திருப்புகழ் கதைகள்: விசாக மூர்த்தியின் பெருமை!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 254
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

போதகம் தரு – பழநி

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெழுபத்தி ஒன்பதாவது திருப்புகழ், ‘போதகம் தரு’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். இத்திருப்புகழும் பழனி மலையில் திருக்கோவில் கொண்டுள்ள முருகப்பெருமானை துதி செய்து பாடும் பாடலாகும்.

‘நாதவிந்து கலாதி நமோ நம’ எனத் தொடங்கும் திருப்புகழைப் போல மிகவும் எளிமையான மெட்டில் அமைந்தது. சிறு குழந்தைகள் கூட எளிமையாகப் பாடலாம். இனி திருப்புகழைக் காணலாம்.

போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம …… பணியாவும்

பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ஸாமீ நமோநம …… அரிதான

வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம …… அழகான

மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம …… அருள்தாராய்

பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர …… அருள்வோனே

பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் …… கயிலாயர்

ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி …… அபிராமி

ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – ஞான உபதேசம் புரிகின்ற தலைவரே, வணக்கம்; வணக்கம்; நீதிக்கு இருப்பிடம் ஆகிய ஒளிப் பொருளே! வணக்கம்; வணக்கம். இப் பூமண்டலத்தை ஆளுகின்றவரே! வணக்கம்; வணக்கம். ஆபரணங்கள் அனைத்தையும் அணிகின்றவரே! வணக்கம்; வணக்கம். வேடர் குடியில் வளர்ந்த கொடி போன்ற வள்ளியம்மையிடம் அன்பு பூண்டவரே! வணக்கம்; வணக்கம்.

தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவர் துதி செய்கின்ற சுவாமியே! வணக்கம்; வணக்கம். அருமையான வேத மந்திரங்களின் வடிவாய் விளங்குபவரே! வணக்கம்; வணக்கம். மெய்ஞ்ஞானப் புலவர் தலைவரே! வணக்கம்; வணக்கம். வீரக் கழலையணிந்த திருவடியையுடையவரே! வணக்கம்; வணக்கம். அழகிய திருமேனியுடைய உபகாரியே! வணக்கம்; வணக்கம்.

murugar - Dhinasari Tamil

தேவவுலகில் வளர்ந்த பசிய வளையல்களை யணிந்த தேவசேனைக்கு நாயகரே! வணக்கம்; வணக்கம். பெருமை நிறைந்த விசாக மூர்த்தியே! வணக்கம்; வணக்கம். தீவினை நிறைந்த சூரபன்மன் முதலிய அசுரர்கள் அழியுமாறு, கூரிய வேலாயுதத்தால் போர் புரிந்து பெருமையுடைய தேவர்கள் வானுலகத்தில் குடியேறுமாறு அருள் புரிந்தவரே;

பாதி சந்திரனைத் தரித்த சடைமுடியினரும், திரிசூலத்தை ஏந்தியவரும், சுகத்தைச் செய்பவரும், இசைக் கலைக்குத் தலைவரும், வலிமையும் திண்மையும் பொருந்திய தோள்களையுடைய சோதியரும், திருக்கயிலாய மலையில் எழுந்தருளி இருப்பவரும், ஆதி முதல்வரும் ஆகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் எழுந்தருளிய அழகிய உமாதேவியும், அருட்கோல அம்பிகையும், எவ்வுலகங்கட்கும் தாயாகிய மனோன்மணியும், அன்னையும், அழகியும், எல்லா உயிர்கட்கும் அன்னையான அன்புக்கு உறைவிடமானவரும், மிக்க அழகியும் பார்வதியம்மை அன்பு கொண்டு சிறப்புடன் சீராட்ட பல அழகுகள் சூழ்ந்துள்ள திருக்கோயில் சிறந்த விளங்கும், திரு ஆவினன்குடியில் வீற்றிருக்கும் தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே; அடியேனுக்கு உமது திருவருளைத் தந்து உதவுவீர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply