e0af8d-e0aeb0e0aebee0aeaee0aea9.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 105
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
தெருப்புறத்து – திருச்செந்தூர்
இராமன் புரிந்த வெம்போர்
திருச்செந்தூர் – 0067. தெருப் புறத்து
அருணகிரிநாதர் அருளியுள்ள அருபத்தியேழாவது திருப்புகழ் ‘தெருப்புறத்து’ எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். இப்பாடலில் அருணகிரியார் – திருமால் மருகரே! தணிகாசலபதியே! செந்திலாண்டவரே! மாதர் நட்பை நீக்கி யருள்புரிவீர் என வேண்டுகிறார்.
தெருப்பு றத்துத் துவக்கியாய்
முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
சிரித்து ருக்கித் தருக்கியே …… பண்டைகூள மெனவாழ்
சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்
மனத்தை வைத்துக் கனத்தபேர்
தியக்க முற்றுத் தவிக்கவே …… கண்டுபேசி யுடனே
இருப்ப கத்துத் தளத்துமேல்
விளக்கெ டுத்துப் படுத்துமே
லிருத்தி வைத்துப் பசப்பியே …… கொண்டுகாசு தணியா
திதுக்க துக்குக் கடப்படா
மெனக்கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் …… தங்கள்சேர்வை தவிராய்
பொருப்பை யொக்கப் பணைத்ததோ
ரிரட்டி பத்துப் புயத்தினால்
பொறுத்த பத்துச் சிரத்தினால் …… மண்டுகோப முடனே
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
ரரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்தமா …… லன்புகூரு மருகா
வரப்பை யெட்டிக் குதித்துமே
லிடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே …… நின்றுசேலி னினம்வாழ்
வயற்பு றத்துப் புவிக்குள்நீள்
திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
வயத்த நித்தத் துவத்தனே …… செந்தில்மேவு குகனே.
இத்திருப்புகழின் பொருளாவது – மலையை நிகர்த்துப் பருத்துள்ள இருபது புயங்களாலும், (மகுடத்தை) தாங்கியுள்ள பத்துத் தலைகளாலும், மிகுந்த கோபத்துடன் (இராவணன்) போர் புரிய, அவனுடன் மலைபோல் கொதித்து எழுந்துபோர் புரிந்த அசுரர்கள் சிதைந்து பதைபதைக்குமாறு அடித்து, எல்லோரையைும் வெட்டியழித்த திருமாலின் அவதாரமாகிய ஸ்ரீராமர், அன்பு மிகவும் கொண்டுள்ள திருமருகரே!
வயலின் வரப்பின்மீது தாவிக் குதித்து மேல் பகுதியில் வட்டமாகவுள்ள நிலப்பரப்பின் மீது வளமையாகவுள்ள முத்துக்களைக் குவித்து விளையாடுகின்ற மீன் கூட்டங்கள் வாழ்கின்ற வயற்புறங்களைக் கொண்ட, பூதலத்தில் புகழால் நீண்ட திருத்தணியில் சிறப்புடன் வாழ்கின்ற வெற்றியாளரே! என்றும் உள்ளவரே! திருச்செந்தூரில் வாழுகின்ற குகப் பெருமானே! மகளிர் நட்பைத் தவிர்த்து எனக்கு அருள் புரிவீர் – என்பதாகும்.
இந்தத் திருப்புகழில்
பொரப்பொ ருப்பிற் கதித்தபோ
ரரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்தமா …… லன்புகூரு மருகா
என்ற வரிகளில் இராவண வதத்தைப் பற்றி அருணகிரி சுவாமிகள் கூறுகின்றார். இராவணன் ‘பிறன்மனை நயத்தல்’ என்ற பெரும்பிழை செய்தான். அதனால் குலத்தோடும் பிற நலத்தோடும் மாய்ந்து ஒழிந்தான்.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரில் பேதையாரு இல். (திருக்குறள்)
பத்தினியிருக்க, அவளைப் புறக்கணித்து, மற்றொருவன் பத்தினியை விரும்பி அவள்பால் ஏக்கமுற்று நிற்பவனே மூடர்கள் கூட்டத்திற்குத் தலைவன் என்பது இக்குறளின் வழி பெறும் செய்தியாகும். இதனைக் கும்பகர்ணன் தன் தமயனை நோக்கி அழகாக இடித்து அறவுரைப் பகர்ந்தான்.
நன்னக ரழிந்ததென நாணினை நயத்தால்
உன்னுயி ரெனத்தகைய தேவியர்கள் உன்மேல்
இன்னகை தரத்தர ஒருத்தன் மனையுற்றாள்
பொன்னடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம்.
மாரீசனும் இராவணனை நோக்கிப் பின்வருமாறு யுரைக்கின்றான்.
நாரங் கொண்டார் நாடுகவர்ந்தார் நடையல்லா
வாரங் கொண்டார் மற்றொருவர்க்காய் மனைவாழும்
தாரங் கொண்டார் என்றிவர் தம்மைத் தருமந்தான்
ஈருங் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவரையா?
ஆனால் இராவணன் இதனைச் செவிமடுக்கவில்லை. அதனால் ஸ்ரீராமன் கணைகளால் இறந்தான். ‘பொருப்பில் கதித்த போர் அரக்கர்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் வரிகளில் – மலைபோல் கொதித்து எழுந்து போர் புரியும் அசுரர்கள் அனைவரும், சிதைந்து பதை பதைக்குமாறு அடித்து, எல்லோரையும் வெட்டி ஒழித்த ஸ்ரீராமர் எனப் பாடல் வரிகள் கூறுகின்றன. இவ்வாறு இராமன் போர் புரிந்த அந்தப் போர்த்திறத்தை நாளைக் காண்போம்.
திருப்புகழ் கதைகள்: ராமன் புரிந்த வெம்போர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.