திருப்புகழ் கதைகள்: எமதர்ம ராஜன்

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 171
கரிய பெரிய எருமை – பழநி
யமதர்மராஜன்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியிருபத்தியொன்பதாவது திருப்புகழ் ‘கரிய பெரிய எருமை’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “காலன் வருமுன் திருவடி தரிசனத்தைப் பெறவேணும்”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் கூறுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய …… திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி …… யெழுகாலந்
திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி …… யணுகாதே
செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் …… தரவேணும்
பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு …… முருகோனே
பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி …… யமர்வோனே
அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை …… யெறிவோனே
அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – பருத்த மலையாகிய இமவானுடைய புதல்வி பார்வதியை மணந்த பரம்பொருளாகிய சிவபெருமான் பெற்ற முருகக் கடவுளே; வயலில் உழுகின்றவர்கள் ஏர்க் காலில் ஆழமாகப் பதித்து உழுகின்ற பழமையான பழநியம்பதியில் வீற்றிருப்பவரே; மாலும் பிரமாவும் அஞ்சும்படி மாயை வல்ல கிரவுஞ்ச மலை பிளக்குமாறு வேலாயுதத்தை விடுத்தவரே; வேலும் மயிலும் அறமும் ஒளியும் அழகும் படைத்த பெருமிதமுடையவரே.

கருமை நிறத்துடன் பெரிய வடிவுடைய எருமை மீது ஏறி அதனைச் செலுத்துகின்ற, கடுமையும் கொடுமையும் உடைய முத்தலைச் சூலத்தை யேந்திய இயமன் கோபித்து இறுக்கிப் பிடிக்கின்ற பாசக் கயிற்றினை எடுத்துக் கொண்டு, உயிர்கள் நீங்கும்படி வேகமாக வரும்போது, திரிகின்ற நரியும் நெருப்பும் தமது உரிமையைக் காட்டி என்பால் நெருங்கி வரா முன், நிறைவும் அறிவும் உறவும் உடைய உமது அடிமலரைத் தந்தருளுவீர். இத்திருப்புகழின் முதல் இரு பத்திகளான

கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய …… திரிசூலன்
கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி …… யெழுகாலந்

என்ற பத்திகளில் அருணகிரியார் இயமனைப் பற்றிச் சொல்கிறார். யார் இந்த இயமன்? யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி. யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன். யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள். யமன் வரும்போது நாய்கள் குரைக்கும் என்பது இந்த நாய்கள் அவங்கூட வருவதால்தானோ? தெரியவில்லை.

யமனுடைய மனைவியர் பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன. யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர். யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர்.

அம்மா பெயர் சரண்யு. இவன் கருப்பன் என்பதால் ‘நீலாய’ என்றும் அழைப்பர். யமனுடைய வாகனமும் கருப்பு நிறமுடைய எருமை. யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும். யமனுடைய உதவியாளரான சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்குப் புத்தகத்திற்கு ‘அக்ர சந்தனி’என்று பெயர்.

மரண தேவதையான யமனை த்ரிகால சந்தியாவந்தனம் செய்யும் பிராமணர்கள் வணங்குகிறார்கள். அவன் தென் திசைக்கு அதிபன் என்பதால் சந்தியாவந்தனம் செய்யும்போது தெந்திசையை நோக்கி

ஸ்ரீ யமாய நம:

யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே ச அந்த காய ச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாய ச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
என்பதே அந்த ஸ்லோகம்.

திருப்புகழ் கதைகள்: எமதர்ம ராஜன் முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply