திருப்பாவை பாசுரம் 17 (அம்பரமே தண்ணீரே)

ஆன்மிக கட்டுரைகள்
thiruppavai pasuram 17 - Dhinasari Tamil

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரமூ டறுந் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

kovil p17 - Dhinasari Tamil

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில், நந்தகோபனின் இல்லத்தே வாசலில் நின்றபடி, மாளிகை உள்ளே புக வாசல்காப்போனின் அனுமதியைக் கோரினார்கள் ஆய்ச்சியர்கள். பின்னர் உள்ளே புகுந்த அவர்கள், நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் என அனைவரையும் துயில் எழுப்புகிறார்கள் இந்தப் பாசுரத்தில்.

உடலுக்குக் காப்பாகும் துணிமணிகள், உயிர்க்குத் தேவையாகும் தண்ணீர், உரமூட்டும் உணவு என உயிர்வாழ அவசியத் தேவையான அனைத்தையும் வேண்டியன வேண்டியபடி தானமாக வழங்கும் வள்ளல் ஸ்ரீநந்தகோபர்.

எங்கள் அனைவருக்கும் தலைவராகத் திகழ்பவர். அப்படிப்பட்ட நந்தகோபரே நீங்கள் முதலில் துயில் எழ வேண்டும். வஞ்சிக்கொம்பு போன்ற மாதர்களுக்கு எல்லாம் முதன்மையானவளாகத் திகழ்பவளே!

இந்தக் குலத்துக்கு மங்கள தீபம் போல் விளங்கும் எங்கள் தலைவி யசோதைப் பிராட்டியே… பள்ளி உணர்ந்து எழு! ஆகாயத்தை இடைவெளியாக்கிக் கொண்டு உயர வளர்ந்து, அனைத்து உலகங்களையும் அளந்து அருளிய தேவாதி தேவனே… இனியும் கண்மூடித் துயில் கொள்ளாமல் விரைந்து எழு. சிவந்த பொன்னால் செய்த வீரக் கழல் அணிந்துள்ள திருவடியைக் கொண்ட பலராமனே! நீயும் உன் தம்பியாகிய கண்ணனும் உறங்காது துயில் கலைந்து எழுந்திடுக! என்கிறார் ஸ்ரீஆண்டாள் இந்தப் பாசுரத்தில்.

இதில், வரிசைக் கிரமமாக நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் என நால்வரையும் துயில் எழுப்புகிறார்கள். கண்ணனுக்கு பாதுகாப்பாக ஒருபுறம் நந்தகோபரும், மறுபுறம் பலராமனுமாகப் படுத்துக் கொள்வார்களாம்.

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்றபடி இருக்கும் எங்களுக்கு அம்பரமும் தண்ணீரும் சோறுமாகவுள்ள கண்ணனை எமக்குத் தந்து எங்கள் குறையைப் போக்கும் ஸ்வாமி நீர் அன்றோ என்று நந்தகோபரை இந்தப் பெண்கள் எழுப்புகிறார்களாம்!

விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply