வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்

செய்திகள்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
இந்த ஜோதி தரிசனத்தைக் காண தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வடலூருக்கு வருவர்.

இதையொட்டி வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகமும் 140-ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவுக்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது.

அதன்படி புதன்கிழமை வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் கொடியேற்றமும், வியாழக்கிழமை தைப்பூச ஜோதி தரிசனமும், சனிக்கிழமை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனமும் நடைபெறவுள்ளது.

புதன்கிழமை காலை அகவற் பாராயணத்துடன் தருமச்சாலை, கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதி மற்றும் சத்தியஞானசபை முன் உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை 6, 10, பிற்பகல், 1, இரவு 7,10 மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி என ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை பகல் 12 முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாகிய மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருஅறை தரிசனம் நடைபெறும் என வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்தரங்கம்

தைப்பூச விழாவை ஒட்டி, வடலூர் தருமச்சாலை பிரசங்க மேடையில் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சீதாராமன் தலைமையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இதைத் தொடர்ந்து மாலையில் ஊரன் அடிகளார் தலைமையில் மற்றொரு சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெறுகிறது.
உள்ளூர் விடுமுறை

வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜோதி தரிசனத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையில் 500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply