682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
‘மேல் மருவத்தூர் அம்மா’ என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தமது 82ஆவது வயதில் இன்று சக்தியிடம் சித்தியடைந்தார்.
தமிழகத்தில் பெண்கள் பலருக்கு ஆன்மிக உணர்வை ஊட்டி, ‘ஓம் சக்தி பராசக்தி’ எனும் மந்திரச் சொல்லை அளித்து, ஆன்மிகத்தின் பால் ஈடுபடச் செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு கோயில் அமைத்து, சித்தர் பீடத்தின் மூலம் ஆன்மிகத் தொண்டாற்றியவர். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்து நற்பணிகள் பல புரிந்தவர்.
அவர் அமைத்த ஆதிபராசக்தி கோயிலில், அன்னை சுயம்பு வடிவில் காட்சிதருகிறாள். ஆன்மிக ரீதியாக பெண்கள் தங்கள் பூஜை முறைகளில் ஒடுங்கி விடக் கூடாது என்பதற்காக, பெண்களே பெண் தெய்வமான ஆதிபராசக்திக்கு கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்வதை ஊக்குவித்தார். இந்தக் காட்சி இங்கே சிறப்பானதாக அமைந்தது. அதனால் தமிழகத்தின் பெண் பக்தர்கள் பலர் அவரது ஆன்மிக ஆற்றலால் இழுக்கப்பட்டனர். அவரை மேல்மருவத்தூர் சித்தர் என்றே அழைத்தனர். அவரது வழியைப் பின்பற்றி, தங்கள் பகுதிகளில், கிராமங்கள்தோறும் ஆதிபராசக்தி சித்தர் பீடங்களை நிறுவி தொடர்ச்சியான வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
சக்தி வழிபாட்டுக்கு சிறப்பான நவராத்திரியில், தங்கள் பகுதிகளில் சிறப்பு நவராத்திரி வழிபாடுகளை, பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நவராத்திரியின் நடுநாளில், பங்காரு அடிகளார் சித்தியடைந்த செய்தி, ஓம் சக்தி பக்தர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பங்காரு அடிகளாருக்கு லட்சுமி அம்பாள் என்ற மனைவியும் ஜி.பி அன்பழகன், ஜி.பி செந்தில் குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.