திருப்புகழ்க் கதைகள் 241
நெற்றி வெயர்த்துளி – பழநி
-> முனைவர் கு.வை பாலசுப்பிரமணியன்
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெழுபத்தியிரண்டாவது திருப்புகழ், ‘நெற்றி வெயர்த்துளி’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “சிவகுமாரா, திருமால் மருகா, பழநிவேலா பக்தியையும் புத்தியையும் தந்தருள்வாய்” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
குத்துமு லைக்குட மசைத்து வீதியி
னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் …..மொழியாலே
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ……முறவாடி
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ……ளுறவாமோ
உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர …… வருவாயே
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
கற்பனை நெற்பல அளித்த காரண …… னருள்பாலா
கற்பந கர்க்களி றளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர …… எனநாளும்
நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு …… மருகோனே
நட்டுவர் மத்தள முழக்க மாமென
மைக்குல மெத்தவு முழக்க மேதரு
நற்பழ நிப்பதி செழிக்க மேவிய …… பெருமாளே.
இத்திருப்புகழின் பொருளாவது – ஞான நூல்களைக் கற்ற தமிழ்ப் புலவராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற பொன் கொடி போன்ற பரவையார் களிக்குமாறு, அளவற்ற நெல் மலையைத் தந்த காரணராம் கண்ணுதலார் தந்த குமாரரே; கற்பக மரத்துடன் கூடிய அமராவதி நகரில் உள்ள வெள்ளை யானை வளர்த்த தெய்வயானை தழுவுகின்ற அழகிய புயத்தினரே; கரிய மேகம் போன்ற இந்திரன் அஞ்சித் தஞ்சம் புக, அருள்புரிந்த கருணைக்கு உறைவிடம் என்று நாள்தோறும் நல்ல தவ முனிவர்களால் அர்ச்சிக்கப் பெற்றவரும், தயாமூர்த்தி எனப் பூதலத்தில் வளர்கின்றவரும், சங்கமேந்திய செங்கரத்தினருமாகிய திருமால் மகிழும் மருகரே; நட்டுவர்கள் மத்தள முழக்கம்போல் கரிய மேகங்கள் மிக்க ஒலிக்கின்ற நல்ல பழநிப்பதி செழிப்புற வீற்றிருக்கின்ற பெருமிதம் உடையவரே; விலைமகளிருடைய உறவு ஆகுமோ? மேலான உண்மையை அடைய தாயன்புடன், மெய்யான பக்தியின் சேர்க்கையை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் – என்பதாகும்.
இத்திருப்புகழில் அறிவு நூல்களைக் கற்ற தமிழ்ப் புலவராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் நெல் மலையைத் தந்த வரலாறும், தெய்வயானை அன்னையை ஐராவதம் வளர்த்த கதையும் இந்திரன் துன்புறும் போதெல்லாம் அவனைக் காப்பாற்றுகின்ற திருமால் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளாக வெளிவந்து, ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தவழ்ந்து, உமாதேவியார் எடுத்து அணைக்க, ஆறுமுகன் வடிவம் பெற்றான்.
அக்னி சொரூபனான முருகப்பெருமானிடம் மூன்று சக்திகள் உள்ளன. இச்சா சக்தி- வள்ளி (விழைவாற்றல்)- இகம் அளிப்பவள்; கிரியா சக்தி- தெய்வானை (செயலாற்றல்) பரம் கொடுப்பவள்; ஞான சக்தி- வேல் (அறிவாற்றல்) வீடுபேற்றை அருள்வது. இதில் வேலவனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் திகழும் வள்ளி- தெய்வானை குறித்த திருக்கதைகளும், தகவல்களும் தத்துவ ரசம் மிகுந்தவை.
முருகன் இரண்டு வகையான, நேர்மையான பக்தர்களின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக இருவரையும் திருமணம் செய்துக் கொண்டு தன் மீதான பக்தியின் சக்திகளை இந்த உலகத்திற்குத் தெரியப் படுத்தினார். வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பக்தியாய் இருந்த ஒருவரையும், வழக்கமான பக்தியோடு நேர்மையாகவும் உணர்ச்சிகரமான அன்போடு இருந்த ஒருவரையும் திருமணம் செய்து பக்தியின் பெருமையை உணர்த்தினார். தெய்வானையும் வள்ளியும் இந்த இரண்டு வகையான பாதைகளைப் பின்பற்றி இறைவனை அடைந்தனர்.