திருப்புகழ் கதைகள்: கொங்கைப் பணை!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 90
கொங்கைப் பணையில் – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளிய ஐம்பத்தியிரண்டாவது திருப்புகழான இப்பாடல் கொங்கைப் பணை எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழ் ஆகும். இத்திருப்புகழில் அருணகிரியார் – முருகா, பொதுமகளிருடன் சேராமல், சுக நிலை பெற்று உய்ய, திருவடி தீட்சை அருள்வாய் – என வேண்டுகிறார். இனிப் பாடலைக் காணலாம்

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
கொண்டற் குழலிற் …… கொடிதான
கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
கொஞ்சுக் கிளியுற் …… றுறவான
சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
சந்திப் பவரைச் …… சருவாதே
சந்தப் படியுற் றென்றற் றலையிற்
சந்தப் பதம்வைத் …… தருள்வாயே
அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் …… கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் …… றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் …… பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் …… பெருமாளே
.

இத்திருப்புகழின் பொருளாவது – திருச்செந்தூரில் அமைக்கப்பட்டுள்ள பாசறையில் உள்ள சேனைகளை விட்டு நீங்கி, இடையே நின்ற கடலைக் கடந்து விரைந்து சென்று வீரமாமகேந்திரபுரிக்குத் தூதாகச் சென்று, அங்குள்ள அசுரர் அஞ்சப் போர்செய்து, அவர்களிடம் தோல்வி உறாமல் சிவந்த கதிருடைய சூரியனைப்போல் விளங்கி மீண்டும் கடலைக் கடந்து வந்த வீரவாகு தேவருடைய வழிபடு மூர்த்தமாய் விளங்குபவரே..

திருவுள்ளத்தில் கனிவுகொண்டு அழகிய சோலைச் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே, பெருமையின் மிக்கவரே, மகளிருடன் இணங்காமல் பேரின்ப நிலைபெற்று உய்ய, அடியேனுடைய தலைமீது அழகிய திருவடியை வைத்து அருள்புரிவீர் – என்பதாகும்.

இத்திருப்புகழில் வரும் அங்கப்படை விட்டு என்ற சொற்களில் வீரபாகு சூரபத்மனிடம் தூது சென்ற வரலாறு கூறப்படுகிறது. திருச்செந்தூரில் திருவேல் இறைவன் எழுந்தருளி, அரச தருமத்தின் படி சூரபன்மன்பால் ஒரு தூது அனுப்பி, தேவரைச் சிறை விடுமாறு அறிவுரைப் பகரவேண்டும். அவன் அச்சொற்களைக் கேட்டுத் திருந்தவில்லையானால் பின்னர்த் தண்டிப்போம் என்று கருதினார். அக்கருத்தினை மாலயனாதி வானவர்பால் உரைத்தருளினார்.

பிரமதேவர் முருகக் கடவுளைத் தொழுது, “எங்களை ஆளவந்த இளம் பூரணரே, வாயுதேவனைக் காட்டிலும் பேராற்றல் படைத்த சூரபன்மன் வாழும் வீரமகேந்திரபுரிக்குச் சென்று திரும்புதல் முடியாது. நாங்கள் அனைவரும் சூரன்பால் பணிவிடைப் புரிபவர்கள். அஞ்சா நெஞ்சுடன் அவன் எதிர்நின்று அறிவுதர பகரும் ஆற்றல் எமக்கு இல்லை. இதோ இங்கு இருக்கும் வீரபாகுத்தேவர் ஒருவரே தூதுசென்று திரும்பவல்லவராவார்” என்றனர்.

மெல்என உலவைக் கோனும் வீரமா மகேந்திரத்தின்
செல்லரிது எனக்கும் அற்றே செய்பணி நெறியால் அன்றி
ஒல்லையில் அங்கண் ஏகி ஒன்னலர்க் கடந்து மீள
வல்லவன் இளைய வீரவாகுவே ஆகும்
என்றான்.

ஆறுமுகப் பெருமான் அதுகேட்டு அது நன்று என்று “அமரர்களைச் சிறைவிடுமாறு சூரபன்மன்பால் சென்று அறிவுரைப் பகர்ந்து வருக” என்று வீரவாகுதேவரைப் பணிந்தருளினார். வெற்றிவேற் பெருமான்பால் விடைபெற்ற வீரவாகு தேவர் இரு தோளும் ஒரு வாளும் உடையவராய்ப் புறப்பட்டுக் கடல் கடந்து பேருருவுடன் செல்வாராயினார். இடையில் இலங்கையைக் காவல் புரிந்த வீரசிங்கனையும் அதிவீரனையும் அங்குள்ள சேனைகளையும் அழித்து வீரமகேந்திரம் புகுந்தனர்.

soorapadman - 2

சிறைச்சாலையில் ஆற்றுவாரும் தேற்றுவாரும் இன்றித் தவித்துக் கிடந்த இந்திரன் புதல்வனாகிய, சயந்தனைத் தேற்றி, சூரபன்மன் வீற்றிருந்த அரசவை புகுந்து, முருகவேள் கருணையால் அங்கு வந்த மணித் தவிசின் மீது வீற்றிருந்து, சூரபன்மனை நோக்கி, அமரர்களைச் சிறைவிடுமாறு நல்லுரைகளும், முருகவேளின் முழுமுதல் தன்மைகளும் கூறியருளினார்.

அதுகேட்டு சூரன் திருந்தினானில்லை. தன்னுடன் போர் புரியவந்த அசுரர்களையும், சூரபன்மனுடைய கடைசி மகன் வச்சிரவாகுவையும், பிறரையும் கொன்று, அங்குள்ள வேரத்தைப் பிடுங்கி நகரை அழித்துவிட்டு மீண்டுங் கடலைக் கடந்து செந்தில்மா நகரஞ் சேர்ந்து கந்தநாயகனை வணங்கினார், “மூடர்கள் திருந்தார்” என மொழிந்தார். இதனை எட்டு வரிகளில் இங்கு அருணகிரியார் கூறியருளினார்.

வீரபாகு யார்? அவரது தோற்றம் எப்படி ஏற்பட்டது? நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: கொங்கைப் பணை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply