திருப்புகழ் கதைகள்: அதல விதல முதல்

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0ae85e0aea4e0aeb2-e0aeb5.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 137
அதல விதல முதல் – பழநி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றி ஆறாவது திருப்புகழ் ‘அதல விதல முதல்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா! உன்னையன்றி உலகை விரும்பிடேன்” என அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் கூறுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு

அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம்

உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை …… வந்துநீமுன்

உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ……நம்புவேனோ

ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு …… திந்திதோதி

சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக …… என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ……துங்ககாளி

பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ….. தம்பிரானே.

இத்திருப்புகழின் பொருளாவது – தத்தகாரங்களுடன் தாளங்கள் ஒலிக்கவும், பதலை, திமிலை, உடுக்கை, தம்பட்டம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கவும், அசுரர்கள் அனைவரும் நடுங்கவும், கொடிய கழுகுகள் பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்கவும், போர்க்களத்தில் சிறந்த காளியானவள் நடனம் புரியவும், நரிகள் ஊளையிடவும், பருந்துகள் இறகுகளினால் சாமரம் போடவும், பகையை வென்று மயிலின் மீது ஆரோகணித்து பழநிமலை மீது வந்து அமர்ந்த, இந்திரர் போற்றும் தனிப்பெருந் தலைவரே.

அதலம் விதலம் முதலிய கீழ் உலகங்கள் எனவும், இம்மண்ணுலகம் எனவும், தேவர்களுடைய அண்டங்களான மேல் உலகங்கள் எனவும், சகல கடல்கள் எனவும், எண் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அக்கினி சூரியன், சந்திரன் என்ற முச்சுடர்கள் எனவும், முடிவில் ஒன்றுபடுகின்ற மந்திரங்கள் எனவும், ஓதுகின்ற வேதங்கள் எனவும், அருமையான உண்மைப் பொருள்கள் எனவும், அணுவுக்கு அணு எனவும்.

எங்கும் நிறைந்த பொருளாய் நின்ற ஒரு பேருண்மை அடியேனுடைய உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அறியாமை இருள் ஒழியவும், அக்கணமே இதய தாமரை மொட்டு அவிழ்ந்து மலரவும், உணர்விலே உணர்கின்ற அநுபவ ஞானத்தை என் மனம் பெறுமாறு, என்முன் தோன்றி, தேவரீர் உபதேசித்து உதவி அருள்புரிய, இடையறாத அன்பினால் இனிய சொற்களுடன் கூடிய மதுரகவியாகிய திருப்புகழ் என்ற நூலைப் பாடிப் புகழ்கின்ற உரிமையுடைய அடியேன் தேவரீரையன்றி உலகில் உள்ள வேறு ஒன்றை விரும்புவேனோ? (விரும்பமாட்டேன்).

தாள இசை என்றாலே நினைவுக்கு வருவது அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்கள்தான். பாடலோடு தாளக்கட்டும் அமைத்து பாடல் இயற்றியவர் அவரே. இந்தத் திருப்புகழில் வருகின்ற பின்வரும் வரிகளான

ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு …… திந்திதோதி

சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக …… என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக

என்ற வரிகளில் ததத…தந்தகக என்கின்ற ஒலியுடன் தாளங்களும், பதலை என்றா ஒருகண் பெரிய வாய்ப்பறையும், திமிலை என்ற பறையும், துடி என்ற உடுக்கையும், தம்பட்டம் என்ற வாத்தியமும், நன்கு ஒலிக்க எனப் பாடுகிறார். சிதம்பரத்தில் உள்ள முருகணைப் பாடும் திருப்புகழில் அவர்

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் …… டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் …… சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் …… தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப் …… பெருமாளே.

தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு இயல்தாளம் என ஒலிக்கும் தாளமும், தபலை என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, பூரிகை என்ற ஊது குழல், பம்பை, கரடி கத்துவது போன்ற பறைவகை, உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப, கொல்லப்பட்ட பிணங்கள் சிதறி விழ, வாயு வேகத்துடன் கொடிய போர் செய்யப் புகுந்து, ஆகாயம் வந்து பந்தலிட்டது போலக் கூத்தாடும் செவ்விய பறவைகளின் (செங்கழுகுகளின்) பசி அடங்கவும், சூரர்கள் அழியவும், கடல்கள் அலைபாயவும், அட்ட நாகங்களும் பயப்படவும் வேலைச் செலுத்தியவனே, கயிலாய மலையில் திரு நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு மனம் உருகுமாறு அவர் முன்பு விருப்பத்துடன் கொஞ்சி விளையாடி, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே என்று அருணகிரியார் பாடுவார்.

இந்தத் தாள வாத்தியங்களில் முதன்மையானது முரசு. இந்திய வானிலை ஆய்வுத்துறை 28.04.2020 அன்று வெளியிட்டுள்ள புதிய புயல்களின் பெயர்ப்பட்டியலில் முரசு என்ற பெயரும் உள்ளது. இந்தியா தந்துள்ள மற்ற பெயர்கள் வருமாறு: கதி, தேஜ் (இரண்டிற்குமே வேகம் என்று பொருள்), முரசு, ஆக் (நெருப்பு என்று பொருள்), வியோம் (வளிமண்டலம் என்று பொருள்) ஜோர் (இதுவும் வேகம் என்ற பொருளைத் தரும்), பிரபொ (தலைவன் என்ற பொருள்), நீர் (தமிழ்ச்சொல்). இதிலே முரசு என்ற சொல்லைப் பற்றி தமிழலக்கியம் என்ன சொல்கிறது என்பதை நாளை பார்ப்போமா?

திருப்புகழ் கதைகள்: அதல விதல முதல் முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply