மண்டூகர் என்ற முனிவர் குடகனாற்றங் கரையில் தவம் செய்த போது, தாளாசுரன் என்ற அசுரன் அவரது தவத்துக்குப் பங்கம் விளைவிக்க முயன்றபோது மதுரை கள்ளழகர் அசுரனை அழித்ததைத் தொடர்ந்து, தாடிக்கொம்பில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க முனிவர் வேண்டினார் என்பது ஐதீகம்.
கடந்த 500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகரப் பேரரசர் ஆட்சிப் பொறுப்பில் இப் பகுதி இருந்தபோது மன்னர் அச்சுதேவராயரால் ஸ்ரீசௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் கட்டப்பட்டது. மதுரை கள்ளழகருக்கு நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் இங்கும் நடத்தப்படுகின்றன.
கார்த்திகை லட்ச தீபம் என்பது பெயரளவு இல்லாமல் எண்ணிக்கையில் லட்சத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் ஆண்டுதோறும் இங்கு ஏற்றப்பட்டு வருவது தனிச் சிறப்பு.
இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இக் கோயிலில் ரூ.25 லட்சம் மதிப்பில் மரத்தேர் செய்யும் பணி ஒரு மாதத்துக்கு முன் தொடங்கப்பட்டது.
தேரின் கீழ்மட்டம் பதிமூன்றே முக்கால் அடியாகவும் அலங்கார கூடுடன் சேர்த்து மொத்தம் 29 அடி உயரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் தேர் பேரூர் மட்டம், சித்தூர் மட்டம், 8 கோணங்களைக் கொண்ட நாராசனம் குதிரை அமைப்பு, தேவஸ்தானம், சிம்மஸ்தானம் என 5 நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக இலுப்பை மரம், வெண்தேக்கு மரம் 6 டன் இரும்புத் தேர் சக்கரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சக்கரங்களை திருச்சி பாரத மிகு மின் நிலையம் உருவாக்கித் தந்துள்ளது.
மரத்தேர் உருவாக்கும் பணியைப் பூர்த்தி செய்ய 6 மாதங்கள் தேவை. இருந்த போதிலும், வரும் ஆடிபூரம் பௌர்ணமி பெருந்திருவிழாவில் தேரோட்டம் நடத்திட வேண்டும் என்ற நோக்கில் 10 கலைஞர்களைக் கொண்டு இரவு பகலாக தேர் செய்யும் பணி பெரம்பலூரைச் சேர்ந்த ஸ்தபதி மதிவாணன் தலைமையில் நடந்து வருகிறது.
முதல் கட்டமாக வரும் ஆனி மாதம் 25 ஆம் தேதி வெள்ளோட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இத் திருக்கோயிலில் சௌந்தரராஜப் பெருமாளுக்கு வெள்ளியினால் ஆன தேர் உள்ளது.
366;">கோயில் தகவல்:
தாடிக்கொம்பு திண்டுக்கல்லிருந்து சுமார் 9 மைல் தொலைவில் உள்ளது. இங்கு தங்கும் வசதிகள் இல்லை. திண்டுக்கல்லிருந்து தங்கியிருந்து இத்தலம் வந்து செல்லலாம்.
மூலவர் : சௌந்தரராஜப் பெருமாள்
தாயார் : சௌந்தரவல்லி
தீர்த்தம் : தாழை தீர்த்தம்
தற்போதைய பெயர் : தாடிக்கொம்பு (தாழை வானம்)
திருமாலிருஞ்சோலை நம்பி அழகர் பெருமாளே (மதுரை கள்ளழகர்) இங்கு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியிருக்கிறார்.மண்டூக முனிவர் முக்தி பெற்ற தலம். பெருமாள் தாளாசுரனை வதம் செய்த ஸ்தலம்.சித்திரைத் திருவிழாவின் போது மதுரை மீனாட்சி அம்மனுக்காக அழகர் ஆற்றில் இறங்குவது போல் திண்டுக்கல் அன்னை அபிராமிக்காக இந்த சௌந்தரராஜப் பெருமாள் சித்திரா பௌர்ணமியன்று குடகனாற்றில் இறங்கி திண்டுக்கல் சென்று ஆறாம் நாள் சந்நிதி வந்தடைகி்றார்.