திருப்புகழ் கதைகள்: பிரமனை சிறைபிடித்த கதை!

ஆன்மிக கட்டுரைகள்

e0af8d-e0aeaae0aebfe0aeb0e0aeae.jpg" style="display: block; margin: 1em auto">

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 31
கருவடைந்து (திருப்பரங்குன்றம்)திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அடுத்த மூன்று பத்திகள் பின் வருமாறு…

இரவி இந்த்ரன், வெற்றிக் குரங்கின்
     அரசர் என்றும், ஒப்பற்ற உந்தி
     இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்,…..நெடுநீலன்

எரியது என்றும், ருத்ரன் சிறந்த
     அநுமன் என்றும், ஒப்பற்ற அண்டர்
     எவரும் இந்த வர்க்கத்தில் வந்து …… புனம் மேவ,

அரிய தன் படைக்கர்த்தர் என்று,
     அசுரர் தம் கிளைக் கட்டை வென்ற,
     அரிமுகுந்தன் மெச்சு உற்ற பண்பின் ……மருகோனே!

இந்த மூன்று பத்திகளில் வானரங்களின் கதையைக் கூறுகிறார் அருணகிரியார். அதாவது – சூரியனும் இந்திரனும் வெற்றி பொருந்திய வானரங்களுக்கு அரசராக சுக்ரீவன்,வாலியாகவும், துழாய் முடியோனது உந்தியின்கண் உதித்த, சமானமற்ற, இறைவனாகிய பிரமன் கரடிமுகச் சேனைகளுக்குத் தலைவனாக சாம்பனாகவும், அக்கினி பகவான் ஆற்றலில் சிறந்த நீலனாகவும், உருத்திர மூர்த்தி அறிவு, கல்வி, ஞானம், பக்தி, பணிவு, வைராக்கியம், பிரமசரியம் முதலியவைகளால் சிறப்பு வாய்ந்த அனுமனாகவும், இணையற்ற தேவர்கள் யாவரும் இத்தகைய வானர வர்க்கத்தில் உதித்து முன்னதாக வனத்தில் வந்து இருக்க, தான் இராமனாக அவதரித்து வந்து அவ்வானர வீரர்களைத் தனக்கு அரிய சேனைகளாகவும் சேனைத் தலைவர்களாகவும் கொண்டு இராவணாதி அசுர குலங்களின் கூட்டத்தை அழித்து வெற்றி பெற்ற அரிமுகுந்தராகிய இராகவன் மெச்சுவதற்குத் தகுந்த சிறந்த குணங்களையுடைய மருகனாக எழுந்தருளினவரே என முருகப் பெருமானை அவர் பாடுகின்றார்.

கம்பராமாயணத்தில், தேவர்கள் வானரர்களாகப் பிறந்த வரலாறு பாலகாண்டத்தில், திருஅவதாரப் படலத்தில், பின்வரும் பாடல்களில் கூறப்படுகிறது.

வான் உளார் அனைவரும்வானரங்கள் ஆய்க்,
கானினும், வரையினும்,கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின்சென்று! ‘என,
ஆனனம் மலர்ந்தனன்,அருளின் ஆழியான்.

என்னை ஆள் உடைய ஐயன்கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கிப்பிதாமகன் பேசு கின்றான்.
‘முன்னர் ஏய் எண்கின் வேந்தன் யான்‘என மொழிகின்றான், மற்று,
‘அன்ன ஆறு எவரும் நீர் போய்அவதரித்திடுமின்! ‘என்றான்.

தரு உடைக் கடவுள் வேந்தன்சாற்றுவான் ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்னவாலியும் மகனும் ‘என்ன,
இரவி, மற்று, ‘எனது கூறு அங்குஅவற்கு இளையவன் ‘என்று
அரியும் மற்று, ‘எனது கூறு நீலன்‘என்று அறைந்திட்டானால்.

வாயு மற்று, ‘எனது கூறு மாருதி‘எனலும், மற்றோர்
‘காயும் மற்கடங்கள் ஆகிக்காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம் ‘என்றார்;புயல் வண்ணன் ஆதி
வானோர்
மேயினர் என்னில், இந்தமேதினிக்கு அவதி உண்டோ?

அருள் தரு கமலக் கண்ணன்அருள் முறை, அலர் உேளானும்
இருள் தவிர் குலிசத்தானும், அமரரும்,இனையர் ஆகி
மருள் தரு வனத்தின், மண்ணின்வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் எவரும் தத்தம்உறை இடம் சென்று புக்கார்.

இவ்வாறு தேவர்கள் வானரர்களாகப் பிறந்த கதையை அருணகிரியார் இப்பாடலில் அழகாகத் தந்துள்ளார். அவர் கூற்றின் படி

பிரமதேவர் – ஜாம்பவான் என்ற கரடி வேந்தன்
இந்திரன்வாலியாகப்பிறந்தான்
சூரியன் சுக்ரீவனைத் தோன்றவைத்தான்.
அக்கினி பகவான் நீலனாகப் பிறந்தான்.
வாயு அமிசத்தோடு ருத்ர அமிசமும் கலந்து அனுமார் பிறந்தார்.
இந்திரன் தம்பி உபேந்திரன் அங்கதனாகவும்,
விஸ்வகர்மா நளனாகவும்,
அசுவினி தேவர்கள் மைந்தன் துவிதர்களாகவும்
வருணன் சுஷேணனாகவும்,

இப்படி தேவர்கள், கந்தருவர்கள் வித்தியாதரர்கள் முதலியோர் இராவணவதத்தின் பொருட்டு மலைபோன்ற சரீரத்தோடும், அளவிட முடியாத ஆற்றலோடும், ஆயிரக்கணக்கான வானர வீரர்களாக மலைப் பிரதேசங்களில் அவதரித்தார்கள்.

இந்தப் பாடலின் கடைசிப் பத்தி

அயனையும் புடைத்துச் சினந்து,
     உலகமும் படைத்து, பரிந்து
     அருள் பரங்கிரிக்குள் சிறந்த …… பெருமாளே. என்ற வரிகளாகும். இவ்வரிகளில் பிரமனைச் சிறை பிடித்த வரலாறு கூறப்படுகிறது.

திருப்புகழ் கதைகள்: பிரமனை சிறைபிடித்த கதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply