திருப்புகழ் கதைகள்: எலி செய்த புண்ணியம்!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 100
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தண்டை அணி – திருச்செந்தூர் (தொடர்ச்சி)

சதங்கை திருவடியிலும், இடையிலும் அணியும் பொன்னும் மணியும் சேர்ந்த ஆபரணம். முருகவேள் அணிந்திருக்கும் சதங்கை நான்கு வேதங்களின் கீதங்களை ஒலிக்கும். இதனை அருணகிரியார்

மறைசதுர் விதந்தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று பெறுவேனோ
-என ‘அனைவரு’ எனத் தொடங்கும் திருப்புகழில் பாடுவார்.

கழல் என்பது வீரர்கள் பாதத்தில் அணியும் சிறந்த அணிகலமாகும். எந்தைக் கந்தவேளுடையத் திருவடியில் விளங்கும் வீரக்கழலின் இனிய ஒலியைக் கேட்க இனிய யாழில் வல்லவளாகிய வாணிதேவி வந்து காத்திருப்பாள்.

மதுரவாணி உற்ற கழலோனே (எதிரிலாத) திருப்புகழ்.

வீரர்களும், கற்புடைய மாதர்களும் அணியும் ஒரு நல்ல அணிகலன் சிலம்பு ஆகும். கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக விளைந்த விளைவு உலகறிந்தது. கற்புடைய மாதர் பாதத்தில் தண்டை சிலம்பு முதலிய ஆபரணங்களை அணிவதன் காரணம் யாதெனின் அவ்வாபரணங்களின் ஒலியைக் கேட்டு ஆடவர் விலகி நிற்கும் பொருட்டாகும். இங்கே முருகவேள் திருவடியில் விளங்கும் சிலம்பு ஞானமயமானது. அது பரவிந்து எனப்படும். எப்போதும் அடியார் அல்லல்கள் அகல இது இனிய நாதத்தைத் தரும்.

இனியநாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய். (கமலமாதுட)
திருப்புகழ்.

எங்கினும் வளர்ந்து —

சூரபன்மனுக்கு வேற்பெருமான் விசுவரூபம் காட்டி யருளியபோது எல்லாம் தன்னுள் அடங்க எங்குமாய் நின்றனர்.

முருகவேள் திருப்பெருவடிவம் (விஸ்வரூபம்)

சூரபன்மனது துணைவர்களும் சேனைகளும் அழிந்தனர். சூரபன்மன் மலையாகவும், கடலாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், இருளாகவும், தானவராகவும், வானவராகவும் இவ்வண்ணம் பல்வேறு வடிவங்களைத் தாங்கிப் பெரும்போர் புரிந்தனன். கந்தவேள் அவ்வடிவங்களை எல்லாம் கணைகளினால் அழித்தனர். தன் மாய வடிவங்கள் மாய, சூரபன்மன் சிறிது தளர்வெய்தினன். தளர்வுற்ற பொழுது ஞானத்தைப் போதிக்கவேண்டும். தனஞ்சயன் தளர்ந்தபோது கண்ணன் கீதையை உபதேசித்தனரன்றோ? அளவற்ற தவஞ்செய்த சூரபன்மனுக்குத் தனது திருப்பெரு வடிவத்தைக் காட்டியருள எம்பெருமான் திருவுளங் கொண்டனர்.

கூறிமற்று இனைய தன்மை
குரைகடல் உலகம் திக்கு
மாறுஇலாப் புவனம் அண்டம்
வானவர் உயிர்கள் யாவும்
ஆறுமா முகத்து வள்ளல்
மேனியில் அமைந்தது, அன்றி
வேறுஇலை என்ன, ஆங்கோர்
வியன்பெரு வடிவம் கொண்டான்.

உள்ளடியில் எல்லா மலைகளும், திருவடியின் முற்பாகத்தில் கடல்கள் யாவும், திருவடியின் விரல்களில் இடியும், நட்சத்திரங்களும், கிரகங்களும்; அழகிய பரடுகளில் வருணனும் குபேரனும் நிருதியும் இராக்கதரும் அடங்கினார்கள்.

கணைக்காலில் முனிவர்களும், தெய்வமணிகளும்; முழந்தாளில் வித்யாதரர் முதலியோரும்; தொடையில் இந்திரனும், இந்திரகுமாரன் சயந்தனும்; தொடை மூலத்தில் இயமனும், காலனும்; அரையின் முற்பக்கத்தில் அசுரர்களும்; விலாப்பக்கத்தில் தேவர்கள் யாவரும் அடங்கினார்கள்.

மூலாதாரத்தில் நாகர்களும்; கோசத்தின் நுனியில் அமிர்தமும்; உந்தியில் உயிர்களும்; மார்பில் எல்லாக் கலைகளும்; முப்புரி நூலில் ஞானமும்; நுனி மயிரில் அண்டங்களும், உள்ளங்கையில் சகல போகப் பொருள்களும்; தோள்களில் திருமாலும் பிரமனும் அடங்கினார்கள். கைவிரல்களில் தெய்வப் பெண்களும்; கண்டத்தில் நாதமும் அக்கினியும், வாயில் வேதங்களும்; பல்லில் எழுத்துக்களும்; நாவில் ஆகமங்களும்; இதழில் ஏழுகோடி மந்திரங்களும்; நாசியில் வாயுவும் அடங்கினார்கள்.

திருக்கண்களில் சந்திரனும் சூரியனும்; செவியில் திசைகளில் உள்ள நூறு உருத்திரர்களும்; நெற்றியில் குடிலையும் (ஓங்காரம்); சென்னியில் சிவபெருமானும் அடங்கினார்கள்.

இதனை அடுத்து இடம்பெறும் புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூர மாவலிபால் மூவடி கேட்டு, திருவிக்ர மவடிவங் கொண்டு ஈரடியால் மூவுலகங்களையும் திருமால் அளந்தனர். அவர் இத் திருப்பெரு வடிவத்தை நோக்கி, தான் கொண்ட பெருவடிவம் முருகவேள் சூரபத்மனுக்குக் காட்டிய திருப்பெருவடிவத்தில் ஒரு சிறு அணுபோல் அடங்கியிருப்பதைக் கண்டு அற்புதமும் அன்புங் கொண்டனர். – என அருணகிரியார் பாடுகிறார்.

vamanar 1
vamanar 1

வாமன அவதாரம்

ஆவணி திருவோணம் வாமன ஜெயந்தியாக வைணவர்களால் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் வாமன அவதாரம் ஐந்தாவது அவதாரமாகும். இந்த அவதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது. வாமனன் என்றால் குள்ள வடிவினன் என்பது பொருள். வாமன அவதாரத்தில் அந்தணச் சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தைப் பிடித்தும் அருளுகிறார் பகவான் விஷ்ணு. மகாபலி சக்கரவர்த்தியை ரட்சிக்க அவரின் புகழை உலகறியச்செய்ய வாமனனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.

மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் ஆளுவதற்காக யாகம் செய்தார். அதைப்பார்த்து தேவர்கள் பயந்தனர். விஷ்ணுவிடம் வேண்டினர். தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு மஹாவிஷ்ணு அதிதி காஷ்யபர் தம்பதியின் மகனாக வாமனனாக அவதரித்தார். மகாபலி நடத்திய யாகத்திற்கு வந்த வாமனன் மூன்றடி நிலத்தினை தானமாகக் கேட்டான். சுக்ராசாரியார் வந்திருப்பது மஹாவிழ்ணு; அவனுக்கு தானம் அளிக்காதே எனத் தடுத்தார். அப்போது மகாபலி,

எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்,
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!
.

(கம்பராமாயணம், பாலகாண்டம், வேள்விப்படலம்)

அப்போது மகாபலியின் கமண்டலத்தி இருந்து நீர்விழாமல் ஒரு வண்டாய் மாறி சுக்கிரன் தடுத்தார். அப்போது

குறியவன் கையில் நீர் விழாமல், குண்டிகை
மறிபட, வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்,
செறிவது நீக்கிட, சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.

(கம்பராமாயணம், பாலகாண்டம், வேள்விப்படலம்)

மகாபலி தானம் வழங்கியபின் இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை மகாபலிச் சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.

எலி செய்த புண்ணியம்

சிவன் கோயில் ஒன்றில் விளக்கு ஒன்று அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரித்தது. மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் கேட்டதை வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் மகா விஷ்ணுவிடம் கூறினார். மகாபலியின் புகழுடன் பல யுகங்களுக்கும் நிலைத்திருக்குமாறு செய்ய மகாவிஷ்ணு முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவர் அவதாரம் எடுத்து வந்தார்.

பூதகியின் கதை

மஹாபலிக்கு ரத்னமாலா என்ற ஒரு மகள் இருந்தாள். மகாவிஷ்ணு வாமனராக உருக்கொண்டு மகாபலியின் அவைக்குவர வாமனரைக்கண்ட ரத்னமாலாவிற்கு வாமனனை அணைத்து, பாலூட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. வாமனன் திரிவிக்ரமனாக மாறி, மஹாபலியை பாதாளத்திற்குத் தள்ளிய போது இவன் எனக்கு மகனாகப் பிறந்தால் அவனுக்கு விஷம் கொடுத்து கொல்வேன் என அண்ணுகிறாள். அவளுடைய இரண்டு எண்ணமும் அவள் கர்ம காரணப்படி அவள் அடுத்து பூதகியாகப் பிறக்கிறாள். பூதகி. தன் முற்பிறவி எண்ணப்படி அவள் கிருஷ்ணருக்கு பாலூட்டவும் விஷம் தொடுக்கவும் முற்பட்டு இறக்கின்றாள்.

திருப்புகழ் கதைகள்: எலி செய்த புண்ணியம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply