“மனம் நம் மேல் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. நாம்தான் அதன் மேல் ஆதிக்கம் செலுத்திடவேண்டும். அது சொல்வதை நாம் கேட்கக் கூடாது. நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் நமது மனது கேட்கவேண்டும்” என்றெல்லாம் நாம் பற்பல உபன்யாசங்களிலும், பயிற்சி வகுப்புக்களிலும் கேட்டு வருகின்றோம்.
ஆயினும், நம்மில் எத்தனை பேருக்கு அது சாத்தியமாகியிருக்கின்றது என்று கேட்டால், மௌனம்தான் பதிலாக இருக்கும்! ஆனால், ஆசார்யாளிடம் காணப்பட்ட, ஏனையோரை பிரமிக்கவைத்திடுவதான ஒரு குணமானது அவரது மனக்கட்டுப்பாடாகும். இதற்குச் சரியானதோர் உதாரணமாகப் பின்வரும் சம்பவத்தினைக் கூறலாம்.
பதின்மூன்றாம் வயதில் அவருக்கு உபநயனம் செய்யப்பட்டதும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. முடியும் சமயங்களிலெல்லாம் மனத்தினுள் காயத்ரியை ஜபித்திடும் வழக்கத்தை அவர் துவங்கினார். நாளடைவில், அவர் மற்ற பணிகளில் ஈடுபடும் சமயங்களிலும் மற்றும் அவரது கனவிலுமேகூட, காயத்ரி ஜபத்தினைத் தானாக செய்துக் கொண்டிருக்கின்ற அளவிற்கு அவரது மனமானது ஒரு நிலைப்பட்டிருந்தது. இச்சமயத்தில், அவருக்கு ஸன்யாஸ ஆசிரமத்தினை வழங்குவது என அவரது குருநாதர் முடிவுசெய்து அதற்கான நாளும் நிச்சயிக்கப்பட்டது.
ஸன்யாஸ தீக்ஷையினைப் பெற்றுக்கொள்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக ஆசார்யாளுக்கு ஓர் எண்ணம் வந்தது. அதாவது, ஸன்யாஸம் பெற்றுக் கொண்ட பிறகு, காவி வஸ்திரத்தினைத்தான் உடுத்திக்கொள்ள வேண்டும்; மேலும், பரமஹம்ஸ ஸன்யாஸிகளுக்கு காயத்ரி மந்திர ஜபமானது தடை செய்யப்பட்டிருக்கின்றபடியால் அதையும் ஜபித்திடக் கூடாது. இவை இரண்டினையும், விழிப்பு நிலையினில் உள்ள போது தம்மால் நிறைவேற்றிட முடியும். ஆனால், தூங்கிய பிறகு, தமக்கு தினமும் தோன்றி வந்த ‘வெள்ளை வஸ்திரத்தினை உடுத்திக்கொண்டு, காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பதான’ கனவுகளை என்ன செய்வது?
கனவு என்பது ஒருவரது கட்டுப்பாட்டில் இல்லையாதலால், அவற்றில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டாலும் அவை பாவத்தை ஏற்படுத்து-வதில்லை. இதனால், ஸன்யாஸத்திற்குப் பிறகும் ஒருவருக்கு வெள்ளை வஸ்திரத்தில் இருந்து காயத்ரியை ஜபிப்பது போல கனவு வந்தாலும் அதனால் ஒரு பாவமும் வந்துவிடப்போவதில்லைதான். ஆனாலும், ஸ்ரீ ஸ்ரீனிவாஸனுக்கோ (ஆசார்யாளின் பூர்வ ஆசிரமப் பெயர்) “எனது ஸன்யாஸமானது எப்படிப்பட்டதொரு சிரத்தையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்றால், எனது ஸன்யாஸத்திற்குப் பிறகு எந்த ஒரு கனவிலும் நான் என்னை இப்போதுள்ளது போல் வெள்ளை வஸ்திரம் அணிந்துகொண்டு பார்க்கவே கூடாது.
காயத்ரி மந்திரத்தை ஜபித்திடுவது எனக்கு மிகவும் விருப்பமானதே. ஆனாலும் பரமஹம்ஸ ஸன்யாஸிகளுக்கு காயத்ரி மந்திர ஜபம் தடை செய்யப்பட்டிருப்பதால், நான் நாளை மறுநாளிலிருந்து, எனது கனவுகளில்கூட, காயத்ரி மந்திர ஜபம் செய்வதில் ஈடுபட்டிடக் கூடாது” எனும் தீர்மானமான எண்ணம் தோன்றியது. அந்தத் தீர்மானத்தின் சக்தி அவர் ஸன்யாஸம் பெற்றுக்கொண்ட அன்றைய இரவே வெளிப்பட்டது.
அன்றைய இரவிலேயே அவருக்கு வந்த கனவில் தம்மை அவர் காவியுடை தரித்தவராகவே கண்டாரே தவிர, முன்பு இருந்ததைப் போல் வெள்ளை ஆடையில் அல்ல! அன்றைய தினத்திலிருந்தே கனவிலும்கூட காயத்ரி ஜபம் நடைபெறவேயில்லை! அந்த அளவிற்கு அவரது மனம் அவருக்கு அடங்கி நடந்தது..
–சிருங்கேரி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்..
எத்தனையோ இலக்ஷம் ஜீவராசிகள் இருந்தாலும் மனுஷ்யனுக்கு மட்டும் பிராதான்யத்தை (முக்கியத்துவம்) சாஸ்திரத்தில் ஏன் கொடுத்தார்கள்? தன்னுடைய ஆகாரத்தைச் சம்பாதித்துக்கொள்ளும் விஷயத்தில் மனுஷ்யனும் மீதி பிராணிகளும் சமம்தான். இந்த விஷயத்தில் பச்வாதிபி: ச அவிசேஷாத் என்று பகவத்பாதாள் சொன்ன மாதிரி, மீதி பிராணிகளுக்கும் நமக்கும் எந்த வித்யாஸமும் இல்லை என்று சொல்ல முடியுமா என்றால், அதுவும் சொல்ல முடியாது. நிச்சயமாக வித்யாஸம் இருக்கின்றது. எந்த விஷயத்தில் வித்யாஸம் இருக்கின்றது என்று கேட்டால், நமக்குப் பெரிய விவேகத்தை பகவான் கொடுத்தான். நம்முடைய விவேகத்தினால் எது ஹிதம் (நன்மை), எது அஹிதம் (தீமை), எது உபாதேயம்(ஏற்றுக் கொள்ள வேண்டியது), எது பரித்யாஜ்யம்(விட்டுவிட வேண்டியது) இத்தனையையும் நாம் தெரிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட விவேகிகள் கோஷ்டியைச் சேர்ந்த நமக்கு ஈச்வர விஷயத்தில், அதிருஷ்ட விஷயத்தில் விசுவாசம் இல்லாமல் இருப்பது ரொம்ப அனுசிதம் ( பொருத்தமில்லை).
– சிருங்கேரி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்..