ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவின் நிறைவையொட்டி புஷ்ப யாகம் வியாழக்கிழமை இரவு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஆண்டாள், ரெங்க மன்னாரை பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
108 வைணவ திவ்யதேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலில் மூலவர் வடபத்ரசாயி பிரதான சந்நிதியில் அருள் பாலிக்கிறார். இந்தத் தலம், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரங்கமன்னாரை மணந்து கொண்டார்.
பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரங்க மன்னார் சயனத் திருக்கோலமும், ஜூலை 28 காலை 9:10 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற விழா இன்று நிறைவு பெற்றது.
விழா நிறைவை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புஷ்பயாகம் பொதுவாக, ஆண்டாள் தேரோட்ட திருவிழா நிறைவு நிகழ்வாகும். மற்றும் திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளில் இந்த புஷ்பயாகம் நடைபெறும்.
ஆடிப் பூரத் திருவிழாவின் நிறைவு நாளில் புஷ்பயாகம் நடைபெற்றது, மேலும் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
புஷ்பயாகம் என்பது கோயிலில் உள்ள உத்ஸவர்களுக்கு பல வண்ண மலர்களால் செய்யப்படும் ஒரு சிறப்பு அபிஷேகம் ஆகும். இது ஆண்டாள் கோவிலில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே , குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுலா சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, குறவன்குளம் விழா கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி சிறப்பு அபிஷேகம்!
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி நரசிம்மர், கருடாழ்வார், வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. இக் கோயிலில் உள்ள நரசிம்மர், கருடாழ்வாருக்கு, ஆடி சுவாதியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு, வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதே போல, மதுரை வைகை காலனி, கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளை, கோயில் பட்டர் கோபால கிருஷ்ணன் செய்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நிறைபுத்தரிக்காக தரிசனத்துக்குக் கூடினர்
சபரிமலையில் நிறைபுத்தரி பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை இருந்த சுபமுகூர்த்தத்தில் பூஜைகள் நடைபெற்றன.
தந்திரி கந்தரரு பிரம்மதத்தன் மற்றும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் நெல் கதிர் கட்டுகளை கொடியமரத்தின் அருகில் இருந்து கிழக்கு மண்டபத்திற்கும், பின்னர் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீகோவிலிற்கும் கொண்டு சென்றனர். அதன் பின்னர் நிறைபுத்தரி பூஜைகள் நடைபெற்றன.
பூஜைகள் முடிந்த பின் நெல் கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. பூஜைகளை காணவும் நெல் கதிர்களைப் பெறவும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை முதலே காத்திருந்தனர்.
தொடர்ந்து சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் பூஜா பூஜை பஸ் ஸ்டாபிசேகம் உச்சிக்கால பூஜை மாலை தீபாராதனை இரவு புஷ்பாஞ்சலி படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.
திரளான பக்தர்கள் தற்போது கேரளாவில் பெய்து வரும் மழையால் பம்பை நதியில் நல்ல தண்ணீர் வந்ததால் பக்தர்கள் ஆனந்தமாக நீராடி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர் பூஜைகள் முடிந்த பின் இன்று இரவு 10 மணிக்கு கோவில் மூடப்பட்டு இனி ஆவணி மாதம் பூஜைக்கு சபரிமலை நடை திறக்கும்.
இதுபோல் நிறைபுத்தரிசி பூஜை கேரளாவில் பிரசித்தி பெற்ற அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எருமேலி உட்பட முக்கிய கோவில்கள் அனைத்திலும் இன்று அதிகாலை துவங்கி நடைபெற்றது.
தமிழகத்திலும் நிறைபுத்தரிசி பூஜை முக்கிய கோவில்களில் இன்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி கோவில், சுசீந்திரம் தாணுமாலய மூர்த்தி சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி கோவில், திருவட்டார் ஆதிகேசவர் பெருமாள் கோவில் உட்பட முக்கிய கோவில் நிறைபுத்தரசி பூஜை விழா விமர்சையாக நடைபெற்றது.
அறுவடை செய்த நெற்கதிர்களை கோயில் முன் மண்டபத்தில் வைத்து பூஜை செய்து சுவாமிக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது
சோழவந்தான் அருகே , தென்கரை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் பக்தி சிறப்புரை ஆற்றினார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் வழிபாடு செய்து சிறப்புரையாற்றினார். பெருமாளுக்கு சிறப்பு ஸ்தோத்திர பாடல்கள் பாடி அர்ச்சனைகள் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது.
முரளிதர சுவாமிகள் சிறப்புரை ஆற்றும் போது இறைவனை அடைய அவரது நாமங்களை கேட்பது சிறந்த வழி என்றும் தொடர்ந்து கிருஷ்ணர் கதையை கேட்க நமது பிறவி பெருங்கடல் தீரும் என்று கூறினார்.
இதில் , தென்கரை சுற்று வட்டார பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி செய்திருந்தார்.
கரு’ என்பதற்கு சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பது. சிறகுகளைக் கொண்டு பறப்பதாலேயே….அவர் கருடன். அனைத்து பறவைகளும் அப்படித் தானே பறக்கின்றன. ஆம். ஆனால்…. கருடனுக்கு மட்டும் இந்த பெயர் அமையக் காரணம்….கருடன் தன் சிறகுகளைக் கொண்டு… நினைக்கவும் இயலாத அதிவேகத்தில் பறக்கும் திறனைப் பெற்றிருப்பதால்.
அதாவது….ஒருமணி நேரத்தில் 125 முதல் 200 மைல்கள் வரை வேகமாக பறக்கும் திறமை கொண்டவர் கருடன்.
மேலும் அவரின் பார்வை மிகவும் கூர்மையானது. எவ்வளவு கூர்மை என்றால் ஒரு 10 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கருடனால் நிலத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பை பார்க்க முடியும். மேலும் கருடனால்….340 டிகிரி வரை கண்களை சுழற்றி பார்க்க முடியும் . அதாவது அவரின் தலைக்கு நேர் பின்னால் இருப்பவற்றை மட்டுமே அவரால் பார்க்க முடியாது .
கருடனை வழிபடுவதால் ஏற்படும் முக்கிய பலன்களில் ஒன்றாக கண் குறைபாடுகள் நீங்குதல் கூறப்பட்டு இருக்கிறது. கருடனின் பார்வை சிறப்பை அறிகையில் அதில் வியப்பேதுமில்லை.
அதே பார்வை குறைபாட்டை நீக்க யோகாசனங்களில்….கருடாசனமும்……யோக முத்திரைகளில் கருட முத்திரையும் பெயர் பெற்றவை.
கருட முத்திரை என்றதும் குறிப்பிடப்பட வேண்டியது…..அது ரகுகுலத்தின் முத்திரை என்பது.
வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினைபோக்கி நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய் சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப –அயோத்தியா காண்டம்
இங்கு…. உவணம் என்பது கருடனைக் குறிக்கும். இதிலிருந்து… ரகுகுலத்தின் முத்திரை…. கருட முத்திரை என்பதை அறியலாம்.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனை போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.
அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமி திதியில் ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப் படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவை அஷ்ட நாகங்களே.
அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும்.
இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம்.
அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
இந்த நோன்பு கூடப்பிறந்த சகோதரர்கள் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெறலாம். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம்.
கருடாழ்வாரை வணங்குவோம்: இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகள் கண் பார்வை குறைபாடுகள் அகலும், பகையும் பிணியும் நீங்கும். செல்வம் செழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.
பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திர ஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாக பெறமுடியும் என்பதை பத்ம புராணம் கூறுகிறது.
எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிசெல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நிறைபுத்தரி பூஜை நடைபெறுவதை முன்னிட்டு அச்சன்கோவிலிருந்து புளியரைக்கு வந்த நிறைபுத்தரி நெற்கதிர் வாகனத்துக்கு கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் உற்சாக வரவேற்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக மாதத்தில நிறைபுத்தரி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
இந்தநிலையில், இந்த ஆண்டு நிறைபுத்தரி பூஜை நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, சபரிமலைக்கான நிறைபுத்தரி கோஷயாத்திரை அச்சன்கோவிலில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில், அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி கமிட்டி தமிழக பொறுப்பாளர் AGS. ஹரிஹரன் குருசாமி மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் மேற்பார்வையில் நிறைபுத்தரி நெற்கதிர் கட்டுக்களை அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப்பெட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டது.
இந்த வாகனம் சபரிமலைக்கு செல்லும் வழியில் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் உள்ள பண்பொழி திருமலைக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட நெற்களஞ்சியம் வளாகத்துக்கு இன்று காலை வந்தது. அப்போது நிறைபுத்தரி நெற்கதிர்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்துக்கு கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழக ஐயப்ப பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து காலையில் நடந்த சிற்றுண்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து அந்த வாகனம் கோட்டைவாசல் கருப்பசுவாமிகோயில், ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில், புனலூர் கிருஷ்ணர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஊர்வலமாக சென்று அந்தந்த கோவிலுக்கான நிறைபுத்தரி நெற்கதிர்களை ஒப்படைத்து விட்டு பம்பை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றடைகிறது.
முன்னதாக, சபரிமலை உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு கோயில்களில் நிறை புத்தரிசி பூஜைக்காக அச்சன்கோவிலில் இருந்து இன்று அதிகாலை நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படுவதை முன்னிட்டு, நேற்று திங்கள் கிழமை இரவு நெற்கதிர்களை கொண்டு செல்லும் திருவாபரண வாகனத்திற்கு அச்சன்கோவில் மேல்சாந்தி பூஜை செய்தார்.!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆடி நிறை புத்தரிசி பூஜை விழாவிற்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
நாளை புதன்கிழமை காலை நெற்கதிர்கள் கொண்டு பூஜை செய்து சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் நிறைபு த்தரிசி பூஜை விழா விமர்சையாக நடைபெறும்.
கேரளாவில் விமர்சையாகக் கொண்டாடப்படும் ஐதீக ஜடங்குகளில் ஒன்று நிறைபுத்தரிசி பூஜை வழிபாடாகும். ஆவணி மாதத்தில் இங்கு விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்யும் முன்பு விளைந்த கதிர்களை பகவானுக்கு படைத்து பூஜை செய்வது நிறைபுத்தரிசி பூஜை சடங்கு.
இந்த நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறும். இதற்கான நாள், திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் அரண்மனையில் நாள் குறிக்கப்பட்டு அதே நாளில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் பகவானுக்கு நெற்கதிர் படைத்து நிறைபுத்தரிசி பூஜை கொண்டாடப்படும்.
இந்த விழா சபரிமலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சபரிமலையில் நெற்பயிர் பயிரிடப்பட்டாலும் பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து நெற்கதிர்களை கொண்டு வந்து வழங்குகின்றனர்.
இந்தாண்டு நிறைபுத்தரிசி பூஜை புதன்கிழமை ஜூலை 30ஆம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி, இன்று மாலை சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தை தந்திரி கண்டரரு ராஜிவரு முன்னிலையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். ஐயனின் தவ அலங்காரம் களைந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 18 படி அருகே உள்ள தேங்காய் ஆழியில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
இன்று சபரிமலை வந்த ஏராளமான பக்தர்கள் நெற்கதிர்களை அதிக அளவில் கொண்டு வந்தனர். நாளை காலை சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் 4:00 மணிக்கு நடை திறந்ததும் கணபதி ஹோமம் மற்றும் பூஜை வழிபாடுகள் நடத்தி தொடர்ந்து காலை 5.30 முதல் 6.30குள் நெற்கதிர்களை சோபன மண்டபத்தில் வைத்து தந்திரி கண்டரரு ராஜிவரு பூஜை செய்து நிறைபுத்தரிசி பூஜை விழா நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் பிற மாநில பக்தர்களும் சபரிமலைக்கு வந்துள்ளனர். வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வழக்கமான பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடைபெறும். இரவு 10 மணிக்கு அத்தாள பூஜை முடித்து ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து செல்ல கோலாகலமாக நடைபெற்றது.
கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்து கொண்டார்.
பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் பங்குனி திருக்கல்யாண விழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 5ம் நாள் காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவை உற்சவமும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ரங்கம் அழகர்கோவில் மங்கலம் பொருட்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் கங்கு கொண்டு வரப்பட்டது.இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு தேர் கடாட்சித்தல் வைபவம் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தியும், ரெங்கமன்னார் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல ரதவீதிகளில் ஆண்டாள் ரெங்கமன்னார் வலம் வந்து தரிசனம் கொடுத்தனர்.
“வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க…” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும், “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்…” என்று ஸ்ரீ மணவாள மாமுனிகளும் “திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே!…” என்று வாழி திரு நாமத்திலும் திருவாடிப் பூரத்தை கொண்டாடுகிறார்கள்.
இன்றைய திருவாடிப்பூரத்தில் ஆண்டாள் குறித்து சில விஷயங்களை அனுபவிக்கலாம்.
நாச்சியார் திருமொழியை அனுபவிப்பதற்கு சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது குறிப்பாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக அவசியம்.
எம்பெருமான் ஒருவனே புருஷன் – ‘புருஷோத்தமன்’. மற்ற எல்லா ஜீவாத்மாக்கள் அவனுக்கு நாயகியே என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம். ஸ்ரீமத் ராமாயணத்தில் புலன்களை அடக்கிய ரிஷிகளும், முனிவர்களுமே ஸ்ரீராமர் மீதும் காதல் கொண்டார்கள். வால்மீகி ஸ்ரீராமர் அழகில் மோகித்துப் பேச முடியாமல் தவித்தார்.
ஸ்ரீராமருக்கே இப்படி என்றால் கண்ணன் பற்றிக் கேட்கவே வேண்டாம். மேகம், ஆறு,செடி, கொடி. மரங்கள் கூட கண்ணனிடம் மோகித்தது என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
பக்தியில் பல தரம்(grade) இருக்கிறது. அதில் மிக உயர்ந்தது கோபிகைகள் செய்த பக்தி. அதற்குப் பெயர் பிரேமை இல்லை பரம பிரேமை ( Intense deep love ). இதைத் தான் ஆழ்வார்கள் பின்பற்றினார்கள்.
பெரியாழ்வார் யசோதையாக மாறி கண்ணனுக்குத் தாய் போலப் பிரேமை செய்தார். பெருமாளை நாயகனாக அடைய வேண்டும் என்று நம்மாழ்வார் ‘கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்’ என்று பராங்குச நாயகியாக உருகினாள். அதே போல் பரகால நாயகியாக திருமங்கை ஆழ்வார்.
ஆனால் இவர்கள் எல்லோரும் ஆண். அதனால் தங்களிடம் உள்ள ஆண்மைத் தன்மையை முதலில் அகற்றி(unlearn செய்து), பிறகு கோபிகையாகத் தங்களை (learn) பாவித்துக்கொண்டார்கள்.
ஆனால் ஆழ்வார்களில் நம் ஆண்டாளோ பிறவியிலேயே பெண். அவளுக்கு ‘unlearn’ செய்ய எதுவும் இல்லை. அதனால் கண்ணனைச் சுலபமாக, வேகமாக அணுக முடிந்தது.
கீதையில் கண்ணன் என்னிடத்தில் பக்தி செய்யும் முதல் அதிகாரி “ஸ்திரிகள்” என்று பதில் கூறுகிறான். அப்படிக் கூற காரணம் என்ன ? இதற்கு அபலை, அஞ்ஞானம் என்ற இரண்டு வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாச்சியார் திருமொழியின் முழுச் சாரத்தையும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம்.
’அபலை’ என்ற பிரயோகம் ஒரு பெண்ணுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்களை அப்படி அழைப்பதில்லை. ஆண்கள் எப்போதும் ஆண்மை என்ற பலம் உள்ளவர்களாகவே கருதப்படுகிறார்கள். பலம் இல்லாதவர்கள் பெண்கள் அதனால் அ-பலம் – அபலை என்கிறோம். இந்த அபலை என்ற தகுதி தான் கண்ணனை அணுக முதல் தகுதி.
அபலையாகக் கண்ணனை அணுகிய பெருமை ஆண்டாளையே சாரும்.
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் மன்மதனை வழிபடுகிறாள். ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெருமாளைத் தவிர்த்து மற்ற தேவதைகளை எல்லாம் வழிபடும் வழக்கம் இல்லாத போது ஆண்டாள் அப்படிச் செய்யலாமா ? என்ற எண்ணம் நமக்குத் தோன்றாமல் இருப்பதில்லை. பெரியவாச்சான் பிள்ளை இதற்குப் பதில் கூறுகிறார்.
அயோத்தியில் ராமரைத் தவிர மற்றவை எதுவும் தெரியாத அந்த ஊர் மக்கள் இரவு பகலாக எல்லா தேவதாந்த்ர கோயிலுக்குச் செல்வார்கள்( வால்மீகி ராமாயணம்). காரணம் – ராமருடைய நலனுக்காக அங்கே வேண்டிக்கொள்கிறார்கள்.
ஞானம் இருப்பவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள். கலங்கிய ஞானமே பக்தி. அ-ஞானம் – அஞ்ஞானம். ஒரு தாய் தன் குழந்தையிடம் உள்ள பிரேமையினால் எது வேண்டும் என்றாலும் செய்வாள். ஜுரம் வந்தால் மந்திரித்த கயிற்றை கட்டுவாள். கண்மூடித்தனமாக எதையாவது தன் அஞ்ஞானத்தால் செய்வாள். அயோத்தி மக்கள் தேவதைகளை வேண்டிக்கொண்டது போல, ஆண்டாளும் மன்மதனைக் கொண்டாள் அஞ்ஞானத்தால்.
அயோத்தி மக்கள் ஸ்ரீராமரின் நலனுக்காக வேண்டிக்கொண்டார்கள், ஆனால் கண்ணன் நலம் வேண்டி ஆண்டாள் மன்மதனை வேண்டிக்கொள்ள வில்லையே ” கண்ணனுக்காக என்னை விதி’ என்று கூறுவது எப்படிக் கண்ணனின் நலம் வேண்டுதலில் வரும் என்ற சந்தேகம் எழலாம்.
இளைய பெருமாள் என்ற லக்ஷ்மணர் ஸ்ரீராமர், பிராட்டியுடன் காட்டுக்குச் சென்றார். ஸ்ரீராமருக்காகத் தன்னை விதித்துக்கொண்டு அவருக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று கூட சென்றார். ஸ்ரீராமர் நலம் வேண்டிச் சென்றார்!
அது போல இங்கே ஆண்டாள் ’ மன்மதன் காலில் விழுந்தாவது கேசவ நம்பியைக் கால் பிடிக்கும்’ கைங்கரியம் கிடைக்குமா என்று தவிக்கிறாள். அவ்வளவு intense deep love அதனால் வரும் அஞ்ஞானம்.
அனுமார் எப்பேர்ப்பட்ட ஸ்ரீராம பக்தர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் வைகுண்டம் கூட வேண்டாம் என்றவர், சுந்தரக் காண்டத்தில் அவர் கைகளைக் கூப்பிக்கொண்டு ருத்திரன், யமன், வாயு என்று இந்தத் தேவதைகளிடம் சீதையைக் காட்டிக்கொடு என்று வேண்டிக்கொள்கிறார். அது போல ஆண்டாள் நாச்சியார் கண்ணனைக் காட்டிக்கொடு என்று மன்மதனை வேண்டிக்கொள்கிறாள்.
அனுமார், அயோத்தி வாசிகளுக்கு பெரியாழ்வார் தந்தையாகக் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டாளுக்கு விஷ்ணுவைத் தன் சித்தத்தில் வைத்திருக்கும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தந்தை. பரத்துவத்தை நிர்ணயம் செய்தவர், அவர் மகள் ’விட்டுசித்தர் கோதை’ என்று தன்னை கூறிக்கொள்பவள், எப்படி மன்மதனை வேண்டலாமா ? என்றும் தோன்றும்.
பராங்குச நாயகியாக நம்மாழ்வார் கதறிவிட்டு கடைசியில் ’தெய்வங்காள் என் செய்வேன்?’ என்று மற்ற தெய்வங்களை பார்த்துக் கூறியது போல ஆண்டாளும் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மன்மதன் காலில் விழுகிறாள். ஆண்டாளுக்கு பெரியாழ்வார் அப்பா என்றால் நம்மாழ்வார் பெரியப்பா!
இந்த தவிக்கும் வெளிப்பாடு அபலையாக அஞ்ஞானம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நாச்சியார் திருமொழியை ஓர் அளவு புரிந்துகொள்ளலாம். இதைப் புரிந்துகொள்ள ஆண்டாளே அருள் புரிய வேண்டும்.
பிகு: அ- என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அ-பலை – விஷ்ணுவே பலம் என்றும், அ-ஞானம் விஷ்ணுவே ஞானம் என்றும் பொருள் கூறலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஐந்து கருட சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் மண்டபங்களுக்கு எழுந்தருள்கின்றனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் கொடிப்பட்டம் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருட கொடியேற்றம் நடைபெற்றது.
முதல் நாளன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் 16 வண்டி சப்பரத்தில் 4 ரத வீதிகளில் உலா வந்தனர். ஜூலை 24-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் 5 கருட சேவையும், நடைபெற்றது . ஜூலை 26-ம் தேதி சயன சேவையும் ,28-ம் தேதி காலை 9:05 மணிக்கு முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.
வியாழன் அன்று நிகழ்ந்த ஐந்தாம் நாளில் காலை மங்களாசாசனம் இரவுஐந்து கருடசேவை நடந்தது. காலை 10 மணிக்கு பெரியாழ்வார் ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருள அங்கு சுந்தரராஜபெருமாள், ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் நடந்தது.
மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் நவகலச திருமஞ்சனம் நடந்தது. இரவு 10 மணிக்கு ஐந்துகருட சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகம் கேரளா ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வரும் திங்கட்கிழமை நடைபெறும் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது