682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்
காவேரி ஆற்றின் கரையில் மயிலாடுதுறைக்கும் இடையில் இருக்கும் அந்த ஆலயம் மகா சிறப்பானது, அதனாலே அங்கிருக்கும் லிங்கம் மகாலிங்கம் என வணங்கபடுகின்றது, காவேரி கரையின் மகா தொன்மையானதும் மாபெரும் சக்தி கொண்டதுமான அவ்வாலயம் காலத்தால் யுகங்களால் பழமையானது
அதன் மூலம் பிரம்ம தேவன் ஊழிகாலத்தில் செய்த காரியத்தில் இருந்து தொடங்குகின்றது, யுகமுடிவின் ஊழிகாலத்தில் பிரம்மன் அமுதத்தை ஒரு கலயத்தில் வைத்து மூடி மிதக்கவிட , பின் வெள்ளம் வடியும் போது அந்த அமுதம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று
அதாவது அந்த புராண கதையின் மூலம் அமுதம் உண்ட பலனை அதாவது நல்ல புண்ணிய பலனை தந்து தேவர்கள் போல் வாழும் வரம் அருளும் ஆலயம் என பொருள்
இதன் வரலாறும் பெருமையும் நீண்டது , ஒரு தனி புத்தகமாக வரகூடியது என்றாலும் முடிந்தவரை சுருக்கமாக காணலாம்
காவேரிகரையில் காசிக்கு சமமான புண்ணியங்களை தரும் ஆலயங்கள் ஆறு உண்டு, திருவையாறு, திருசாய்க்காடு (சாயாவனம்), திருவெண்காடு, திருவாஞ்சியம் மற்றும் மயிலாடுதுறை என உண்டு இதில் முக்கியமானது இந்த திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி ஆலயம்
இதன் பெருமையும் தொன்மையும் பழைய சுவடிகளில் நிரம்ப உண்டு
சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன , அந்த அளவு இது பழமையானதும் முக்கியமான ஆலயமுமாகும்
இந்த ஆலயத்தை ஸ்தாபித்த வரலாறு அகத்திய முனிவரில் இருந்து தொடங்குகின்றது, அகத்தியர் தென்னகம் வந்து காவேரியினை திருப்பி சோழநாட்டிற்கு அனுப்பி அதன் கரையெல்லாம் சிவாலயம் ஸ்தாபித்ததில் இருந்து தொடங்குகின்றது
அவர் பிரம்மன் அனுப்பிய அமிர்த துளிகள் அடையாளம் காட்டிய இடம், சக்திமிக்க இடம் இது என அறிந்து அங்கே அமர்ந்து ஈசனை வேண்டினார், இங்குவரும் மக்களெல்லாம் தங்கள் கர்மம் அழிய, தங்கள் பிணி அழிய, தேவ்ர்களை போல பெருவாழ்வு வாழும் வரம் பெற தவமிருந்தார்
அவரின் வேண்டுதலுக்கு ஏற்ப ஈசனே வந்து வரமருளினார், ஈசனே ஜோதிலிங்கமாக இங்கு அமர்ந்தார், அத்தோடு மட்டுமல்ல எப்படி வழிபாடுகளை செய்யவேண்டும் என சிவனே வழிபட்டு சொல்லி கொடுத்தார்
சிவனே சிவபூஜை செய்த தலம் இது, அதாவது சிவனே “காமிகா ஆகமம்” எனும் மகா முக்கிய ஆகமத்து விதிகளை இங்கே போதித்து அதை தானே செய்துகாட்டி போதனையே நடத்தினார்
ஆகமங்கள் மொத்தம் 28, அதில் முக்கியமானது இந்த காமிகா ஆகமம், சைவ ஆகமங்களில் தலையாயது
ஆகமங்கள் என்றால் எப்படி ஆலயம் அமைய வேண்டும், என்னென்ன அம்சம் கொண்டிருக்க வேண்டும், எப்படியான அளவுகளில் எல்லாம் அமைய வேண்டும் சிற்பம் கருவறை விதி என்ன? பூஜை விதி என்ன? காலம் என்ன? என எல்லாமும் சொல்லி விளக்கும் போதனை தொகுப்பு
இது வித்யா பாதம் அல்லது ஞான பாதம், கிரியா பாதம். யோக பாதம், சரியா பாதம் என நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும், காமிகா ஆகமம் சிவவழிபாட்டை முழுமையாக போதிக்கின்றது
“காமிகம்” எனும் சொல்லுக்கு விரும்பியதை அடைவது என பொருள், அதாவது தான் விரும்பிய ஒன்றை பெற்று தவிப்பில் இருந்து விடுதலை அடைவது என பொருள்
ஆத்ம விடுதலையினை குறிக்கும் தத்துவம் இது, ஆம் இந்த காமிகா ஆகமம் முழுக்க முறையான வழிபாட்டால் ஆத்ம விடுதலை அடைவது எப்படி என்பதை சொல்கின்றது அதன் தாத்பரியம் இதுதான்
இப்படியான பெரும் அற்புதம் நடந்த ஆலயம் இது, இங்கிருந்துதான் இதன் வரலாறு தொடங்குகின்றது, அப்படி அகத்தியர் அழைத்து வந்த சிவபெருமானால் ஸ்தாபிக்கபட்டு மக்களுக்காக மக்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காக கொடுக்கபட்டது
மருதமரங்கள் இடையில் லிங்கம் வந்ததாலும், இரு அர்ஜூனங்களுக்கு இடையில் அமைந்த அர்ஜுனம் என்பதாலும் அது இடைமருதூர் என்றாயிற்று, பின் திருஇடை மருதூர் என அழைக்கபட்டு பின் திருவிடை மருதூர் என்றாயிற்று
சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் ஆகிய பெயர்களையும் இது பெற்றது
மூவேந்தர்களும் ஏகபட்ட சிற்றரசர்களும் கட்டிவளர்த்த இந்த ஆலயம் தேவாரம் பாடிய மூவராலும் மாணிக்க வாசகராலும் பாடபட்டது
“இடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே” என பாடுகின்றார் சம்பந்தர்
“இடைமருதுமேவிய ஊசனாரே” என்பார் அப்பர் சுவாமிகள்
“இடைமருதுறை எந்தை பிரானே” என பாடுகின்றார் சுந்தரர்
இம்மூவரும் ஏகபட்ட பாடல்களை இந்த வரியோடு பாடினார்கள், இங்கு வந்து பாடினார்கள் அவ்வகையில் இது தேவாரம் பாடபெற்ற ஸ்தலம்
“எந்தையெந்தாய் சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருகில் ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ”
என இந்த ஆலயத்தை பாடுகின்றார் மாணிக்க வாசகர்
“தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே”
என இந்த தலத்தின் பெருமையினை சொல்கின்றார் வள்ளலார்
பட்டினத்து அடிகள் இங்கேதான் தன் பிரசித்தியான மும்மணிகோவையினை இயற்றி பாடினார்
அருணகிரி நாதர், கவி காளமேகமெல்லாம் வந்து பாடிய தலம் இது, கருவூர் சித்தரின் விருப்பமான தலம் இது
மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்து வரமருளினார்
பட்டினத்தாரின் சீடரான உஜ்ஜைனியின் மகாராஜா பதிருஹரியார், காசியில் பட்டினத்தாரோடு சன்னியாசம் ஏற்ற அந்த பத்ருஹரியார், பெரும் சிவனடியாராகி பெரும் தத்துவபாடல்களை கொட்டிய அந்த பத்ரஹரியார் சமாதி கொண்ட தலம் இதுதான்
இப்படி ஏகபட்ட பெருமைகளை கொண்ட ஆலயம் இது
