682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
விளக்கம்
பதினான்காம் பாசுரம் வரை, உறங்கிக் கிடப்பவளை எழுப்பியும் பதிலளிக்காது இருந்த தோழியை முன்னிட்டுக் கூறிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் அவளை எழுப்பும் பெண்களுடன் அவள் உரையாடுவதைக் கூறி, கண்ணனைப் பாட எழுந்து வருவது ஒன்றே உன் பணி என்று தோழிக்குக் கட்டளையிடுகிறார்.
இளமையுடன் திகழும் கிளியைப் போன்றவளே! இது என்னே! பெண்பிள்ளைகளாகிய நாங்கள் இவ்வளவு பேர் திரண்டு வந்தும், இன்னும் நீ உறங்குகிறாயே! என்று அவளைத் துயில் எழுப்ப வந்தவர்கள் கேட்கிறார்கள். அதற்கு வீட்டின் உள்ளே உறங்குபவள், பெண்களே! இதோ புறப்பட்டு வருகிறேன். இவ்வாறு சில்லென்று காதில் ஒலி பாயுமளவு அழைக்க வேண்டுமா? அப்படி அழைக்காதீர்கள் என்று பதில் சொன்னாள்.
அதற்கு இந்தப் பெண்கள், அடடே! நீ சமர்த்தான வார்த்தைகளைப் பேசுவதில் வல்லவள் என்பது நாங்கள் அறியாததா? உன் கடும் சொற்களையும், உன் வாயையும் நாங்கள் வெகுநாட்களாகவே அறிவோமே! என்றார்கள்.
அதற்கு அந்தப் பெண், இப்படி என்னைச் சொல்லும் நீங்கள்தான் பேச்சில் வல்லமை உள்ளவர்கள்… நான் இல்லை. இருந்தாலும், நீங்கள் சொல்லுகிறபடியே நான்தான் பேச்சில் வல்லமை உள்ளவளாக இருக்கட்டுமே! இப்போது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று விரக்தியில் கேட்பவளைப் போல் கேட்டாள்.
அட.. பெண்ணே! நீ செய்ய வேண்டுவது வேறு ஒன்றும் இல்லை! விரைந்து எழுந்து வா. தனியே உனக்கு மட்டும் ஏதேனும் அதிசயம் நடக்குமா என்ன? அல்லது நீ என்ன ஏதாவது மாயச் செயலைக் கொண்டவளா? என்று இந்தப் பெண்கள் கேட்டார்கள். அதற்கு அவள், சரி! சரி! வரவேண்டியவர்கள் எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று பதிலுக்குக் கேட்டாள். இவர்களும், ஓ! அனைவரும் வந்துவிட்டனரே… நீ வேண்டுமானால் எழுந்துவந்து எங்களை எண்ணிப் பார்த்துக் கொள்ளேன்! என்று கூறினார்கள்.
அதற்கு அவள், சரி. இருக்கட்டும். ஆனால், என்னை எதற்காக எழுந்து வரச் சொல்கிறீர்கள் என்றாள் அலுப்புடன்! உடனே இந்தப் பெண்கள், குவலயாபீடம் என்னும் வலிய யானையைக் கொன்று ஒழித்தவனும், பகைவர்களான கம்சன் உள்ளிட்டவர்களின் மிடுக்கினை மாய்த்தவனுமான கண்ணபிரானைப் பாடுவதற்காக நீ வரவேண்டும்… அவ்வளவுதான்! என்று பதில் அளித்தார்கள். இதன் மூலம் சோம்பலை அறுத்து சுகம் காண கண்ணனைப் பாட வா என்று தோழியை அழைக்கிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்