பிரிந்தவரை சேர்க்கும் பெருமாள்!

விழாக்கள் விசேஷங்கள்

கீழாம்பூர் வெங்கடேச பெருமாள் ஆலயம்

த்யான ஸ்லோகம்

விநா வேங்கடேஸஆம்  ந நாதோ ந நாத
ஸதா வேங்கடேஆம் ஸமராமி ஸ்மராமி |
ஹரே வேங்கடேஆ ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேஆ ப்ரயச்ச ப்ரயச்ச ||

>ஊர் பெயர் காரணம்

கல்வெட்டு செய்திப்படி ஆம்பல் பூக்கள் அதிகம் காணப்பட்ட ஊர் என்பதால் ஆம்பலூர் என்று ஆனதாகத் தெரிகிறது. வடமொழியில் இவ்வூரை சிநேகபுரி என்று சொல்கிறார்கள். சிநேகபுரி என்று அழைக்கப்பட்டதற்கான கதை தனியாகத் தரப்பட்டுள்ளது. சிநேகம் என்றால் அன்பு. புரி என்றால் ஊர். அன்பு + ஊர் அன்பூராகி பின்னர் பேச்சு வழக்கில் ஆம்பூராகி இருக்கவேண்டும்.

முதலில் தோன்றிய பெருமான்

ஆம்பூர் மக்கள் முதலில் சன்யாசி மேடு என்னும் பகுதியில் வசித்ததாகவும் பின்னர் காலப்போக்கில் பாண்டிய சேர சோழப் படைகள் மோதிக் கொண்டபோது கி.பி.1500 வருடம் வாக்கில் மேற்கு நோக்கிச் சென்று ஊரின் தெற்குப்பகுதியில் முதல் குடியிருப்பை அமைத்ததாகச் சொல்கிறார்கள். பின்னர் ஊரின் வடபகுதியிலும் குடியிருப்புக்கள் உண்டாயின. முதலில் தெற்குத் தெருவில் ஸ்ரீவெங்டேசப் பெருமாள் ஆலயமும் பின்னர் வடக்குத் தெருவில் பெருமாள் ஆலயமும் வந்ததாக அறியப்படுகிறது. இவ்விரு ஆலயங்களுக்கும் நடுவில் ஊரின் பொதுவான சிவன் கோவிலும் உள்ளது. காசிவிஸ்வநாதர் சுவாமியின் பெயர். விசாலாட்சி அம்பாளின் பெயர். ஊரின் வடபகுதியில் முதலில் விநாயகப் பெருமானுக்கு ஆலயமும் எழுப்பப்பட்டது. தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் பெயர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள். தாயார் பெயர் பூமிதேவி நீளாதேவி. பெருமாளின் வலது கைபுறம் பூமிதேவியும் இடக்கை புறம் நீளா தேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மூலவர் சன்னதிக்கு எதிர்த்தார்போல் கருடாழ்வார் காட்சி தருகிறார். வெளிப்பிரகாரத்தில் வேப்பமரத்தடியில் நாகப் பிரதிஷ்டைகளும் உள்ளன. வைகாசன ஆகமத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன.

கல்வெட்டு

மேல் ஆம்பூர் பூங்குறிச்சி குளக்கரையில் 1916 ஆம் ஆண்டு எடுத்த 519 வது எண் கல்வெட்டு சகம் 1560 (கொல்லம் 813) ஆம் ஆண்டு சிவசைலநாதருக்கு வழிபாடு செய்வதைத் தலையாய கடமையென ஆம்பூர், ஆழ்வார் குறிச்சி, கடையம் ஊர்மக்கள் மேற்கொண்டனர் என்ற செய்தியும் பணம் நிலம் முதலியன கொடுத்தனர் என்ற செய்தியும் உள்ளது.

