ராக சிகிச்சை!

ஆன்மிக கட்டுரைகள்

நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களிலிருந்து ராகங்களும் உருவாயின. ஸப்தஸ்வரங்களும் ஓம்கார நாதத்தில் அடங்கியவை. இவ்விதமாக சங்கீதம் என்ற ஒரு பிரபஞ்சமே சிருஷ்டிக்கப்படுகிறது!

சங்கீத நாதமும் மந்த்ர ஒலிக்கு ஈடான சக்தி உடையது. நம் பெரியோர்கள் மந்த்ர ஒலிகளையே இனிமையான சங்கீத ஒலிகளாக மாற்றி நமக்கு அளித்துள்ளனர். இவை சாஹித்ய (கீர்த்தனை) வடிவில் அமைந்துள்ளன.

சமூகத்துக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய கருத்துகளை, பல ஸாஹித்யங்கள் மூலம் இனிமையான சங்கீதத்தோடு இணைத்து பல ராகங்களில் உலகுக்கு வழங்கிய பெருமை நமது கர்னாடக சங்கீதத்துக்கு உண்டு.

நம் சங்கீதம் சாமவேதத்திலிருந்து தோன்றியது. அதற்கு முன் சங்கீதத்தை நமக்கு அளிக்கும் ஒரு நூலும் கிடையாது. ரிக்வேத சூக்தங்கள் பலவற்றைப் பொறுக்கி எடுத்து, கானம் செய்வதற்கென்றே அவற்றைத் தொகுத்து நமக்கு சங்கீதம் மூலம் வழங்குவது ஸாமவேதம். ஷட்ஜம, ரிஷப, காந்தார, மத்யம, பஞ்சம என்ற ஸ்வரங்களை ஆதாரமாகக் கொண்டு அநேக ரிக்குகளை கானம் செய்யப்படும் சாமாக்கள் பல சாம வேதத்தில் உள்ளன. ஆக சாமவேதம், சங்கீதத்துடன் இணைந்த வேதமாகும். அதில் முக்கியமானது பிருஹத் சாமாவாகும்.

ராகத்தின் தோற்றத்தை நமக்கு முதன் முதலில் எடுத்துக் காட்டியவர் 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மாதங்கர். அவருடைய நூலான “பிருஹத்தேசி”யில் இதை அவர் கூறுகிறார். சங்கீதத்தின் ஜீவநாடியான ஸப்த ஸ்வரங்கள் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியதாக தியாகப்பிரும்மம் கூறுகிறார்.

ரிக்வேதம் கவிதை (சூக்தங்கள்) வடிவில் பல பாக்களினால் அமைக்கப்பட்டிருப்பதினால், அவற்றை பதம் பதமாகப் பிரித்து, அவற்றை முன்னும் பின்னுமாக வரிசைப்படுத்தி, மாற்றி மாற்றிக் கூறி வேதத்தை நமக்கு அளிக்கும் நுணுக்கமான அக்கலையை “அஷ்ட வேதவிக்ருதி” என்பர்.

அவை ஜடா, மாலா, சிகா, ரோகா, த்வஜா, தண்டா, ரதா, கன என எட்டு வித வழிமுறைகளாம்.

கர்நாடக சங்கீத ஆரம்பப் பாடமான ஸரளி வரிசை, ஜண்டை வரிசை, ஸாதக வரிசை முதலிய ஸ்வர வரிசைப்பாடங்கள், ஸப்த ஸ்வரங்களைப் பிரித்து, இணைத்து கையாளப்படுபவைகளாகும்.

இவை ரிக்வேத, பத, கிரம, ஜடை முதலியவற்றை ஒத்திருப்பதைக் காணலாம்.

ஆக, நம் சங்கீதம் வேதங்களுடன் அவற்றின் ஸ்வரூபங்களுடன் இணைந்து தோன்றியதாக ஏற்கத்தக்கனவாகும்!

