சதுரகிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது….. :
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், இன்று புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதுரகிரிமலைப் பகுதியில் காட்டுத்தீ பரவியதால், பிரதோஷம் அன்று மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. காட்டுத்தீ அணைக்கப்பட்ட நிலையில் நேற்று பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.
இன்று, புரட்டாசி மாத பௌர்ணமி மற்றும் ஞாயிறு கிழமை விடுமுறை நாள் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிமலையில் குவிந்தனர்.
இன்று பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை, பக்தர்கள் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர்.
மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் போது, வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க வேண்டாம் என்று வனத்துறை ஊழியர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.