வேட்டை வேங்கடேச பெருமாள் கோவில்
தர்ம பூமியான இராஜபாளையத்தில், சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் கிழக்கே உள்ளது இப்புனிதக் கோவில்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவ சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த காலகட்டம்.
மக்களைப் பாதுகாக்க போதுமான அரசாங்க வீரர்கள் இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு கெட்டு மக்கள் பெரிதும் இன்னலுற்றனர். எங்கும் வழிப்பறி, கொலை, கொள்ளைகள் நடந்தபடி இருந்தன.
அப்பொழுது இராஜபாளையத்தின் பெயர் பெத்தவ நல்லூர். சுமார் 700 ஆண்டுகளாக இப்பெயரிலேயே கிராமமாகத் திகழ்ந்தது.
வேட்டை வேங்கடேசப் பெருமாள் பற்றி பல செவி வழிக்கதைகள் உள்ளது. அதில் ஒன்றைப் பார்க்கலாம்.
இப்போது இக்கோயில் உள்ள இடத்தில், அப்போது பெரும் புளியங்காடாக இருந்தது. ஒரு புளிய மரத்து அடியில் குடிசை போட்டு ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். தீவிர பெருமாள் பக்தர் அவர். தனது நெற்றியில் பெரிய நாமத்தை போட்டபடிதான் இருப்பார். இதனால் அவரை அந்த கிராமத்தார் “நாமதாரி ” என்றே அழைத்தனர். அப்படி யாரேனும் அழைத்தால் மனதால் மகிழ்ந்து கொள்வார். தனது வாரிசுகளை வெவ்வேறு கிராமத்தில் கட்டி கொடுத்து விட்டு தான் மட்டும் அங்கே தனித்து வாழ்ந்து வந்தார்.
புளிய மரத்திலிருந்து கீழே விழும் புளியம் பழத்தை சேகரித்து, தோல் நீக்கி, அதை ஒரு கோணிப்பையில் கட்டிக் கொண்டு, வாரம் ஒருமுறை நடந்தே கோவிந்த நாமம் சொல்லியபடி ஸ்ரீ வில்லிபுத்தூர் சந்தைக்குச் செல்வார். அங்குள்ள பலசரக்குக் கடையில் புளியம் பழத்தை விற்பார். கிடைக்கும் காசில் கால் பங்கை திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாளுக்கு காணிக்கை செலுத்தி விட்டு, மிச்ச காசை வைத்து தன் வயிற்றுக்குத் தேவையான கம்பு, கேழ்வரகை வாங்கிக் கொண்டு நடந்தே சஞ்சீவி மலை அடிவாரத்தில் இருக்கும் தன் குடிசைக்கு வந்து சேருவார்.
பல வருடங்களாக இப்பழக்கத்தை தொடர்ந்து வந்தாலும், முதுமை காரணமாக முன்பு போல் நடக்க முடியவில்லை.
ஒரு நாள், ஒரு குட்டி சாக்கில் புளியம்பழத்தை சுமந்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு 11கிலோ மீட்டர் தூரமல்லவா? இலேசாகத் தள்ளாட ஆரம்பித்து விட்டார். தலையில் சுமை வேறு.
“பெருமாளே! முன்பு போல என்னால் நடக்க முடியவில்லை.
எனது இடத்திற்கே வந்து கோவில் அமைத்து எனக்கு அருள் தரக்கூடாதா? ” என வேண்டிக் கொண்டார். அசதியில் சுமையை ஒரு மரத்தடியில் வைத்து விட்டு அதன் அருகே அமர்ந்து கொண்டார்.
அப்பொழுது அங்கு வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் ஈவு இரக்கமின்றி முதியவர் என்று பாராமல் அவரின் புளி மூட்டையை அபகரித்துச் சென்றுவிட்டனர்.
முதியவர் கெஞ்சியும், அழுதும் பலன் இல்லை. அவர் வருத்தமெல்லாம் புளி மூட்டையை இழந்து விட்டதனால் அல்ல! அதை விற்று, அந்தப் பணத்தில் பெருமாளுக்கு காணிக்கை செய்ய முடியவில்லையே என்ற வருத்தம்தான். தனக்குத்தானே புலம்பியபடி பசி மயக்கத்தில் தரையில் படுத்து விட்டார். நடுநிசி.
