மனைவியை விட்டு விட்டு புண்ணியம் தேட சென்ற கணவன்!

ஆன்மிக கட்டுரைகள்

vishnu
vishnu
vishnu

வாரணாசியில் கிரிகலா என்ற ஸ்ரீ விஷ்ணு பக்தன் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த யாத்திரை போக வேண்டுமென்று மனைவியிடம் சொன்னான். சுகலா என்பவள் அவன் மனைவி தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள்.

வழியில் எத்தனையோ இடையூறுகள் ஏற்படுமென்று அஞ்சிய கிரிகலா அவளிடம் சொல்லாமலே யாத்திரைக்குப் புறப்பட்டு விட்டான். கணவனிடம் மிக்க அன்பு கொண்ட சுகலா உணவு, உறக்கம் என்பதை விட்டுத் தரையில் கிடந்து உறங்கத் தொடங்கினாள்.

அவளது உறவினர்கள் அவளிடம் “உன் கணவன் ஸ்ரீ விஷ்ணு கோவில்கள் தீர்த்த யாத்திரைக்குத்தானே போயிருக்கிறார். நீ ஏன் இப்படி மனத்தைக் குழப்பிக் கொண்டு, உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்?’ என்று கூறினர்.

அவர்கள் கூறியதை ஏற்காத மனைவி சுகலா என்னிடம் சொல்லாமல் போனதே என்னை ஒதுக்கி வைத்தது போலத் தான். ஆகவே நான் இந்த விரதங்களை அனுஷ்டிப்பது நியாயம்தான் என்று வாதாடினாள்.

அப்போது ஒருமுறை இந்திரன் பணியாளன் ஒருவன் வந்து, “அம்மா! உன் கணவன் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லை. போனவனை நினைத்து அவதிப்பட்டு உன் இளமையை ஏன் பாழாக்கிக் கொள்கிறாய்?

எங்கள் எஜமானர் உங்களை மணந்து கொள்ளத் தயாராக இருக்கிறார் என்று கூறியவுடன், ‘உங்கள் எஜமானர் யார்?’ என, இந்திரன்! என்று அவன் விடை கூறியதும், ‘உன் எஜமானனை இங்கு வரச் சொல்’ என்றாள்.

முழு அலங்காரங்களுடன் இந்திரன் அங்கு வந்தான். இந்திரனை நன்றாகக் கடிந்து கொண்டு, இப்படிப்பட்ட பாவச் செயல்களில் தேவேந்திரன் இறங்கக் கூடாது’ என்று ஏசி அனுப்பி விட்டாள்.

இந்த நிலையில் தன் தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு கிரிகலா வீடு திரும்பத் தயாரானான். அப்போது ஸ்ரீமன் நாராயணன் கோவிலில் ஒரு அசரீரி பின்வருமாறு கூறிற்று: ‘கிரிகலா, இத்தனை தீர்த்தங்களில் நீ குளித்தும் கடுகளவு புண்ணியமும் சேரவில்லை. அதனால் உன் முன்னோர்கள் இன்றும் நரகத்தில் தான் அழுந்தி உள்ளனர் என்று கூற, கிரிகலா நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டான்.

அசரீரி, ‘உன்னையே நம்பி இருக்கும் உன் மனைவியை அழைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செல்லாமல், நீ மட்டும் போனதால் ஒரு பயனும் இல்லை. உடனே அவளைச் சென்று அடைவாயாக!’ என்று கூறவே விரைவாக வீடு திரும்பிய கிரிகலா மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்தான்.

அப்போது அங்கே வந்த இந்திரன் கிரிகலாவைப் பார்த்து, கிரிகலா… நீ இப்படியொரு மனைவியை அடைய நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் மனத்தைக் கலைக்க நான் எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை.

ஆகவே உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்க, கிரிகலாவும் அவன் மனைவியும் “நாங்கள் பரந்தாமன் மீதான பக்தி மற்றும் நேர்மையான வழியிலிருந்து என்றும் விலகாமல் இருக்க வேண்டும் எனவும், நாங்கள் வாழ்கின்ற இந்த இடம் நாராயண (நாரி) தீர்த்தம் என்ற பெயருடன் புண்ணிய ஸ்தலமாக விளங்க வேண்டும்” என்றும் கேட்டனர். இந்திரனும் அக மகிழ்ந்து அவ்வாறே கொடுத்தான்

மனைவியை விட்டு விட்டு புண்ணியம் தேட சென்ற கணவன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply