
இல்லை
காமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;
கயவர்க்கு மேன்மை யில்லை;
கன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசார
கன்னியர்க் காணை யில்லை;
தாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவரு
சாதிகுலம்என்ப தில்லை;
தாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொரு
சார்பிலார்க் கிடம தில்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
புகழென்ப தொன்று மில்லை;
புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
புருடருக் கொன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத் திறைவனே
அன்புடைய அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இருளுக்கு ஒப்பான கழுத்தினையுடைய முதல்வனே!, அன்பு உடைய – அன்புள்ள,
அருமை தேவனே!, காம மயக்கம்
உடையவர்க்கு முறை தோன்றாது. பரத்தைக்கு வெட்கம் இராது, தாழ்ந்தவர்க்கு உயர்வு வராது, கன்னம் வைக்கும்
திருடருக்கு இருளில் அச்சம் தோன்றாது, நாம் எனும் மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும்
தேவையில்லை, கண்ணோட்டமுள்ளவர்க்குப் பகைவர் உண்டாகமாட்டார், ஓரிடத்தும் ஆதரவு அற்றவர்க்கு இடம் கிடையாது,
உலகத்தில் வறியோர்க்குக் கொடாதவர்களுக்கு நிறைந்த புகழ் எப்போதும் ஏற்படாது, இழிந்தவர்க்கு உண்மையிராது, கைப்பொருள் இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.
காமி முதலானோர்க்கு ஒவ்வொன்றில்லையாயினும்
வறியவர்க்கு எந்த நன்மையும் இல்லை.