நல்ல தூக்கத்தில் ஓர் அசரீரி ஒலி மட்டும் கேட்டது.
” முதியவரே! கவலைப்பட வேண்டாம். இப்பொழுதே திருவண்ணாமலையிலிருந்து குதிரை மீதேறி மானிட ரூபத்தில் வந்து துஷ்டர்களை அழிப்பேன். சூரியோதயம் முன்பு வரை பொது மக்களுக்கு இடையூறு செய்யும் கயவர்களை வேட்டையாடி அழிப்பேன். சூரியன் உதிக்கும்போது வேட்டையை நிறுத்தி விட்டு அப்படியே, அங்கேயே நின்று விடுவேன். எந்த இடத்தில் மண்ணில் நீரூற்றுப் பொங்குகிறதோ அதுதான் நான் நின்ற இடம். அந்த இடத்தில் எனக்கொரு கோவில் எழுப்புக ” என்ற அசரீரி குரல் கேட்டப் பெரியவர், உள்ளம் உருகி, கண்ணீர் விட்டு, உற்சாகமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
இரவு முழுக்க நடந்து அதிகாலையில் தன் குடிசை அருகே வந்து சேர்ந்தார். பெருமாள் சொன்னது போலவே தன் குடிசை அருகே தரையிலிருந்து நீரூற்று பொங்கி வழிந்தோடியது. சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, அந்தத் தீர்த்தத்தைப் பருகினார்.
பெருமாள் நின்ற இடம் இதுதான் என முடிவு செய்து, உடனே கோயில் கட்ட பல்லவ வீரர்களைச் சந்தித்து நடந்த விசயத்தைக் கூறினார்.
படைவீரர்கள் விசயத்தை பல்லவ சிற்றரரசனிடம் கொண்டு சென்றனர்.
அரசன் அருகில் உள்ள சஞ்சீவிமலைக் கல்லை கொண்டு சிறிய கோயிலைக் கட்டித்தந்தான். அதுதான் இன்றைய வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோவில்.
கோவில் மூலஸ்தான வெளிப்பிரகார சுவரில், வடக்குப் பகுதியில் பல்லவ மன்னன் பற்றிய கல்வெட்டு இன்றும் உள்ளது.
கோவிலுக்கு முன்புள்ள தெப்பக்குள கல் சுவரிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்ந்தால் பல சரித்திரச் சான்றுகள் கிடைக்கும்.
திருப்பதி, திருவண்ணாமலை போல் இக்கோவிலில் வேங்கடேசப் பெருமாள் தனித்தே நின்று அருள் புரிகிறார். பிற்காலத்தில்தான் தாயாருக்கு தனி சன்னதி அமைத்தார்கள்.
மூலஸ்தானத்தில் பெருமாள் பாதத்துக்குக் கீழே நூபுர கங்கை ஓடுவதாகவும், ஆகையால் பெருமாள் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருப்பதாகவும் கோவில் பட்டாச்சாரியார்கள் கூறுகிறார்கள்.
இராஜபாளையம் ராஜுக்களுக்கு இக்கோவிலே குலதெய்வம். வேண்டுதலை உடனே நிறைவேற்றித்தரும் கருணை தெய்வமாக வேட்டை வேங்கடேசப் பெருமாள் திகழ்கிறார்.
சிறிய கோயிலாக இருந்ததை, நாளடைவில் ராஜுக்கள் சமூகத்தினர் பெருமாள் அருளோடு கோபுரம் கட்டி, சகல வசதியான பெரிய கோயிலாக மாற்றிவிட்டார்கள்.
ஆனாலும் இக்கோவிலை இராஜபாளைய வாசிகள் சின்ன கோவில் என்றே அழைக்கிறார்கள்.
காரணம், பெருமாள் மானிட ரூபத்தில் திருவண்ணாமலையிலிருந்து குதிரையில் கிளம்பினார் அல்லவா! அது பெரிய கோவில்.
வந்து நின்ற இடம் இதுவாகையால் சின்ன கோவில்.
பொது மக்களுக்கு இடையூறு செய்த கயவர்களை பெருமாள் வேட்டையாடியதால்
இவருக்கு “வேட்டை வேங்கடேசப் பெருமாள் ” என்று பெயர் வழங்கலாயிற்று.