வடிவில் (3 0 அடிக்கு 30 அடி) அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் அகோபில மடத்தில் காணப்படுவதைப் போல நவ நரசிம்மர் உருவச்சிலை சிமெண்டினால் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.
ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கான சிறிய சந்நிதி ஒன்றும் கீழே உள்ள வெங்கடாசலபதி ஆலயத்தில் அமையவிருக்கின்றது.
சிம்மகிரி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் நூதன ஆலய நிர்மாண அஷ்டபந்தன மகாசம்ப்ரோஷணம் வருகிற பிப்ரவரி- 13ஆம் தேதி (காலை 9.30 மணி) வைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி நடைபெற உள்ளது. அன்று மாலை ஹரிபந்த சேவை நடைபெறுகிறது. பூர்வாங்க பூஜை, ஹோமங்கள் பிப்ரவரி-11ல் ஆரம்பமாகின்றன.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீவேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளை, சித்திரவாடி கிராமம், பொலம்பாக்கம் அஞ்சல், மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சி மாவட்டம்}603309 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி தொடர்புக்கு : 9443240074) சித்திரவாடி கிராமம் செல்ல மதுராந்தகத்திலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
https://www.dinamani.com/edition/Story.aspx?artid=370982
—————————————