திருப்புகழ்க் கதைகள் 222 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சுருளளக பார – பழநி சொல்லின் செல்வன்
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் மாருதி அறிமுகமாகிறார். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது. இதனைச் சுவையாக வருணிக்கிறார் கம்பர். இராம, இலக்குவர்களைப் பார்த்து சுக்ரீவன் பயந்து ஓடி ஒளிந்து கொள்கிறான். ஆனால் அனுமன் அவர்கள் இருவரையும் பார்க்கச் செல்கின்றார். அதனை
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் அஞ்சனக் கிரி அனைய மஞ்சனைக் குறுகி ஒரு மாணவப் படிவமொடு
அஞ்சனையின் மகனான அனுமன் ஒரு பிரம்மச்சாரி வடிவம் கொண்டு இராம, இலக்குவர் இருக்கும் இடம் செல்கிறான்.
இராம இலக்குவரை மறைவில் நின்று பார்த்து கருணையின் கடல் அனையர் என்று மதிப்பிடுகிறான். பின்னர் அவன் மனதில் தோன்றியதை கம்பன் வருணிக்கும் அழகே தனி:-
சதமன் என்றால் இந்திரன். அஞ்சும் தோற்றத்தை உடையவர், தருமதேவனும் கண்டு அஞ்சும் ஒழுக்கம் உடையவர், மன்மதனும் (மதனன்) இவர்கள் முன் நிற்க அஞ்சும் அழகர்கள், யமனும் (மறலி) அஞ்சும் வீரர்கள் – இவர்கள் யாராக இருக்கும்? என அனுமன் சிந்திக்கிறார்.
அடுத்த ஒரு பாடலில் வள்ளுவன், கடவுளுக்குத் தரும் ‘தனக்குவமை இலாதான்’ என்ற அடைமொழியை கம்பன், அனுமனுக்குச் சூட்டி மகிழ்கிறான். அனுமனை தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் – என்கிறான் கம்பன். இராமனையும் லட்சுமணனையும் நேரில் பார்த்த அனுமன் அவர்களிடம் கவ்வை இன்றாக நுங்கள் வரவு. அதாவது – உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக – என்கிறான். நல்ல தமிழில் “I welcome you sir” என்பதற்கு ஈடான எவ்வளவு அருமையான தமிழ்ச் சொற்கள்! இப்படி அனுமன் வரவேற்றவுடன் இராமலெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று இராமன் வினவுகிறான். உடனே அனுமன், யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன், நாமமும் அனுமன் என்பேன் என்று பதில் தருகிறான்.
உடனே இராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது இராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு, பட்டம் ஆகும்.
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன் வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ
இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி, இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா? வில்லையுடைய தோளுடைய வீரனே, இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?
இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் இராமன் வாயினால் கிடைத்த பட்டம். இப்படி பட்டம் பெற்ற அனுமனுக்கு நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமன் மீதான பக்தியாலும், அவரை வழிபடுவதற்காகவும் சிலை வடித்து மக்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் இவை. ஆனால் அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ளது. அது ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும். இராமாயண வரலாற்றுடன் நேரடி தொடர்பு கொண்ட ஆலயம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெற்றுள்ளது.