கண்ணனைப் பாடிய ஊத்துக்காடு வேங்கடகவி

விழாக்கள் விசேஷங்கள்

அவர் உள்ளூர் வித்துவான்தான். அவருடைய வாசிப்பை அவர்கள் அதற்குமுன் எத்தனையோ தடவை கேட்டிருக்கிறார்கள். என்றாலும், அன்று அந்த ஊர்வலத்தில், அந்தச் சத்திரத்தின் முன் அவர் வாசித்தது முற்றும் புதுமை! அதைக் கேட்டு அந்த ரசிகர்கள் மட்டுமா வியந்து பரவசமானார்கள்! சத்திரத்தின் திண்ணையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு பெரியவருந்தான் பெரும் வியப்புக்கு உள்ளானார். ஆனால், மற்றவர்களின் வியப்புக்கும் அவருடைய வியப்புக்கும்  வேறுபாடு உண்டு.

நாகசுர இசையைச் சிறிது நேரம் செவியுற்ற அந்த மனிதர், முன்புறம் வந்தார். வித்துவானை அணுகினார்; அவரைக் கண்டதும் பயபக்தி விநயத்துடன் வித்துவான் இரு கைகளையும் தலைமேல் குவித்து அஞ்சலி செய்தார். பின்பு, கை கட்டி வாய் புதைத்து நின்றார்.

 

“அப்பா, இப்போது நீ வாசித்துக் கொண்டிருக்கிற இசை முறையை யாரிடம் பயின்றாய்?” என்று கேட்டார் பெரியவர்.

“எல்லாம் அந்த இடத்து அருட்பிரசாதம்தான்” என்று பணிவுடன் பதில் சொன்னார் நாகசுர வித்துவான்.

“என்ன! என்னிடம் பயின்றாயா?”

“ஆமாம்; மறைவிலிருந்து கேட்டுப் பயின்றேன்.”

“ஓஹோ! அப்படியா!”

அவ்வளவுதான்; அதற்குமேல் பெரியவர் எதுவும் பேசவும் இல்லை; அங்கே நிற்கவும் இல்லை. வேகமாக நடந்தார்; கூட்டத்தைக் கடந்தார்; இருளில் மறைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஊர்வலத்தின் சூழ்நிலையே மாறிவிட்டது.

கல்யாணம் நிகழ்ந்த ஊர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நீடாமங்கலம். கல்யாணத்தை நிகழ்த்தியவரின் பெயர் நீலகண்ட சிவாச்சாரியார். நாகசுரம் இசைத்தவர் ருத்திரபசுபதி பிள்ளை. இதே பெயரில் இன்னொரு வித்துவானும் புகழுடையவராக இருந்ததால், இவரைப் “பெரிய ருத்திரபதி பிள்ளை’ என்று குறிப்பிடுவார்கள். சத்திரத்து வாசலில் தோன்றி, நாகசுர வித்துவானோடு உரையாடி மறைந்தவர்தான் வேங்கட சுப்பையர்.

தினமும் பார்த்துப் பழகிவரும் உள்ளூர்வாசியான வேங்கட சுப்பையர், பிரபல இசைக் கலைமேதையான ருத்திரபசுபதி பிள்ளையால் பயபக்தி விநயத்துடன் குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றி வழிபடத்தக்க சிறப்புடையவர் என்பது அன்றுவரையில் யாருக்குமே தெரியாது. வேங்கட சுப்பையர் அந்த அளவுக்குத் தம்மை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

மக்களின் நடமாட்டம் அற்ற இடத்திலே அவர் நாத உபாசனையிலே ஈடுபட்டிருக்கிறபோது, ருத்திரபசுபதி பிள்ளை தற்செயலாக ஒருநாள் அவருடைய கானத்தைக் கேட்க நேர்ந்தது. “இசையிலே இத்தகைய சிறப்பு வழிகளும் இருக்கின்றனவா!’ என்று வியந்த அவர், வேங்கடசுப்பையரை அணுகி வணங்கித் தம்மை மாணவனாக ஏற்று அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். “உலகத் தொடர்பையும் நான் விரும்பவில்லை; பிறருக்குப் பயிற்றுவிக்கும் முறையும் எனக்குத் தெரியாது” என்று கூறி, வேங்கட சுப்பையர் மறுத்துவிட்டார்.

ருத்திரபசுபதி பிள்ளைக்கு ஆயாசந்தான். என்றாலும், ஆர்வம் ஆவரை அயர்ந்திருக்க விடவில்லை. மானசிகமாக வேங்கட சுப்பையரைத் தம் குருவாகப் பாவித்து நொச்சிக்காட்டில் மறைந்திருந்து அவருடைய கானத்தை நாள் தவறாமல் கேட்டு வந்தார். ஆனால், பெரியவரிடமிருந்து பொறி பறப்பதுபோல் மின்வேகத்தில் தோன்றி மறையும் கலை நுணுக்கங்களில் ஒன்றுகூட ருத்திபசுபதி  பிள்ளையின் மனத்தில் தங்கி நிற்கவில்லை.

ஆகவே, தொடர்ந்து நெடுநேரம் கேட்கும் பழக்கத்தை மாற்றி, ஒவ்வோர் அம்சமாக அங்கே இருந்து கேட்பதும், இருப்பிடம் திரும்பிச் சாதகம் செய்வதுமாகப் பல நாள் புரிந்த முயற்சியினால் ஒரு சில அம்சங்களையே அவரால் பயில முடிந்தது.

அன்று வரையில் வெளியிடத்தில் எங்குமே அந்த இசையை ஆளாமல் இருந்த பிள்ளை அன்றைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, குரு முகமாக அரங்கேற்றுவதுபோல் சத்திரத்து வாசலில் வாசித்தார். அன்று வரையில் மறைந்திருந்த வேங்கடசுப்பையரின் சிறப்பு அனைவருக்கும் இதன் விளைவாகப் புலனாகிவிட்டது.

அன்று, இதற்குமேல் கல்யாணக்காரர்களுக்கு ஊர்வல நிகழ்ச்சியிலோ, வேறு எந்த அலுவல்களில்தானோ மனம் ஒன்றவில்லை. “பிறர் மூலம் கேட்கிறபோதே இவ்வளவு சிறப்பாக இருக்கிற இசையை வேங்கடசுப்பையரிடமே நேரில் கேட்டால் எவ்வளவு உயர்வுடையதாக இருக்கும்!’ என்று எண்ணினார்கள்.

“வேங்கடசுப்பையரை எப்படியாவது பாடச் செய்து கேட்க வேண்டும்’ என்று முயன்றார்கள். அது அவ்வளவு எளிதல்ல என்பது அனைவரும் அறிந்தது. ஆகவே, நேர்வழியை விட்டு வேறு வழியைக் கடைப்பிடித்தார்கள்.

அந்த வைபவத்தில் ஒரு வித்துவானின் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. வேங்கடசுப்பையரை வற்புறுத்தி வைபவத்துக்கு அழைத்தார்கள். இசை நிகழ்ச்சியைக் கேட்கச் செய்தார்கள். எல்லாரும் ஒருமுகமாக அடிக்கடி அந்த வித்துவானையும் அவருடைய இசையையும் புகழ்ந்தார்கள்; அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்தார்கள். வேங்கடசுப்பையருக்கு அந்த இசையும் ரசிக்கவில்லை; அவர்களுடைய புகழ்ச்சியும் சகிக்கவில்லை. அந்த உணர்ச்சி அவருடைய உள்ளத்தில் வேகத்தை உண்டுபண்ணிற்று. தம்பூராவை வாங்கினார்; மீட்டிக்கொண்டே பாடத் தொடங்கிவிட்டார்!

விடிகிற வரையில் அவருடைய நாத உபாசனை தங்கு தடையில்லாது நடைபெற்றது. விடிந்ததும் தம்பூராவை வைத்துவிட்டு எழுந்து போய்விட்டார். அப்போதுதான் அங்கே கூடி இருந்தவர்கள் சுயஉணர்வு பெற்றார்கள்.

இந்த வேங்கடசுப்பையர் யார்? எந்த ஊர்? எந்தப் பரம்பரையில் வந்தவர்? யாரிடம் இசை பயின்றார்? ஏன் இவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மறைந்து வாழ்ந்தார்? இவருடைய சிறப்புகள் யாவை?

கர்நாடக சங்கீத உலகில் சில காலமாக, ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் சாகித்தியங்கள் சிறப்பாக உலகி வருகின்றன. பலரும் ஆர்வத்தோடு அவற்றைப் பயின்று நன்கு பாடி வருகிறார்கள். இத்தகைய செல்வத்தை நமக்கு வழங்கிய மகான்தான் இந்த வேங்கடசுப்பையர்.

ஊத்துக்காடு என்ற ஊர் நீடாமங்கலத்துக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ளது. பட்டீசுவரம், ஆவூர், கோவந்தகுடி, ஊத்துக்காடு நான்கும் அருகருகே உள்ள ஊர்கள். கோவந்தகுடி என்பது பின்காலத்தில் “கோவிந்தகுடி’ என்று மருவி வழங்கி வருகிறது. ஊத்துக்காடு என்ற ஊருக்குச் “சுரணைக்காடு’ என்று மற்றொரு பெயரும் உண்டு. இதையே வட மொழியில், “தேனுசுவாசபுரம்’ என்பார்கள். தசரத சக்ரவர்த்தி, வசிஷ்ட மகரிஷி, நாரதர், கிருஷ்ண பரமாத்மா, காமதேனு, பட்டி, நந்தினி முதலியோரை இணைத்த புராண வரலாறு கொண்டவை இந்த நான்கு ஊர்களும்.

அந்தக் காலத்தில் வேங்கட சுப்பையர் என்ற பெயருடைய பலர் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களில் மகநோன்புச் சாவடி வேங்கடசுப்பையர் ஸ்ரீதியாகப் பிரம்மத்தின் உறவினர்; மாணவர். பட்டணம் சுப்பிரமணிய ஐயர், கோயம்புத்தூர் ராகவ ஐயர், மகா வைத்தியநாத சிவன், கும்பகோணம் சரப சாஸ்திரிகள் முதலியோரின் குரு.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்வர்ணக்காடு என்ற ஊரில் தோன்றி இசைக் கலையில் வல்லவராக விளங்கியவர் மற்றொரு வேங்கடசுப்பையர். ஊரின் பெயர், மனிதரின் பெயர் ஆகியவை ஒரே மாதிரி அமைந்து நாளடைவில் குழப்பத்தை உண்டுபண்ணுவது இயல்பு. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்வர்ணக்காடு வேங்கடசுப்பையர் வேறு, நீடாமங்கலத்தைச் சேர்ந்த ஊத்துக்காடு என்ற சுரணைக்காடு வேங்கடசுப்பையர் வேறு என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. மகாகவியாக விளங்கித் தெய்வ பரமான சாகித்தியங்கள் பலவற்றை நமக்கு வழங்கியவர் ஊத்துக்காடு என்னும் சுரணைக்காடு வேங்கடசுப்பையர்.

அந்த ஊரில் ராமசந்திர வாதுலர் என்னும் பெரிய வள்ளல் வாழ்ந்து வந்தார். தஞ்சை மன்னர் அந்தப் பிரதேசம் முழுவதையும் அவருக்குச் சர்வமானியமாக வழங்கியிருந்தார். அவரிடம் எப்போதும் ஒரு பொன் முடிப்பும், பொன்தாலிகள் சிலவும் இருக்குமாம். குடிபடைகளில் யார் திருமண ஏற்பாடு செய்துவிட்டு அவரைக் காண வந்தாலும், ஒரு தாலியும் ஒரு சவரனும் அளித்து ஆசி கூறுவாராம்.

அவருடைய புதல்வரின் காலத்தில் அந்தச் சுரணைக்காட்டுச் சர்வ மானியம் பறி போய்விட்டது. மூன்றாம் தலைமுறையில் வந்த கிருஷ்ணையர் என்பவர் தஞ்சை மன்னரை இசையால் மகிழ்வித்தார். தகப்பனார் இழந்த சர்வ மானியத்தை இதன்மூலம் மீட்டார். எனவே, அவரைக் “காட்டுக் கிருஷ்ணையர்’ என்று மக்கள் குறிப்பிட்டார்கள். அந்தக் கிருஷ்ணையரின் இளைய சகோதரர்தான் இந்த வேங்கடசுப்பையர்.

ராஜா பாகவதர் என்பவரிடம் வேங்கடசுப்பையர் ஆரம்ப இசை பயின்றார். பின்பு, கிருஷ்ணயோகி என்பவரை அணுகினார். அவர் ருத்திர உபாசகர். அக்கினி யோகத்திலே தேர்ந்தவர். அந்த யோக பலத்தினால் இசையில் கன, நய, தேசிக வழிகளை அறிவித்தவர். அவர் வேங்கடசுப்பையரை மாணவராக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மனம் வாடி எந்த நேரமும் ஏக்கத்துடன் இருந்த வேங்கடசுப்பையரை நோக்கி அவருடைய தாய், “ஏன், நம் குலதெய்வத்தை வழிபட்டு உனக்கு வேண்டிய நலங்களைப் பெறலாமே” என்றாள். அதுமுதல் வேங்கடசுப்பையர் தம் குலதெய்வமான கிருஷ்ண பரமாத்மாவை முறைப்படி வழிபடலானார்.

ஒருநாள் அவர் கண்மூடித் தியானத்தில் இருந்தபோது அருவருக்கத்தக்க தோற்றத்தில் ஒரு குழந்தை வந்து அவருடைய துடைமீது அமர்ந்தது. அவர் கண் விழித்து அந்தக் குழந்தையை அப்பால் எடுத்து விட்டுவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். மறுபடியும் அதே குழந்தை வந்து அவருடைய துடையில் அமர்ந்ததும் அவர் அதை மறுபடியும் அப்பால் செல்லவிட்டுக் கண் மூடினார். செவியில் குழலிசை கேட்டது. கண் திறந்தார்; போய்க் கொண்டிருக்கிற குழந்தையிடம் கண்ணபிரானின் சாயலைக் கண்டார். எழுந்து விரைந்தார். குழந்தை மறைந்துவிட்டது; குழல் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போதே அவருடைய ஞானக் கண் திறந்தது.

இந்த மாதிரி அநுபவங்களைத் தம் பாடல்களில் அங்கங்கே அவர் குறிப்பிட்டிருக்கிறார். பல பிறவிகளில் முயன்று பெறக்கூடிய பல வகையான புலமைகளை ஒரே பிறவியில் ஒருவர் பெற்று உலகத்துக்கு அருள் புரிவதற்குக் கடவுளின் கருணைதான் காரணம் என்பதைப் பல மகான்களின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து அறிகிறோம். ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் வரலாறும் அப்படிப்பட்டதே.

ஞானம் பெற்றபின் குடும்பம், உற்றார், உறவினர் என்ற தொடர்புகளிலிருந்து வேங்கடசுப்பையர் விடுபட்டார். கிடைத்த இடங்களில் பசித்தபோது உண்பதும் மீதிக் காலமெல்லாம் மக்கள் நடமாட்டமற்ற இடத்தை அடைந்து நாத உபாசனை மூலம் கடவுளை வழிபடுவதுமாக இருந்தார். சில வேளைகளில் நீடாமங்கலம் சத்திரத்திலும் உணவருந்தினார். ஒரு சமயம் அங்கே உண்போரில் சிலரிடையே நிகழ்ந்த ஓர் உரையாடலைச் செவி மடுத்தார். “பல பேர் வயிறார உண்ணும்படி பல சத்திரங்களை ஏற்படுத்திய சரபோஜி மன்னர், தாம்மட்டும் ஒருவேளைகூட நிம்மதியாக உணவு கொள்ள முடியாமல் நோயால் வருந்துகிறாரே!” என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

உடனே வேங்கடசுப்பையர் தஞ்சை சென்றார். சரபோஜி மன்னரைக் கண்டார். தம் கானத்தைக் கேட்கச் செய்தார். அதைக் கேட்டதன் பலனாக, வியப்புறத்தக்க முறையில் நோய்தீர்ந்த மன்னர், “தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றார். வேங்கடசுப்பையர் என்ன கேட்டார்தெரியுமா? நீடாமங்கலம் சத்திரத்தில் தம் வாழ்நாள் முழுவதற்கும் நாள்தோறும் மூன்றுவேளை உணவுதான்.

இப்படி வாழ்ந்த அவரை எப்படி எல்லாரும் புரிந்துகொள்ள முடியும்? ருத்திரபசுபதி பிள்ளைதான் முதல்முதலாக அவரை வெளிஉலகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நீலகண்ட சிவாசாரியார் வீட்டு வைபவத்திலேதான் அவர் முதல்முறையாகப் பலருடைய முன்னிலையில் பாடினார். “காயாம்பூ வண்ணனே’ “தாயே யசோதா’, “ராஸ விலாஸ’ என்ற மூன்று பாடல்களும் முதல் முதலாக அங்கே வெளியாயின.

கல்வியறிவைக் கொண்டு பாடல்கள் இயற்றுவது, கல்வியறிவோடு இசை அறிவும் பெற்றுப் பாடல்கள் புனைவது ஆகிய இருமுறைகளையும் விட, தெய்வத்தின் திருவருளால் தெய்வப்புலமை பெற்றுப் பாடல்கள் இயற்றுவது மிக மிக உயர்வானது. அத்தகைய சாகித்தியங்களில் தெய்வ மணம் வீசுவதை நாம் உணர்கிறோம்.

வேங்கடசுப்பையர் பிரம்மசாரியாக வாழ்ந்து புகழுடம்பு பெற்றவர். அவருடைய தமையனாரான காட்டுக் கிருஷ்ணையரின் பெண்வழியில் ஆறாவது தலைமுறையில் வந்தவர் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர். வேங்கடசுப்பையர் விட்டுச் சென்ற ஓலைச் சுவடிகளை நூறு ஆண்டுகளுக்குமுன் இந்தக் கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் தமையனாரும் பிறரும் புலமை மிக்க சிலரைக் கொண்டு பிரதி எடுக்கச் செய்தார்கள். இசை உள்ளளவும் ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் புகழ் நிலைபெறும் என்பதில் ஐயம் இல்லை.

 

Leave a Reply