உலகம், ஒலி அலைகளாலும், மின்சார அலைகளாலும் முழுவதும் சூழப்பட்டுள்ளது. நம் பூத உடலிலும், மன ஓட்டத்திலும் இவை பெரும் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. மின்சார அலைகளால் செல்போஃன், கம்ப்யூட்டர்கள், டி.வி., ரேடியோ முதலியவை இயங்குகின்றன. நாத, ஒலி அலைகளுக்கும் இவற்றில் ஒரு பெரும் பங்கு உண்டு.

இந்த அடிப்படையில் ஒரு புதிய சிகிச்சை முறை சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நாத சிகிச்சை, ராக சிகிச்சை என குறிப்பிடப்படுகிறது. இது ஒரு ஆராய்ச்சி நிலையிலேயே இன்று உள்ளது எனலாம்.

புதிய ராகங்களை உருவாக்க “ராக ஆராய்ச்சி மையம்’ ஒன்று, சிறந்த சங்கீத வித்வான்களால் செயல்பட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் ராக சிகிச்சை முறை கையாளப்பட்டு வருகிறது.

எல்லாத் துறைகளுக்கும் ஒரு ஆராய்ச்சி மையம், தேவையும் அவசியமுமாகும். முன்னேற்றத்துக்கு ஆராய்ச்சி ஒரு பெரும் துணையல்லவா?

சங்கீதத்தின் மூலம் செடிகளை நன்றாக வளரச் செய்யலாம் என்றும், வாழைக்காயை பழுக்க வைக்கலாமென்றும், பசுவை அதிக பால் கொடுக்கச் செய்யலாமென்றும் இன்று ஆராய்ச்சி உலகம் கூறுகிறது.

ஒரு தாயின் வயிற்றில் வளரும் கரு தன் அன்னையின் குரலைக் கேட்கிறது என இன்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுபத்திரையின் வயிற்றில் கருவாய் இருந்த அபிமன்யு தன் தாய் யுத்த தந்திரங்களைக் கேட்டு வந்ததை அவனும் கேட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

ஒரு சிசுவை நீலாம்பரி ராக தாலாட்டு பாடி ஒரு தாய் தூங்க வைப்பதை நாம் இன்றும் காணலாம்!

வடநாட்டில் தான்சேன் என்ற ஒரு சங்கீத சாம்ராட் அக்பர் அவையில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். 1506 இல் மார்க்கண்ட பாண்டே என்ற ஒரு பிராமண கவியின் ஒரே குமாரன் இவர். ராம் தனு என இவரை அழைத்தனர். பிருந்தாவனத்தில் வாழ்ந்த ஸ்வாமி ஹரிதாஸரின் சிஷ்யர். ஸூர்தாஸின் நெருங்கிய நண்பர் இவர்.

புதிய ராகங்கள் சிலவற்றை இவர் கண்டுபிடித்தார். தீபக் என்ற ராகத்தைப் பாடுவதில் சிறந்த வல்லமை இவருக்கு உண்டு. ஒரு சமயம் அக்பர் சபையில் தீபக் ராகத்தைப்பாடி, விளக்குகளை எரியச் செய்து காட்டினார். அதனால் இவர் உடலில் சூடு அதிகரித்துத் தவித்தார். உடனே ஒரு கிணற்றடிக்குச் சென்று தண்ணீரில் குளித்தார். சூடு தணிந்தது.

அங்கு தண்ணீர் எடுக்க வந்த இரண்டு பெண்கள் அவருடன் பேசும்போது தீபக் பாடி உடல் அதிக அனல் கொண்டுவிட்டது. இதற்கு மாற்று ராகம் மல்ஹார்தான், எனக் கூறக் கேட்ட அவர்கள், உடனே மல்ஹார் ராகத்தைப் பாட ஆரம்பித்தனர். அவருடைய சூடும் தணிந்தது. மனமும் குளிர்ந்தது. கனமான மழையும் உடனே பொழிந்தது!

“சரஸ்வதி வீணை’ இவருடைய பெண்ணான சரஸ்வதியின் பெயரால் உருவாக்கப்பட்டதாகக் கூறுவர்! “ருத்ர வீணையும்’ இவர் உருவாக்கியது என்பர்.

தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. ராமநாதபுரத்தில் ஒரு சமயம் வறட்சி கண்டபோது, சங்கீதமும்மூர்த்திகளில் ஒருவரான முத்து ஸ்வாமி தீக்ஷிதர் “அமிருதவர்ஷிணி’ ராகத்தைப் பாடி கன மழையை வரவழைத்ததாக இன்றும் நாம் கேட்டு வருகிறோம்.

திருவையாறு தியாகப் பிரம்மம் ஒரு சமயம் திருப்பதி சென்று திரும்பும்போது, ஆந்திராவிலுள்ள புத்தூர் கிராமத்தை அடைந்தார். அங்கு ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கி நினைவின்றிக் கிடந்ததைக் கண்டார். அவர் மனம் இரங்கியது. அச்சிறுவனின் பெற்றோர்கள் அவனைக் காப்பாற்றும்படி தியாகராஜ சுவாமியிடம் வேண்டிக் கொள்ளவே, அவரும் மனம் கனிந்து “பிலஹரி’ ராகத்தில் ஒரு கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். அக்கீர்த்தனை முடிவடைந்ததும் சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். இதனால் “பிலஹரி’ ராகம் உயிரைக் காப்பாற்றும் ராகம் என உறுதி பெற்றுவிட்டது!

சில சங்கீத ஆரம்ப பாட ஸ்ரவ ஜதி திட்டத்தைக் கையாண்டு திக்குவாயைக் கூட சரி செய்துவிடலாம் எனக் கூறப்படுகிறது. ஆராய்ச்சியும் நடைபெறுகிறது!

பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்பாள், கணபதி முதலியவர்களை உருவகப்படுத்தி நாம் வணங்குவது போல, நவக்கிரகங்கள், நக்ஷத்திரங்கள் ஆகியவற்றையும் இம்மாதிரி உருவங்களில் வடித்து வணங்குகிறோம்.

இவ்விதம் ராகங்களையும் ராக தேவதைகளாக உருவம் அமைத்து வணங்கும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது. இவற்றுக்குத் தியான சுலோகங்கள் உள்ளன. அதன்படி உருவங்கள் அமைக்கப்படும்.

அக்பர் சபையில் புண்டரீக விட்டலர் என்ற ஒரு கர்நாடக பிராமணர் சங்கீதத் துறை ஆஸ்தான வித்துவானாக இருந்தார். இவர் அறுபதுக்கும் மேலான சம்ஸ்கிருத சுலோகங்கள் மூலம், ராகங்கள், ராகினிகள் பற்றியும் அவர்களுடைய நிறம், ஆடை அவர்கள் தரிக்கும் புஷ்பங்கள் அவர்களின் மனோநிலை பற்றியும் எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னர் நாரதர், தன்னுடைய “பஞ்சம ஸாரஸம்ஹிதை’ என்ற நூலில் இன்னும் பல விவரங்களை அளித்துள்ளார். இந்த நூல் கிடைப்பது அரிது.

இந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு ராகமாலா ஓவியங்கள் பின்னர் உருவாயின. இவை ராஜஸ்தான், பீஜப்பூர், மூர்ஷிதாபாத் முதலிய ஊர்களில் காணப்படுகின்றன. ஒரு ராகத்தின் நாதாத்ம ரூபமே, அதனுடைய ஒலி வடிவம் பெறுகிறது.

சங்கீதத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஈடுபாடு அதிகம். ராகங்களும் ஆண் ராகம், பெண் ராகம் என பிரித்துக் கூறப்படுகிறது.

கர்நாடக சங்கீதம் ஒரு தனித்தன்மை கொண்டது. ராகங்களின் பெயர்களையும், அவற்றின் லக்ஷணங்களையும் கூறும் ஒரு பெரும் பொக்கிஷம் இது. இவற்றை நமக்கு அளித்தவர்கள் பெரும் சங்கீத மேதைகள்.

நாத சிகிச்சையில் சங்கீதம் மருந்தாகப் பயன்படுகிறது. தேனைப்போல இனிக்கும் ஒரு மருந்து இது!

பல ஆண்டுகளாக சங்கீதம் ஏதோ ஒரு பொழுது போக்குக்காக ஏற்பட்டது என்ற எண்ணம் அகன்று, அது சிகிச்சைத் துறையிலும் பெரும்பங்கு வகிக்கிறது என்ற புதிய உணர்ச்சி நம்மிடையே இன்று வளர்ந்து வருகிறது. நம்மனதில் நவரஸங்களை உருவாக்க என அமைந்த ராகங்கள் பல உள்ளன. இதில் நாம் அதிக கவனம் செலுத்தினால், அவற்றைக் காண இயலும். இதற்கு ஆராய்ச்சி அவசியமாகும்.

அடாணா ராகம் நம்மிடையே ஒரு பெரும் உணர்ச்சி உத்வேகத்தை எழுப்ப வல்லது. தியாகராஜரின் “பாலகனகமய’, “அனுபவ குணாம்புதி’ இதற்கு உதாரணமாகும். ஆனந்த பைரவி, உசேனி, ரீதிகௌளை, கரஹரப்ரியா போன்ற ராகங்கள் மனதை வசீகரிக்கும் ராகங்களாகும். முகாரி, நாதநாமக்ரியா சோகத்தை விளைவிக்கும்.

அசாவேரி பாம்புகளை அடக்கும் என்றும், ஜெயஜெயந்தி பாரிசவாயுவை குணமாக்குமென்றும் கூறப்படுகிறது.

கர்நாடக சங்கீதத்திலும் எந்த எந்த ராகங்களை எந்த எந்த நேரத்தில் பாடவேண்டுமென்ற நியதி, வழிமுறை அக்கால பிரபல சங்கீத வித்வான்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

உதய ராகம் என்று கூறப்படும் பூபாள ராகம், விடியற்காலையில் பாடப்பட வேண்டும். சில நாதஸ்வர வித்வான்கள் இன்றும் இதை இவ்விதமே கையாளுகின்றனர்.

மலையமாருதம், சக்ரவாஹம் மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் பாடவேண்டியவைகளாகும். சில ராகங்களைப் பகலில் எந்த சமயத்திலும் பாடலாம் என வகுத்துள்ளனர். இரவில் பாடவேண்டிய ராகங்கள் எவை என்ற ஒரு நியதியும் உள்ளது.

ஆனந்த பைரவி, ஸ்ரீரஞ்சனி, கமாஸ்,காபி, நாயகி, ஸஹானா, நீலாம்பரி முதலிய ராகங்களைத் தொடர்ந்து கேட்டு வந்தால் மனதை வாட்டும் பல இன்னல்களின் பளு வெகுவாகக் குறையும்!

குரலின் இனிமையால் பல ராகங்கள் நன்கு பிரகாசிக்கும். மனதிலும், உள்ளத்திலும் அவை ஆழ்ந்து பற்றிக் கொள்ளும். கவலையைத் தீர்ப்பது சங்கீதக்கலையே என்பது மிகவும் பொருத்தமானது.

ஏழு ஸ்வரங்களை அடித்தளமாக வைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான மிக அழகான ராகங்களை அவற்றிலிருந்து உருவாக்கி உலகுக்கு அளித்த ஒரே நாடு நம் பாரதநாடு! இதுபோன்ற வெவ்வேறு ராக வகைகள் உலகில் வேறு எங்கும் கிடையாது.

– கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply