சிவத் தலமான நெல்லையப்பர் கோவிலில் உள்ளே நெல்லையப்பருக்கு அடுத்து சயனக் கோலத்தில் இருக்கும் நெல்லை கோவிந்தர் சந்நிதியில் கும்பாபிஷேகம்…
வைணவத் தலமான திருக்குறுக்குடி அழகியநம்பிராயர் திருக்கோயிலில் பெருமாளை அடுத்து கோயில் கொண்டிருக்கும் பக்கம் நின்றாரான மகேந்திரகிரிநாதர் சந்நிதியில் கும்பாபிஷேகம்…
ஸ்ரீ வைஷ்ணவ சைவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இன்று வைணவத் தலமான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் பெருமாள் சந்நிதியை அடுத்து அமைந்திருக்கும் மகேந்திரகிரி நாதர் சந்நிதியில், மீண்டும் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே! – என்ற ஆழ்வார் பாசுரப்படி, திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் ஸ்ரீ வைஷ்ணவ ஜீயர் சுவாமிகளின் திருமுன்னிலையில் ஸுந்தரபரிபூர்ணர் அருகில் மீண்டும் பிரதிஷ்டை ஆகியுள்ள பக்கம் நின்றாரான மஹேந்த்ரகிரிநாத பரமேஸ்வரரை அன்பர்கள் பலர் தரிசித்தனர்.
திருநெல்வேலியின் மையமாக விளங்கும் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் நெல்லையப்பருக்கு அருகில் சந்நிதி கொண்டுள்ள நெல்லை கோவிந்தருக்கு சிவாகமப்படியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. திருப்பணிகள் முடிந்த நிலையில்,8.6.2023. வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு மேல் 12 மணிக்குள் சைவ ஆகம விதிப்படி அவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நெல்லைவாழ் பக்தர்கள் பெருமளவில் வந்திருந்து நெல்லையப்பரையும் நெல்லைக் கோவிந்தரையும் அன்னை காந்தமதி அம்மையையும் தரிசித்து அருளைப் பெற்றார்கள்.