திருப்புகழ்க் கதைகள் 240 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நாதவிந்து கலாதீ – பழநி சேரமான் பெருமாள் நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார் விண்ணில், வெள்ளை யானையில் செல்வதைப் பார்த்த சேரமான் பெருமாள் நாயனார் தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஐந்தெழுத்தை ஓதியருளினார். உடனே அக்குதிரை ஆகாயத்தில் பாய்ந்து, நம்பியாரூரருடைய வெள்ளை யானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது.
சேரமான் பெருமாள் நாயனாருடைய படை வீரர்கள். குதிரை மேற்செல்லும், அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால் மிகுந்த திடபக்தியால் உடைவாள் கொண்டு தங்கள் உடம்பை வீழ்த்தி வீரயாக்கையைப் பெற்றுப் போய், சேரமான் பெருமாள் நாயனாருக்கு முற்பட்டு, அவரை வணங்கிக் கொண்டு சென்றார்கள்.
சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், கைலாயம் அடைந்து குதிரையினின்றும், யானையினின்றும் இறங்கி, பல வாயில்களையும் கடந்து சிவபெருமானை அடைந்தார்கள்.
அங்கே சேரமான் பெருமாள் நாயனார் வாயிலிலே தடைசெய்யப்பட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே போய் சிவசந்நிதியில் விழுந்து வணங்கி, சேரமான் பெருமாள் நாயனார் திருவாயிலில் நிற்பதைப் பற்றி சொன்னார். புரிசடைக் கடவுள் புன்முறுவல் செய்து சேரமான் பெருமாளை அழைப்பிக்க, அவர் ஆராத அன்புடன் விரைந்து சென்று பன்முறை விழுந்து வணங்கித் துதித்து நின்றார். அப்போது சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாரே நீவிர் நான் அழைக்காமல் இங்கு ஏன் வந்தீர் என வினவினார்.
அதற்கு சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தொடர்ந்து வந்ததாகக் கூறி, தன்னுடைய உலாவை கேட்டருளுமாறு விண்ணப்பம் செய்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்து சிவபெருமான், சேரமானை தன்னுடைய கணங்களுக்கு நாதனாய் இருக்கப் பணித்தார்.
சேரமான் பெருமாள் நாயனார் கழறிற்றறிவார் நாயனார் என்றும் அறியப்படுகிறார். இறைவனது திருவருளால் தமக்குரிய அரசுரிமையில் வழுவாது ஆட்சிபுரிந்த இவர் இறைவனைப் பேரன்பினால் விரும்பி வழிபடுமியல்பும், புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்துணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வு சிவபெருமானின் அருட்கொடையாக வந்து சேர்ந்தது. உயர் திணை மக்களும், மிருகங்கள், மரம் செடி கொடி போன்றவை கழறிய சொற்பொருளை உய்த்துணரும் நுண்ணறிவினைப் பெற்றவர் பெருமாக்கோதையாராதலின் அவர்க்கு கழறிற்றறிவார் என்பது காரணப்பெயராயிற்று.
சேரமான் பெருமாள் நாயனார் திருக்கைலாய ஞானவுலா என்ற நூலை எழுதியுள்ளார். உலா வகை இலக்கியங்களில் முதல் நூலாகக் கருத்டப்படுவதால் இது ஆதியுலா என வழங்கப்படுகிறது. இவர் திருவாரூர் மும்மணிக் கோவை என்ற நூலை இஅயற்றியுள்ளார். இது பிற்காலத்தில் ஒரு புதிய சிற்றிலக்கிய வகையத் தோற்றுவித்தது. இவர் பொன் வண்ணத்து அந்தாதி என்ற நூலையும் பாடியுள்ளார்.
பொதுவாக இந்தத் திருப்புகழை ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் பாடுவதைக் கேட்கலாம். இதே ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக – தியாகராஜ பாகவதர் பாடிய ராதே உனக்குக் கோபம் ஆகாதடி, பாபநாசம் சிவன் இயற்றிய வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ, கம்பதாசன் இயற்றி P.U.சின்னப்பா பாடிய பார்த்தால் பசி தீரும் பங்கஜவதன செங்கனி, கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி K.B.சுந்தராம்பாள் பாடிய சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?, கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி M.M.தண்டபாணி தேசிகர் பாடிய சித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது ஆகிய முக்கிய பாடல்களைக் குறிப்பிடலாம்.