-எதிராஜன் சீனிவாசன்
ஹனுமன், ராம லக்ஷ்மணர்களின் மயக்கம் தெளிவிக்க, சஞ்சீவனி மூலிகை இருந்த பர்வதத்தைக் கொணரும்போது, அதிலிருந்து பெயர்ந்து விழுந்த சிறு துண்டுதான் இந்தப் பர்வதம் என்று ஒரு கதை; அப்பர்வதத்தின் உச்சியில் சுயம்புவாக ஒரு திருமேனி தோன்றியதாகவும், அத்திருமேனியின்மீது பசுக்கள் தானாகவே பல் சுரந்ததைக் கண்ணுற்ற இடையர்கள் அவ்விஷயத்தை அரசனிடம் சொன்னதாகவும், அதனால் அங்கு ஒரு கோவிலை நாயக்க மன்னன் எழுப்பியதாகவும் ஒரு கிளைக்கதை!
நாமக்கல் மாவட்டத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலையில், வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்ட, தலைமலையின் உச்சியிலுள்ள சஞ்சீவிராயப் பெருமாள் கோவிலுக்குத்தான் மேற்சொன்ன கதைகள்! சரித்திர ரீதியான தொடர்புகள் என்னவென்று சரியாகத் தெரியவில்லை, கோவிலில் கல்வெட்டுகளும் ஏதுமில்லை, ஆனால் வழியில் இரண்டொரு இடங்களில் தெலுங்கி லிபிக் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் காணப்படுவதால், நாயக்கர்களுக்கும் இக்கோவிலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்பதை அனுமானிக்க முடிகிறது.
திருச்சியிலிருந்து, நாமக்கல் செல்லும் சாலையில், தொட்டியத்தில் வலதுபுறம் திரும்பி, நாலைந்து கிலோமீட்டர் சென்றால், இந்த மலையின் அடிவாரப் பகுதி வருகிறது. ஒரு சிறு அளவிலான ஹனுமன் கோவிலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் மலைக்குச் செல்லும் பாதை துவங்குகிறது. மலைக்குச் சரியான பாதையோ, படிக்கட்டு வசதிகளோ இல்லை, கரடுமுரடான பாறைகளும், புதர்களும் மண்டிய பாதையில் செங்குத்தான மலையேற்றம், சுமார் 4 கிமீ தொலைவிற்கு.
சுமார் மூன்று கிமீ தொலைவிற்குப் பிறகு சிறிய சமதளமான பகுதியில் ஒரு ஐயனார் கோவிலும், நாயக்கர் காலத்தைய பாணியிலான மண்டபமும், குளம் போன்றதான அமைப்பில் ஒரு சுனையும் காணப்படுகிறது. சுனையில் நீர் வருடம் முழுவதும் வற்றாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்; நேர்த்தி செலுத்த முடி காணிக்கை கொடுப்போர் இப்பகுதியில் முடி காணிக்கை செலுத்திவிட்டு, சுனையில் பம்ப்செட் மூலம் எடுக்கப்படும் தண்ணீரில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்கிறனர். இச்சுனையிலிருந்து அரைக் கிலோமீட்டருக்கு மறுபடியும் கரடுமுரடான மலையேற்றம், பின்பு சுமார் சிறிய, பாதத்தின் பக்கவாட்டை மட்டுமே வைக்கக் கூடியதான சுமார் 200 படிக்கட்டுகள் ஏறினால், மலை முகட்டில் முதலில் ஒரு சிறிய ஹனுமன் சன்னிதி, அதற்குள் பன்னிருவரில் 8 ஆழ்வார்கள் எழுந்தருளியுள்ளனர்.
அதற்குமேல் 30 படிக்கட்டுகள் ஏறினால், சஞ்சீவிராயர் மற்றும் பத்மாவதித் தாயார்! பெருமாளுக்கும், தாயாருக்கும் தனித் தனி சன்னிதிகள்! தீர்த்தப் பிரசாதமாக இளநீர் தருகின்றனர்!
வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் மட்டுமே கோவில் திறந்திருக்கும், மற்ற நாட்களில் கிடையாது! புரட்டாசி சனிக்கிழமைகளில் மலையில் கால் வைக்க இயலாத அளவு கூட்டம் வரும் என்கின்றனர்!
இந்தக் கோவிலில்தான் நேர்த்திக்காகக் கோவிலின் வெளிப்புற கொடுங்கையில் எவ்விதப் பிடிமானமும் இன்றி சுற்றிவரும் வழக்கம்! 2018 இல் நடைபெற்ற ஒரு அனர்த்த நிகழ்விற்குப் பிறகு, அவ்வழக்கம் தடைசெய்யப்பட்டு, கம்பி வேலி போடப்பட்டிருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் வழியிலுள்ள முட்டிப் பாறை என்ற செங்குத்தான பாறைப் பாதையில், நேர்த்திக்காக முழங்கால்களாலேயே ஏறும் வழக்கமும் உண்டு என்று கேள்விப்பட்டோம், கடுமையான நேர்த்திகளுக்குப் பெயர் பெற்ற கோவில் போலும்!
மேலேயும், மேலிருந்தும் காணும் இயற்கையழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது, படங்களில் காணலாம்! மேககூட்டங்களுக்குள்ளேயே நடந்து செல்லும் வாழ்நாள் அனுபவம் இங்கே கிடைக்கப்பெற்றது!
இக்கோவிலுக்கு வருவோர் கவனிக்க வேண்டியது, முதலில் உணவும் தண்ணீரும் மிக அவசியமாகக் கொண்டு வர வேண்டும், இலகுவாக சுமக்கக் கூடிய அளவில் இருத்தல் நலம், இலைகளில் பொதியாகக் கட்டிக் கொணர்ந்தால், உணவு உண்டபிறகு இலைகளை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடலாம்!
சுனைக்கு மேலே கோவிலுக்குச் செல்லும் வழியில் ஏராளமான வானரசேனைகள் உண்டு! அவை சாதாரணமாக தொந்தரவு செய்வதில்லை, ஆனால் வெளியில் தெரியும்படியாகத் தின்பண்டங்கள் கொண்டு வந்தாலோ, அல்லது சாப்பிட்டுக் கொண்டே வந்தாலோ நிச்சயம் ஆபத்து!
வெள்ளி, சனிக் கிழமைகளில் மட்டுமே கோவில் என்றாலும், சனிக் கிழமைகளில் வருவது நல்லது, மேலே ஏறுவோரும், இறங்குவோரும் போக வர இருப்பதால் பயமில்லாமல் செல்லலாம், அதிகபட்சக் கூட்டம் என்றால், புரட்டாசி மாசம் நீங்கலாக இருபது அல்லது முப்பது பேர் மட்டுமே!
கோவில் அர்ச்சகர்களின் அலைபேசி இலக்கங்கள் :
+91 98436 58044 / 97905 74284 / 99436 59130
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.