நாராயணீய தினம்… குருவாயூரில் கோலாகலம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

narayana patathri guruvayur krishnan

வெள்ளிக்கிழமை இன்று, விருச்சிகம் (கார்த்திகை)28ஆம் நாள் நாராயணீய தினம் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

நாராயண பட்டத்ரி, ஸ்ரீ நாராயணீயத்தை நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ம் நாள், நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கேரளாவில் மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்த நாராயண பட்டத்ரி யால் இயற்றப்பட்ட ஸ்லோகங்கள் தான்
“ஸ்ரீ நாராயணீயம்” என்ற அற்புதமான, அழகான காவியம்…

பட்டத்ரி, தனது தந்தையிடத்திலும், “அச்சுத பிஷாரடி” என்ற குருவிடத்திலும் தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம் போன்ற சாஸ்திரங்களைக் கற்றார்.

அச்சுத பிஷாரடி வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதைக் கண்ட பட்டத்ரி, குரு தக்ஷிணையாக, அந்த வாத ரோகத்தை முன்வந்து ஏற்றுக்கொண்டார்.

உடனே, வாத ரோகம், பட்டத்ரியைப் பீடித்து அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை.

துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர் கவிஞர், பக்தர், ஜோசியர். அவர், பட்டத்ரியை குருவாயூருக்குச் சென்று “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார்.

அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.

உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார்.

அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”. மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன.

ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பாராம். குருவாயூரப்பன் “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவாராம்.

ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் “ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்திதான் எனக்குக் கதி, என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்” என்ற வரிகளை நோக்கும்பொழுது, நாராயண பட்டத்ரி தன் ரோகத்தை மட்டுமின்றி பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும் போக்கவே பிரார்த்தித்திருக்கிறார் என்று தெரிகிறது.

“என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்து, தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விசாலமான எண்ணம் தெரிய வருகிறது.

இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் ஊகித்துக்கொள்ள வேண்டும். கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி. நாராயணீயத்தில் பக்தியே பிரதானம். ஆகையால், இதைப் படிக்கும்போது பகவத் தியானமே சிறந்த வழி, பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வருகிறது.

இதை எழுதி முடித்ததும், அவருடைய வாதரோகம் நீங்கிவிட்டது. ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய சரிதத்தைக் கூறுவதாலும், நாராயண பட்டத்ரி என்பவர் இயற்றியதாலும் , நாராயணீயம் என்று பெயர் பெற்றது.

நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரக பீடை நீங்கும். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்யம் முதலியன கிடைக்கும்….

தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நமது, பிரச்னைகள் , இன்னல்கள், மன அழுத்தம் குறைந்து , நிம்மதியையும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என ஆண்மீக அன்பர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீ காஞ்சிமகா சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீமந்நாராயணீயத்தைப் பாராயணம் செய்யும்படி அருளாசி வழங்குவது வழக்கம்.

இந்த நாராயணீயம், ஸ்லோகத்தின் கடைசி வரியில் பாராயண பலனாக நமக்கு உடல் நலத்தையும் நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் கண்ட பரவசத்தில் பட்டத்திரி அறுதியிட்டு முடித்துள்ளார்.

ஆகையினால் பட்டத்ரி நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ந்தேதியான நாளை நாராயணீயம் பாராயணம் செய்து, நம் அனைத்துவிதமான ரோகங்களும் நிவர்த்தியாக குருவாயூரப்பனின் அருளை பெறலாம்.

நாளை நாராயணைய தினத்தை ஒட்டி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பல்வேறு வழிபாடுகள் நடத்தி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அவல் நீ வேத்தியம் பால்பாயாசம் நிவேத்யம் உட்பட பல்வேறு பதார்த்தங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

தற்போது குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் சபரிமலை சீசனை ஒட்டி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர் தினத்தை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை குருவாயூர் தேவஸ்தானம் செய்து வருகிறது

Leave a Reply