To Read in Indian languages…
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆற்றங்கரை தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை இன்று காலை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது இதில் பிரதான ஹோமத்தைத் தொடர்ந்து பிம்ப சுத்தி, ரக்ஷாபந்தனம், பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது நவநீத கிருஷ்ண ஸ்வாமி சந்நிதி விமானத்திற்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக வைபவத்தில் பெருந்திரளான நண்பர்கள் கலந்து கொண்டார்கள். மூலவராக வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கு அபிஷேகம், தீபாராதனை செய்விக்கப்பட்டது.
முன்னதாக கும்பாபிஷேக வைபவம் கடந்த மே மாதம் 25ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்கியது. ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த வைபவத்தில் ஆறு கால யாக பூஜைகளுடன் நான்கு வேத பாராயணம், யாகசாலை பூஜைகளுடன் மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.
கும்பாபிஷேக வைபவத்தை முன்னிட்டு, ஏழு நாட்களாக பாகவத சப்தாகம் என மே 25ஆம் தேதி தொடங்கி இன்று வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நவநீத கிருஷ்ண ஸ்வாமி சன்னிதி வசந்த மண்டபத்தில் மகாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமியின் சீடர் பிரம்மஸ்ரீ கதாதரன் மற்றும் பிரம்மஸ்ரீ ஸ்ரீதர் சர்மா ஆகியோரின் பாகவத உபன்யாசம் நடைபெற்றது
தினமும் மாலை கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு, ஆகியவற்றுடன் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை அனந்த பத்மநாபன் மற்றும் முத்துகிருஷ்ணன் தலைமையிலான விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.