கீழாம்பூரில் சத்திரத்தை ஒட்டிய பகுதியில் எடுக்கப்பட்ட கல்வெட்டில் (518 எண் கல்வெட்டு) வட்டெழுத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. வேணாட்டு அரசன் இரவிவர்மனைக் குறித்த செய்தியும் உள்ளன. இந்த இரவிவர்மன் என்னும் கேரள அரசன் தன் மனைவியிடம் கோபம் கொண்டு விலகியிருந்ததாகவும் பின்னர் கீழாம்பூரிலுள்ள தெற்குத் தெருவில் காட்சிதரும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மற்றும் பூமி நீளா தேவியை தரிசனம் செய்து ஒன்று சேர்ந்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

தீர்த்தம்

கடனா நதி. இதனைக் கருணை ஆறு என்றும் கூறுகிறார்கள். கருணா ஆற்றின் தென்பகுதியில் (வலப்புறம்) கீழாம்பூர் ஊர் அமைந்துள்ளது. அத்திரி முனிவரிடம் இரண்டு சிஷ்யர்கள் இருந்தார்கள். ஒருவன் கங்கையில் குளிக்க முனிவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு சென்று விடுகிறான். இன்னொரு சிஷ்யனுக்கு நாம் கங்கையில் குளிக்கத் தருணம் வாய்க்கவில்லையே என்ற கவலை பற்றிக் கொள்கிறது.

அத்திரி முனிவருக்கு சிஷ்யனின் எண்ணம் புரிகிறது. உடனடியாக சிஷ்யனைத் தன் அருகில் அழைத்துத் தன் தண்டத்தால் தரையில் அடிக்கிறார். வடக்கே உள்ள கங்கை நீர் கடனாக வரப்பெற்று ஒரு ஊற்றுக் கிளம்பி நதியாகப் பிரவாகம் எடுக்கிறது. இந்த நதியில் சிஷ்யன் குளித்து கங்கையில் குளித்த புண்ணியத்தை அடைகிறான்.

கடனாகப் பெறப்பட்ட நதி நீர் என்பதால் இதனைக் கடனா நதி என்றும் 365 நாட்களும் வற்றாது நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் நதி என்பதால் இதனைக் கருணை நதி என்றும் அழைப்பார்கள். இந்த நதியில் குளித்து பூமி நீளா தேவி சமேத ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்கும்.

பரிகாரம்

கடன் தொல்லையிலிருந்து விடுபட ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு வந்து வளர்பிறை சதுர்த்தியன்று ஹோமங்கள் செய்தால் கடன் தொல்லை நீங்கும். முன் வைத்த காலுடன் நிற்கும் நீளா தேவியை வேண்டி வழிபட்டால் குபேர யோகம் உண்டாகும். சகலவிதமான வியாதிகளும் விஷ சம்பந்தமான நோய்களும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்குத் தானே நீங்கும். கணவன் – மனைவிக்கு இடையே பிணக்கு இருந்தாலோ அல்லது விவாகரத்து வரை செல்லும் வழக்காக இருந்தாலோ இக்கோவிலில் வந்துவழிபட்டால் வேணாட்டு அரசன் ரவிவர்மனுக்கு மனைவியோடு சேரும் பாக்கியம் கிடைத்ததைப் போன்று பாக்கியங்கள் கிடைக்கும்.

ஸ்தல விருட்சம்

இக்கோவிலின் ஸ்தல விருட்சம் வில்வம். வில்வம் தாயாருக்கு உரியது. வில்வ விருட்சம் இருக்கும் இடத்தில் தனலாபம் இருக்கும் என்பார்கள். இப்போதும் கோவிலில் வில்வமரங்கள் காணப்படுகின்றன.

இடம்

கீழாம்பூர், தென்காசி – அம்பாசமுத்திரம் பஸ் மார்க்கத்தில் (ரயில் மார்க்கத்திலும்) ஆழ்வார் குறிச்சிக்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது. ஆம்பூர் என்பதுதான் ஊரின் பெயர். வெள்ளைக்காரர்கள் வரி வசூலிப்பதற்காக மேல் ஆம்பூர் கீழ் ஆம்பூர் என்று பிரித்ததாகச் சொல்கிறார்கள்.

பஞ்சக் ரோசம்

கங்கா நதிக் கரையில் எவ்விதம் பஞ்சக் ரோசமுள்ளதோ அதுபோல கடனா நதியைச் சுற்றிலும் பஞ்சக் ரோசம் உள்ளது. சிவசைலம் ஆழ்வார்குறிச்சி, கீழாம்பூர், பிரம்மதேசம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்கள் பஞ்சக் ரோசம் ஊர்களாகும்.

பெருமாள் பெருமாட்டி

கோவில் குடிகொண்டுள்ள பெருமாள் பெயர் ஸ்ரீவெங்கடேச பெருமாள். பூமி நீளா தேவிகள் பெருமாட்டிகள். நீளா தேவி சிலை (மூலவர்) மூலவர்களின் மற்ற இரு சிலைகளையும் விடச் சற்று முன் வந்து தென்புறம் சாய்வாகச் சிறிது திரும்பிய வண்ணம் உள்ளது. தெற்கு முகம் என்பது குபேர திக்கு. இங்கு வந்து இந்த நீளா தேவியை வழிபட்டால் குபேர அருள் பெறலாம். செல்வம் செழித்து ஓங்கும்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது வந்த ஆலகால விஷத்தைச் சிவபெருமான் உண்டார். இதனைப் பார்வதி தேவிக்குத் தெரிவிக்க உடனே கிளம்பிவிட்டார் நீளா. பெருமாளின் தங்கை பார்வதி என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி தேவியார் சிவபெருமானின் கழுத்துப் பகுதியைப் பிடிக்க அவர் நீலகண்டரானார் என்பது கதை.

நீளாதேவி உடனடியாகப் புறப்பட்ட காரணத்தால் இக்கோவிலில் ஸ்ரீவெங்டேச பெருமாள், பூமி தேவி சிலையைவிட சற்று முன்னர் மூலவராக நிற்கிறார். இது ஒரு விசித்திரமான ஒன்றாகும். ஆகையால் இந்த வெங்கடேசப் பெருமாள் கோவில் விசேஷமானது.

கோவில் அமைப்பு

கருவறை மண்டபத்தில் மூலவர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் பூமி நீளா தேவியுடன் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்தியாய்க் காட்சி தருகின்றனர். மணிமண்டபம் இரண்டு மணிகளைக் கொண்டதாக உள்ளது. இங்குள்ள வலப்புறம் உள்ள தூணில் யோக நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் மூலவரை நோக்கி கருடாழ்வார் எல்லாக் கோவில்களிலும் உள்ளதைப் போல் காட்சி தருகிறார்.

மகாமண்டபம் இடப்புறம் சுவரில் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகம் பற்றிய செய்திகள் உள்ளன. கோவிலைச் சுற்றிய பிரகாரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வில்வமரம் வான்நோக்கி வளர்ந்துள்ளது. கோவிலின் வலப்புறம் அமைந்துள்ள கிணற்றை ஒட்டிக் கீழ்பகுதியில் நெல்லி மரம் வேப்பமரம் இரண்டும் உள்ளது. இவ்விரண்டு விருட்சங்களுக்கும் பூஜை கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நடப்பதுண்டு. நெல்லி மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டைகளும் இப்போது உண்டாக்கப்பட்டுள்ளன.

கோவில் திருவிழாக்கள்

கோவில் வருஷாபிஷேகம் (கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நாள்) வைகாசி மூலநட்சத்திரத்தில் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகம் நடைபெறும் நட்சத்திரம் தான் ஸ்வாமியின் நட்சத்திரம் ஆகிறது. 1979 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற கும்பாபிஷேகம் ஹஸ்த நட்சத்திரத்தில் வைக்கப்பட்டது. அண்மையில் மீண்டும் 2007  ஆவணியில் கும்பாபிஷேகம் ஹஸ்த நட்சத்திரத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1979 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகம் மூலநட்சத்திரத்தில் அமைந்தது.

புரட்டாசி சனிக்கிழமை நான்கு கிழமைகளும் மிகச்சிறப்பாக நடைபெறும். முதல் புரட்டாசி சனிக்கிழமையைத் திருமங்கலம் சுப்பையரும் இரண்டாம் சனிக்கிழமையை ஸ்ரீராமகிருஷ்ண சாஸ்திரிகள் குடும்ப வகையறாக்களும் மூன்றாம் சனிக்கிழமையை ரெங்கூன் அப்பாத்துரையும் நடத்தி வந்தனர். நான்காம் சனிக்கிழமை கிராம பொதுவில் நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசியின் போது சேஷ வாகனம் பிச்சுவாத்தியார் குடும்பத்தினரால் (மாப்பிள்ளை சங்கரய்யர்) சிறப்பாக வீதி உலா வந்தது உண்டு. மார்கழி முப்பது நாளும் காலையில் திருப்பிட்சையும், லெஷ்மிபதி பஜனை சபாவின் பஜனையும் மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் உண்டு. மார்கழி திருவோணம் அன்று சிங்கப்பூர் ஐயாவய்யர் கோவிலுக்குச் சிறப்பு வழிபாடு செய்து தேனும் திராட்சையும் கலந்த நிவேத்தியத்தை பக்தர்களுக்கு வழங்குவார். மார்கழி மாதம் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் சகஸ்ரநாம பூஜைக்கான காலை மற்றும் மாலை நேரத்திற்கான நைவேத்தியத்தையும் வழங்கி வந்தார்கள்.

வாகனங்கள்

கோவிலில் மூன்று வாகனங்கள் உள்ளன. ஒன்று சேஷ வாகனம். தேக்கு மரத்தில் பித்தளை நாகருடன் காட்சி தருகிறது. பிச்சு வாத்தியாரின் முன்னோர்கள் செய்துவைத்த வாகனம் இது. கருடவாகனம் வெண்கல வார்ப்பு. ரங்கூன் அப்பாதுரை ஐய்யர் என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டிச் செய்து வைத்த வாகனம் என்று சொல்கிறார்கள். சிறியதாக ஒரு கேடயமுள்ளது. இப்போது மடப்பள்ளியை ஒட்டி புதிதாக வாகனங்களுக்கு என்று ஒரு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் உற்சவ மூர்த்திகள் மணிபாகவதரின் தகப்பனார் சுப்பையா ஐய்யர் செய்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவிலில் வழிபட்டோர்

குபேரன், இந்திரன், சுதர்சன பாண்டியன், கேளையப்பன் (சிநேகபுரியான்), ஸுதர்சன பாண்டியன்

இந்த சிநேகபுரி என்ற பெயருக்கு இன்னொரு கதையும் உள்ளது. ஸுதர்சன பாண்டியன் இவ்வூரில் வாசம் செய்து குழந்தைப் பேறுவேண்டி அச்வ மேதயாகம் செய்தான். வெங்கடேசப் பெருமாள் கோவில் வந்து யாகத்திற்குத் தேவையான வழிபாடுகளை செய்து யாகத்தைத் தொடங்கினான்.

ஜீவராசிகளை, பக்தர்களைச் சோதிக்கும் சிவபெருமான் தன் மகன் ஸுப்ரமண்யரை அனுப்பி மன்னனின் அச்வமேதயாகக் குதிரையைக் கட்டச் சொன்னான். குதிரை கட்டப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டியன் ஸுப்ரமண்யருடன் போரிட்டு, பின்னர் அருள் பெற்று சிவசைலநாதரையும் ஸுப்ரமண்யரையும் வாயாரப் புகழ்ந்தான். சிநேகமானான். பிள்ளை வரம் சிவசைல நாதரிடம் பெற்று நேராக ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோவில் வந்து தன் பிரார்த்தனைகளை நிறைவு செய்து கொண்டான். சிவ – வைணவ ஒற்றுமைக்கு இந்தக் கோவில் எடுத்துக்காட்டு. ஸுதர்ஸன பாண்டியன் சிவசைலநாதரிடம் அருள் பெற்று, பின்னர் தன் பிரார்த்தனைகளைச் செய்து நிறைவு செய்து கொண்டது பெருமாளிடம். சிவசைலநாதர் கீழாம்பூர் (சிநேகபுரி) வரும்போது சகலவிதமான மரியாதைகளையும் ஏற்பதும் வடக்குத் தெரு மற்றும் தெற்குத் தெருவிலுள்ள இரண்டு பெருமாள் கோவில்களில்தான்!

சிநேகபுரி

இவ்வூருடன் தொடர்புடைய ஆலயம் சிவசைலநாதர் ஆலயம். சிவசைலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமான், அன்னை பரமகல்யாணியுடன் காட்சி தருகிறார். கீழாம்பூரில் வடக்குத் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் கண்டு எடுக்கப்பட்டு அசரீரீ வாக்குப்படி சிவசைலத்தில் அம்பாளாய்ப் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஆம்பூர் ஆழ்வார் குறிச்சி மக்கள் கொண்டாடும் தெய்வமான ஸ்ரீசிவசைலநாதர் ஸ்ரீபரமகல்யாணியுடன் மறுவீட்டிற்காகக் கீழாம்பூருக்கு மே மாதம் வருவதுண்டு.

மூன்று நாட்கள் நடக்கும் வஸந்த உற்சவம். இந்த உற்சவத்தில் முதல் நாள் ஊருக்கு வருகை புரிந்து ஊர் பவனி வந்து முதன் முதலில் தெற்குத் தெருவில் உள்ள பெருமாள் கோவிலில் களைப்பு நீங்க இறங்கி நைவேத்தியம் தீபாராதனைகளை ஏற்பதுண்டு. பின்னர் வடக்குத் தெரு பெருமாள் கோவில் சென்று அங்கே பல அபிஷேகங்களைக் கண்டு இரண்டு நாட்கள் தங்கியிருந்து மூன்றாம் நாள் காலை தன் நாதருடன் சிவசைலம் சென்று அடைவார், ஊர் மகளான பரமகல்யாணி.

ஆம்பூர் ஆழ்வார் குறிச்சி மக்களிடமிருந்து தினசரி ஊர்ப் பால் சேகரித்த பின்னர்தான் சிவசைலத்தில் உச்சிக்கால பூஜை நடைபெறும். கேளையப்பன் என்பவர் தினசரி பூவையும் பாலையும் சிவசைலத்திற்கு ஆம்பூரில் இருந்து சிநேகத்துடன் அனுப்பிவைப்பாராம். சிநேகபுரியான் வந்துவிட்டானா என்று கேட்டுத்தான் பின்னர் சிவசைலத்தில் பூஜை நடைபெறும் என்று சொல்வார்கள்.

ஊரின் நட்சத்திரம்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நட்சத்திரம் உண்டு. கீழாம்பூரின் நட்சத்திரம் கார்த்திகை. சிவபெருமான் ஸுதர்ஸன பாண்டியனை அடக்க முருகப் பெருமானை அனுப்பிவைத்ததால் முருகப் பெருமான் சம்பந்தப்பட்ட நட்சத்திரமே இவ்வூர் நட்சத்திரமானது. சன்யாசி மேட்டிலிருந்து அக்கிரஹாரமாக தங்கள் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்ட நாள் கார்த்திகை நட்சத்திர நாள் என்றும் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

 

கட்டுரை: கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்பிரமணியன்

தகவல் தொடர்புக்கு:

ஸ்ரீவெங்கடேச பெருமாள் பக்த சபா,

8/12, தெற்கு கிராமம்,

கீழஆம்பூர், திருநெல்வேலி மாவட்டம்.

Leave a Reply