சுவாமி மலை உள்பட மகா பிரசித்தியான தலங்கள் சுற்றி அமைய இந்த ஆலயம் மகாலிங்கம் என வீற்றிருக்கின்றது, திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருவாரூர், சிதம்பரம், ஆலங்குடி ,திருவாவடுதுறை – நந்திகேஸ்வரர், திருசேய்நலூர், சீர்காழி,சூரியனார்கோவில் என மகா முக்கிய கோவில்கள் இந்த ஊரை சுற்றி உண்டு
அப்படி பெரும் ஆலயங்கள் ஊருக்கு வெளியில் இருந்தாலும் இந்த ஆலயத்தை சுற்றி ஊருக்குள் இருக்கும் ஆலயங்களும் பிரசித்தியானவை
“திருவாரூர் தேர் அழகு திருவிடைமருதூர் வீதி அழகு” என்பார்கள், அந்த ஊரின் வீதிகள், இந்த மகாலிங்கம் இருக்கும் வீதிகள் அவ்வளவு அழகானவை புனிதமானவை
காரணம் அந்த தேரோடும் வீதிகளில் அமைந்திருகும் ஆலயங்கள் அப்படி
அந்த தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் அழகுற ண்டு
இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே இத்தலத்தை “பஞ்ச லிங்கத்தலம்” என்றும் வணங்குவார்கள்
இந்த கோவிலின் வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும், மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர்.
அதாவது இங்கு சிவன் ஜோதி வடிவாகவும் இதனை சுற்றியுள்ள நான்கு திசைகளிலும் மற்ற நான்கு பூதங்களுக்குரிய கோயில்களும் அமைந்திருக்கின்றன.
இங்குள்ள சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது ஐதீகம், இந்த நம்பிக்கை எல்லா வறட்சி காலங்களிலும் பொய்த்ததில்லை, மிக கொடியவறட்சியில் இங்கு குறிஞ்சிபண்ணில் சரியாக பாடினால் மழை கொட்டும், அது வாடிக்கை
இந்த ஆலயத்தில் எங்குமில்லா சிறப்பாக ஆலய பிரகாரங்கள் அமைந்திருக்கின்றன
இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
வெளிப் பிரகாரமாம் என்பது அஸ்வமேதப் பிரகாரம் என அழைக்கபடுகின்றத் இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்
இரண்டாம் பிரஹாரம் முடிப் பிரகாரம், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
மூன்றாம் பிரகாரம் ப்ரணவப் பிரகாரம், இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்
இந்த ஆலயம் கர்மம் தீர்க்கும் ஆலயம் , ஒருவனின் கர்மம் தீர்த்து அவனின் பாவகர்மத்தினை தீர்த்து புதுவாழ்வு அருளும் ஆலயம்
இந்த மூன்று அர்ஜூன தலங்களும் மும்மலங்களை, ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களை போக்கும் என்பது தாத்பரியம், அவ்வகையில் நெல்லை தாமிரபரணி கரையில் உள்ள புடார்ஜனம் எனும் கடையார்ஜூனம் மாயையினை போக்குவது
இந்த ஆலயம் கர்மத்தை அழிப்பது
அப்படி கர்மம் அழிந்து நன்மை பெற்றவர்கள் ஏராளம் உண்டு, இந்த ஆலயமே அதற்குத்தான் சிவனால் உருவாக்கபட்டு, கர்மம் அழிக்கும் காமிகா ஆகமபடி உருவாக்கபட்டு ஆன்ம விடுதலையினை கொடுக்கும்படி ஸ்தாபிக்கபட்டு கர்மத்தை அழித்து ஆன்ம விடுதலையினை முக்தியினை கொடுப்பது
உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், லட்சுமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் இங்குதான் தங்கள் கர்மம் தொலைத்தார்கள்
காசியிலிருந்து ஞானம் தேடி ஆத்ம விடுதலை தேடி அலைந்த பத்ரஹரியார் இங்குதான் ஞானமடைந்து முக்தியடைந்து சமாதி அடைந்து இன்றும் அரூபியாக நிற்கின்றார்
இந்த ஆலயம் ஞானம் வழங்கும் ஆலயம் கர்மம் அழிக்கும் ஆலயம் புதுபிறப்பு கொடுக்கும் ஆலயம்
அதனாலே மூகாம்பிகைக்கு கொல்லூரை அடுத்து இங்கு மட்டும்தான் தனி சன்னதி அமைந்துள்ளது
மூகாம்பிகை கர்மம் களைபவள், கர்மவிதியினை அழித்து புதிய விதி புதிய வாழ்க்கை தருபவள், அவள் கொல்லூரை அடுத்து குடிகொண்ட ஒரே ஒரு ஆலயம் இது என்பதிலே இதன் சிறப்பு விளங்கிவிடும்
இந்த ஆலயத்தின் மாபெரும் தாத்பரியத்தை , இது கர்மம் அழிக்கும் என்ற பெரும் உண்மையினை ஒரு பக்தனை கொண்டே உலகுக்கு ஒரு நாடகம் மூலம் சொன்னார் சிவன்
அந்த பக்தனின் பெயர் வரகுண பாண்டியன். ஆம், பாண்டியரில் புகழ்பெற்ற மன்னன்
நின்றசீர் நெடுமாறன் எனும் நாயான்மாரும் பாண்டிய மன்னனுமானவரின் கொள்ளு பேரன், எல்லா தமிழக மன்னர்களை போல் அவனும் அப்பழுக்கற்ற சிவபக்தன்
அந்த சிவபக்தனுக்கு ஒரு பெரும் சோதனை வந்தது, அவன் ஒருமுறை குதிரையில் செல்லும் போது கட்டுபாட்டை இழந்த குதிரை ஒரு அந்தணனை கீழே தள்ளி மிதிக்க அவன் இறந்துவிட்டான்
அவன் தவவலிமை மிக்க அந்தணன் அதனால் அவன் ஆவி உக்கிரமாக இருந்தது , பிரம்மகத்தி தோஷத்தில் சிக்கிய வரகுண பாண்டியனை அந்த தோஷமும் இந்த ஆவியும் பிடித்து ஆட்ட தொடங்க்கிற்று
மன்னனுக்கு மாந்ரீகம் பலனளிக்கவில்லை, யாகம் பலனளிக்கவில்லை, எந்த பரிகாரமும் பலனளிக்கவில்லை
பிரம்மகத்தி தோஷம் என்பது அப்படியானது, எல்லோரும் நினைப்பது போல் அது பிராமணனை கொன்றால் மட்டும் வருவது அல்ல, எவன் தவத்தில் சிறந்தவனோ எவன் பக்தியில் உயர்ந்தவனோ எவன் வேத ஞானத்தில் மகா உயர்ந்த அறிவில் இருப்பவனோ அவனை கொல்வது எல்லாமே பிரம்மகத்தி தோஷம்
ஒருவனுக்கு அறிவும் தவமும் வாய்ப்பது அரிது, அதை கொண்டு அவன் பல்லாயிரகணக்கான மக்களை வழிகாட்டமுடியும், ஞானம் கொடுக்கமுடியும்
அப்படிபட்ட ஒருவனை கொல்வதால் ஏராளமான மக்களை அறியாமையில் தள்ளும் பாவத்தை ஒருவன் செய்வதாலே அந்த தோஷம் தீர்க்கமுடியா பிரம்மஹத்தி என்றாயிற்று
வரகுண பாண்டியனும் அதில்சிக்கினான், உடல் தளர்ந்தது அவ்வப்ப்போது குழப்பம் வந்தது, முக்கியமாக அவனால் உறங்கமுடியவில்லை, பிரம்மஹத்தி தோஷமும் அந்தணன் ஆவியும் அவனை பாடாய் படுத்தின
பாண்டிய மன்னர்கள் சிவனடியார்கள், ஆலவாய் நாதன் முதல் ராமேஸ்வரம் நெல்லை தென்காசி குற்றாலம் என பெரும் பெரும் சிவாலயங்களை கட்டியவர்கள், அப்படிபட்ட பாண்டியர்களின் மன்னன் கடைசியில் சிவனிடமே அடைக்கலமானான்
சிவபெருமான் அவனுக்கு இறங்கிவந்து சொன்னார், “பாண்டியா இது கர்மவினை, உன் கர்மத்தை மாற்றும் சக்தி திருவிடைமருதூர் ஆலயத்துக்கே உண்டு, அங்கே சென்று உன் கர்மம் தீர்ப்பாய்”
பாண்டிய மன்னன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தான், காரணம் பாண்டிய நாட்டில் இல்லா சிவாலயங்கள் இல்லை ஆனால் சிவனோ சோழநாட்டு சிவாலயத்துக்கு செல்ல சொல்கின்றார்
சோழநாடோ பகைநாடு, தன்னை நிச்சயம் சோழமன்னன் அனுமதிக்கபோவதில்லை என்பதால் மிக மிக குழம்பினான்
அப்போதுதான் செய்திவந்தது, சோழமன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துவரும் செய்தி அது
அதாவது பாண்டிய மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தால் ஆரோக்கியம் சிந்தை கெட்டது, மனமும் சிந்தையும் பாதிக்கபட்டது இப்போது போர் தொடுத்தால் வெற்றி என சோழமன்னன் திட்டமிட்டு வந்தான்
ஆனால் போரில் சோழமன்னன் தோற்றான் பாண்டியனே வெற்றிபெற்றான், அது சிவனருளால் நடந்தது
பின் வரகுண பாண்டியன் திருவிடை மருதூருக்கு சென்றான், அந்த அந்தணன் ஆவியும் தோஷமும் அவனோடே சென்றது
“பாண்டியா முன்வாசல் வழியாக வந்து காசிநோக்கி இருக்கும் வடக்கு வாசல் வழியாக செல்” என அவனுக்கு உத்தரவும் வந்தது
பாண்டிய மன்னன் ஆலயத்தில் நுழையும் போது அவனை பிடித்திருந்த ஆவியால் நுழையமுடியவில்லை அது வெளியில் நின்று மன்னன் வரட்டும் என காத்திருந்தது
மன்னனோ சிவனை வணங்கினான், உருகினான் பெரும் வழிபாடுகளை நடத்தினான், பலமணிநேரம் அவன் அங்கே அமர்ந்தபின் அவன் வடக்குவாசல் வழியாக வெளியேறி பாண்டிநாட்டுக்கு வந்தான்
கோவில் வாசலில் நின்றிருந்த ஆவிக்கு சிவன் நற்கதி அருளினார், அந்த தோஷமும் நீங்கிற்று
அவன் அங்கே கர்மம் நீங்கி புதுபிறப்பை அடைந்தான், பின் அவன் மாபெரும் சிவபணிகளை செய்து பெரும் புகழுடன் எதிரிகளே இல்லாத மன்னனாக வாழ்ந்து முடிந்தான்
பாண்டிய மன்னர்களில் அவனுக்கென பெரும் இடம் உண்டு, அப்படியான பெருநிலையினை இந்த திருவிடை மருதூர்தான் கொடுத்தது
ஆம், அக்கோவிலில் கிழக்குவாசல் வழியாக சென்று காசியினை நோக்கிய வடக்குவாசல் வழியாக வந்தால் கர்மம் கழியும் என்பது அந்த காட்சியில் சிவன் சொன்ன போதனை
அந்த வழமை இன்றுவரை உண்டு, இன்றுவரை பின்பற்றபடும் நடைமுறை அது
ஆம் , அந்த ஆலயம் ஒருவரின் கர்மபலன்களை கழிக்கும், அழிக்கும், அவர்களை புதுபிறப்பாக மாற்றி வாழவைக்கும்
இந்த இடையார்சுனம் எனும் திருவிடைமருதூர்தான் ஆண்மம், கர்மம், மாயை எனும் மும்மலத்தின் இடையில இருக்கும் கர்மத்தை அழிக்கும் சக்தி கொண்டது
இந்த ஆலயத்துக்கு சென்றுவழிபட்டால் கர்மம் கழியும், இங்கே , 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
அதனால் 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் சாட்சியாக அமைந்துள்ளன
இது சந்திரனுக்குரிய தலம், சந்திரன் என்பது மன சம்பந்தபட்ட கிரகம், மனமே எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவன் கர்மமானது அவன் மன சிந்தனையால் அது கொடுக்கும் வழி நடப்பது
அந்த மனம் தெளிவாக இருத்தல் அவசியம்
வரகுண பாண்டியன் மனதினால் பாதிக்கபட்டான், அவன் சிந்தை பாதிக்கபட்டது ஒருவித இருள் அவன் மனதில் குடிகொண்டது
தீய ஆவி ஆதிக்கம், செய்வினை, பில்லி சூனியம் என்பதெல்லாம் இந்த மனதை முடக்குபவை, மனம் என்பது சந்திரனின் ஆதிக்கம்
இதனாலே மனபாதிப்பு கொண்டவர்கள் பௌர்ணமி அமாவாசைகளில் கொஞ்சம் அதிக உணர்வோடு இருப்பார்கள்
அப்படியான சந்திரன் அருள் வழங்கும் தலம் இது, அங்கே சிவனருளும் சேர்ந்து தன் சாபம் நீங்கி தெளிவு பெற்றான் வரகுண பாண்டியன்
இந்த ஆலயம் கர்மம் போக்கும், அப்படியே சித்தபிரம்மை, மனநோய், பில்லி சூன்யம், ஏவல் போன்ற பாதிப்புகளுக்கு இது ஆக சிறந்த பரிகார தலம்
இங்கே மனவியாதிகள், ஏவல்கள், பேய் பிசாசு பாதிப்புகள், சித்த பிரம்மை, பில்லி சூனியம் என பாதிக்கபட்டோர் வந்து வேண்டினால் பலன் நிச்சயம் உண்டு
21 நாட்கள் அங்கு விளக்கேற்றி அன்னை மூகாம்பிகையிடம் வேண்டி இந்த பிரகாரங்களை சுற்றி சிவனை சரணடைந்து வழிபட்டால் எந்த பில்லிசூனியமும், பேய் பிசாசுகள் சாபமும் , முன்னோர் சாபமும் எல்லா பாவமும் கழியும், சித்த பிரம்மை சீராகும் இது சத்தியம்
இங்கு 32 தீர்த்தங்கள் உண்டு. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் மகா பிரசித்தி
தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறுவார்கள்
அப்படியே இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் ஏராளம் உண்டு
அக்காலத்தில் யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற வாரிசை இங்கு நீராடித்தான் பெற்றான்
சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் இங்கு வந்தே வாரிசை பெற்றுகொண்டான்
தேவவிரதன் என்ற கள்வன் தன் தீய கர்மாவால் இறந்து இங்கே புழுவாய் பிறந்து, இந்த தீர்த்தம் பட்டதால் பாவம் தீர்ந்து முக்தியடைந்தான் என்பது புராண செய்தி
இத்தலம் கர்மா கழிக்கும், பேய் பிசாசு ஏவல் பில்லி சூன்யங்களை ஒழிக்கும், சித்தபிரம்மை மனநோய்களை குணபடுத்தும், இன்னும் மகப்பேற்றை அருளும்
ஜாதகத்தில் சந்திரனால் பாதிப்பு இருந்தால்,சந்திர புத்தி பாதிப்பு இருந்தால் இங்கு வழிபட்டால் தீரும்
இன்னும் பிரம்மஹத்தி தோஷம் முதல் சனிதசா முதல் எல்லா பாதிப்பும் தோஷமும் நீங்கும்
சோழர், பாண்டியர், மராட்டியர், நாயக்கர் என தலைமுறை தலைமுறையாய் கொண்டாடபடும் ஆலயம் இது
இது சிவபெருமானே வந்து ஸ்தாபித்து வழிபட வகைகளும் பூஜை தத்துவங்களும் ஏற்படுத்தி கொடுத்த தலம்
அவரே தேவர்களை வழிபட செய்து மக்களுக்கு வழிகாட்டிய தலம்
மன்னர்களும் சிறந்த ஒருவனை கொண்டே, அந்த வரகுண பாண்டியனை கொண்டே எல்லா மக்களுக்கும் இந்த ஆலயத்தின் பெருமையினை உரக்க சொன்ன ஸ்தலம்
அங்கே சிவன் வரகுண பாண்டியனுக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் அற்புதம் செய்ய காத்து கொண்டிருக்கின்றார், ஒவ்வொருவரின் கர்மமும் துயரமும் குழப்பமும் கஷ்டமும் நீங்க எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார்
அந்த ஆலய கதவுகள் உங்களுக்காக திறந்துள்ளன, அந்த நடைபாதைகள் உங்களுக்காக காத்திருகின்றன
சிவனருள் உங்களுக்கு கிடைக்குமென்றால் நிச்சயம் செல்லுங்கள், தேடி செல்லுங்கள் உங்கள் கர்மா தீரும், பாவமும் சாபமும் தீரும், கண்ணுக்கு தெரியா சூட்சும சிக்கலெல்லாம் தீரும் வாழ்வு சிறக்கும்
அந்த சிவனோடு கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகையும் உங்களுக்கு ஞானமும் கல்வியும் தெளிவும் அறிவும் திருவும் வழங்க காத்து கொண்டிருக்கின்றாள்
இந்த மூகாம்பிகை மகா விஷேஷமானவள் மூகாசுரனை சம்ஹரித்த சாபம் நீங்க மூகாம்பிகை இங்கு வந்து நிவர்த்தி பெற்றாள்
மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றுக்கு இக்கோயிலில் உள்ள ஸ்ரீமூகாம்பிகைக்கு அபிஷேகம் செய்தால் எல்லாம் மாறும் . இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்களுக்கு கர்ப்பம் வாய்க்கும் அப்படியே சுக பிரசவம் அமையும்
இழந்ததையெல்லாம் மீட்டுதரும் ஆலயம் இது
தஞ்சை அரசின் ஆட்சி உரிமையை இழந்த பிரதாப சிம்மன் என்னும் அரசனின் மனைவியான அம்முனு என்பவள், தாங்கள் மீண்டும் ஆட்சியைப் பெறவும் தங்கள் திருமணம் நிறைவேறவும் இங்கு வந்து லட்ச தீபம் ஏற்றினாள், எல்லா மீள பெற்றாள்
பின் தானே எந்த கோலத்தில் பாவை விளக்கைத் தாங்கி நின்று வழிபட்டால்ளோ அதுபோலவே ஒரு திருவிளக்கை செய்து கொடுத்ததும் தன் பிராத்தனையை நிறைவேற்றினாள்.
அந்த விளக்கு இன்றும் அவள் பெற்ற வரத்தையும் சிவனின் அருளையும் சொல்லி ஒளிவிட்டுகொண்டிருக்கின்றது
திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் தன்னை ஜோதிவடிவாக மாற்றி, காயத்தை காற்றில் கரைத்து சிவனோடு ஐக்கியமான தலம் இது
குரு தலங்களில் திருவிடைமருதூர் மிகவும் முக்கியமானது. திருவிடைமருதூர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வேறெங்கும் காண முடியாத வித்தியாச கோலம் கொண்டவர்.
அந்த திருவிடை மருதூர் மகாலிங்க நாதனை சென்று வணங்குங்கள், என்னென்ன கஷ்டம் உண்டோ எல்லாமே கரையும், எனென்ன சிரமமும் துயரமும் கண்ணீரும் உண்டோ எல்லாம் மாறும் புதுபிறப்பாய் வாழ தொடங்ங்குவீர்கள் இது முக்கால சத்தியம்
- கட்டுரை: பிரம்மரிஷியார்